இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜூம்மா மசூதியில் நேற்று பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் இருந்து இந்த முறை 5,920 இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு உள்ளார்கள். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஹஜ் பயணம் செல்வோருக்கு மானியம் அளித்துள்ளார். இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. வழக்கமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து சுமார் ஆயிரம் இளைஞர்கள் ஹஜ் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக நியமிக்கப்படுவார்கள். இந்த முறை சவுதி அரசு இதனை ரத்து செய்துள்ளது. சவுதியில் உள்ள இந்திய துதரக அதிகாரிகளும் இது குறித்து அந்நாட்டு அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்தியாவில் அமலில் இருந்ததால் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டுகொள்ளாமல் விட்டதால் ஏராளமான ஹஜ் பயணிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இதை தவிர்ப்பதற்காக மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.