“ராமம் ராகவம்” திரைப்பட விமர்சனம்

ப்ருத்வி போலவரவு தயாரிப்பில் தன்ராஜ் கொரனாளி இயக்கத்தில் சமுத்திரகனி, பிரமோதினி, தன்ராஜ் கொரனாளி, மோக்‌ஷா, சுனில், ஹரிஸ் உத்தமன், சத்யா, ஶ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ் ஆகியோரி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ராமம் ராகவம்”. மகன் தன்ராஜ் கொரனாளி மீது அதிக பாசத்தை வைத்திருக்கும் அப்பா சமுத்திரக்கனி பாசத்தை வெளிக்காட்டாமல் மகனை கண்டிப்புடன் வளர்க்கிறார். இதை உணராத மகன் தன்ராஜ்கொரனாளி அப்பா சமுத்திரகனியை ஒரு ஆள் மூலமாக கொலை செய்து அவரின் சொத்துக்களை அடைய முயற்சிக்கிறார். சொத்துக்காக தான்பெற்ற மகனே தன்னை கொலை செய்ய திட்டமிடுவதை தெரிந்து கொண்ட சமுத்திரகனி என்ன செய்கிறார்? என்பதுதான் கதை. அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரகனி மகனை கண்டிக்கும்போதும் பிறகு பாசத்துக்காக ஏங்கும்போதும் ஒரு தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். மகனாக நடித்திருக்கும் இயக்குநர் தன்ராஜ் கொரனாளி உச்சக்கட்ட காட்சியில் நடிப்பில் அமர்க்களப்படுத்திவிட்டார். மற்ற நடிகர்கள் அனைவரும் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக அம்மாவாக நடித்திருக்கும் பிரமோதினி கணவனுக்கும் மகனுக்கும் நடக்கும் பனிபோரில் கண்கலங்கி பரிதவிக்கும் காட்சிகளில் கைத்தட்ட வைக்கிறார். அழகில்லாவிட்டாலும் பணமிருந்தால் அழகான பெண்கள் காதலிப்பார்கள் என்ற கருத்தின் மையப்புள்ளியிலிருந்து திரைக்கதை துவக்கியிருக்கும் இயக்குநர் தன்ராஜ் கொரனாளி உச்சக்கட்ட காட்சியில் அனைவரின் விழிகளில் நீர் ததும்ப வைத்துவிட்டார். ஈடுயில்லாத தந்தையின் பாசத்திற்கு ஒர் எடுத்துக்காட்டுதான் “ராமம் ராகவம்”.