“அந்தகன்” படத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவம் வித்தியாசமானது – பிரஷாந்த்

அந்தகன் படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து நடிகர் பிஷாந்த் கூறியத்ஹவது: இந்தப் படத்தின் வெற்றிக்கு படத்தில் நடித்த கார்த்திக் போன்ற  அனுபவமிக்க நட்சத்திரங்களும் மிக முக்கியமான காரணம். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய உற்சாகம் ஒட்டுமொத்த குழுவினருக்கும் உத்வேகத்தை அளித்தது.‌ சமுத்திரக்கனி, கே. எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் மறக்க முடியாதது. நான் ஏராளமான வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்கு கிடைத்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது. குறிப்பாக நான் இன்றும் மதிக்கும் இயக்குநரான கே. எஸ். ரவிக்குமார் , ஊர்வசி, யோகி பாபு இவர்களுடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சியை முழுதாக புரிந்து கொண்டு அந்த காட்சியை எப்படி மேம்படுத்தலாம் என திட்டமிட்டு, அதற்கு ஒத்திகை பார்த்து நடித்தோம். 60களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 70களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 80களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்பதனை உடன் பணியாற்றிய கலைஞர்களுடன் பேசி விசயங்களை கேட்டு நடித்தோம். குறிப்பாக நாகேஷ், பானுமதி அம்மா, நம்பியார் போன்றவர்களின் நடிப்பு எப்படி இருந்தது என்பதனை அவர்களுடன் அருகில் இருந்து பணியாற்றிய உதவியாளர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டேன். இதுபோன்ற அனுபவம் எனக்கு மீண்டும் ‘அந்தகன்’ படத்தில் கிடைத்தது. இதனால் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.******

தற்போது நம்மிடம் இல்லாத, இந்த படத்தில் நடித்த நடிகர் மனோபாலா உடன் நடித்த அனுபவமும் மறக்க முடியாது.‌ அவர் என்னுடைய தந்தையார் இயக்கிய அனைத்து படத்திலும் நடித்திருந்தார்.‌ என்னுடனும் பல படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய ஆசியும் ஒரு காரணம். நானும், சிம்ரனும் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் அந்தகனும் இடம் பிடித்திருக்கிறது. இதற்காக சிம்ரனுக்கு பிரத்யேகமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகும் என் வளர்ச்சியின் மீது அக்கறை காட்டி வரும் நடிகை பிரியா ஆனந்திற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து நட்சத்திரங்களும் இணைந்து நடித்தது தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்லலாம். அடுத்ததாக இயக்குநர். என் தந்தையாக இருந்தாலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் கதைக்கு என்ன தேவையோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றினர். படத்தை நிறைவு செய்த பிறகு விளம்பரப்படுத்துவதற்காக ப்ரோமோ பாடல் ஒன்றையும் தயார் செய்தோம். இதற்காக ஒத்துழைப்பு அளித்த ‘ராக் ஸ்டார்’ அனிருத், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பிரபுதேவா, சாண்டி மாஸ்டர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இந்தப் படத்தின் வெற்றி என் திரையுலக பயணத்தில் ஒரு தொடக்கம் தான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களின் அன்பை தொடர்ந்து சம்பாதிக்க வேண்டும்.‌ என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தேசிய விருதினை வென்றிருக்கும் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் தேசிய விருதை வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், ”அந்தகன் படத்தை மக்களிடம் நல்ல முறையில் சென்றடைய செய்த அனைத்து ஊடகத்தினருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு ஊடகத்திடமிருந்து வெளியான விமர்சனங்கள் மக்களை சென்றடைந்து படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில் சிறிய வேடத்திற்கு கூட திறமையான கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தோம்.‌ திரையரங்குகளில் மறைந்த நடிகர் மனோபாலாவின் வசனங்களுக்கும், வனிதா விஜயகுமார் பேசும் வசனங்களுக்கும் கைத்தட்டல் கிடைக்கிறது என்றால் அதற்கு அவர்களுடைய கடுமையான உழைப்பும் ஒரு காரணம். பிரியா ஆனந்த் நடிப்பு ரியலிஸ்டிக்காக இருந்தது.  அவருடைய அழகு – சிரிப்பு-  டயலாக் டெலிவரி- என  எல்லாம் சிறப்பாக இருந்தது.  இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த் நாயகனாக இருந்தாலும் அனைத்து கேரக்டருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்..  முதலில் இந்த திரைப்படத்தை ஜெயம் ராஜா இயக்குவதாக இருந்தது. அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம். இந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டோம். மூன்று மாதத்திற்கு பிறகு ஜெயம் ராஜாவிற்கு சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தப் படத்தை இயக்கி நிறைவு செய்த பிறகு இந்த படத்தில் பணியாற்றுகிறேன் என ஜெயம் ராஜா சொன்னார்.‌ நான் நன்றி என்று சொல்லிவிட்டு, உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள் என்றேன். அதன் பிறகு நான் இயக்க தீர்மானித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்க தொடங்கினோம். அப்போது சிம்ரனை தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் பேராதரவை வழங்கினார். அவர் மேடையில் தமிழில் பேசியதை மிகவும் ரசித்தேன்.  இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்- அவர் ஏற்கனவே பிரசாந்த் நடித்த ‘தமிழ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.‌ அவரிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய ஈடுபாடு, ஒத்துழைப்பு பாராட்டும்படி இருந்தது.  சமுத்திரக்கனி- தெலுங்கில் பரபரப்பாக நடித்துக் கொண்டு இருக்கும் முன்னணி நடிகர்.‌ நான் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் அவரை ஒரு காட்சியில் அரைகுறை உடையுடன் பாத்ரூமில் உட்கார சொன்னேன். எந்த தயக்கமும் இல்லாமல் அந்த காட்சியில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.  பிரசாந்த்- இந்தப் படத்தில் மட்டுமல்ல எந்த படத்திலும் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார். அவர் சொன்னதைத்தான் செய்வார். இவராக எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். அதேபோல் இந்தப் படத்தில் நான் என்ன சொன்னேனோ அதை மட்டுமே அவர் செய்தார். அவர் பியானோ வாசிப்பதாகட்டும், கண் தெரியாமல் நடிப்பதாகட்டும் என எல்லா காட்சியிலும். நேச்சுரலாக நடித்தார். இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி இல்லை, பாடல் காட்சி இல்லை, ஆனால் அந்த குறையை தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மறக்கடிக்க செய்திருந்தார்.‌ அவருடைய நடிப்பாற்றலால் இந்த படத்தை வெற்றி பெற செய்திருக்கிறார்.  படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ மேலும் இந்த திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட திரையரங்க அதிபர்களுக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.