கமல் குமார் ,வைத்தீஸ்வரி, பிரணிதி சிவசங்கரன், கார்த்திக் விஜய், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி இயக்கித் தனது கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். அருண்மொழிச் சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சரவணன் மாதேஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
குடிகார அப்பா ,சிடுசிடுக்கும் அம்மா என்ற பெற்றோரின் பிள்ளைகளாக அண்ணன் சரவணனும் தங்கை துர்க்காவும் வாழ்கிறார்கள். ஒரு நாள் அந்த அண்ணன், தங்கை இருவரும் நடந்து செல்லும் போது முள் புதர் நடுவே சிக்கி ஆபத்தில் தவித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் பார்க்கிறாள் துர்கா.ஆட்டுக்குட்டியின் நிலையை எண்ணி எப்படியாவது அதைக் காப்பாற்ற வேண்டும் என்று தவிக்கிறாள்.தங்கைக்காக அதை மீட்கிறான் அண்ணன் சரவணன். பிறகு இருவரும் வீட்டுக்குக் கொண்டு வந்து அதை வளர்க்கிறார்கள். குறிப்பாக தங்கை துர்கா அந்த ஆட்டுக்குட்டி மேல் உயிராக இருக்கிறாள். புஜ்ஜி என்ற பெயர் வைத்து கொஞ்சி மகிழ்கிறாள். காலத்தின் பல்வேறு கண்ணாமூச்சி ஆட்டங்களுக்கு இடையே அந்த ஆட்டுக்குட்டியும் வளர்கிறது. வளர்ந்த ஆட்டுக்குட்டியைத் துர்காவின் குடிகாரத் தந்தை ஒரு நாள் விற்று விடுகிறார்.
அந்த ஆட்டுக்குட்டியைத் தேடி தங்கை துர்காவும் அண்ணன் சரவணனும் உதவிக்கு வரும் இன்னொரு பெண் தர்ஷினியும் தேடிச் செல்கிறார்கள். புஜ்ஜியைத் தேடிப் போகும் வழியில் அவர்கள் எதிர் கொள்ளும் சோதனைகளும் வேதனைகளும் துயர்மிகு சம்பவங்களும்தான் இந்தப் படம். அந்த ஆட்டுக்குட்டி கிடைத்ததா இல்லையா என்பதை நோக்கிய பயணமே படத்தின் கிளைமாக்ஸ்.
படத்தின் ஆரம்பக் காட்சியே ஒரு கசாப்புக் கடையில் தான் தொடங்குகிறது. மாமிச விரும்பியான சரவணன் கால் கிலோ கறி கிடைத்தால் போதும் என்று வாங்கச் செல்ல அங்கே அவனுக்கு ஒரு கிலோ கறி அன்பளிப்பாகக் கிடைக்கிறது. அபரிமித மகிழ்ச்சியோடு வீட்டுக்குச் செல்கிறான்.
அப்படிப்பட்ட மாமிசப் பிரியனான அண்ணன் சரவணன் ஒரு கட்டத்தில் அவனது தங்கை துர்கா ஆட்டுக்குட்டி மீது வைத்திருக்கும் அளவற்ற பிரியத்தைப் பார்த்து கறி சாப்பிடுவதையே விட்டு விடுகிறான். குடும்பத்தின் வறுமையின் விளைவால் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளும் பெற்றோர் மத்தியில் ஆட்டுக்குட்டி மீது அண்ணன், தங்கை இருவரும் பாசம் காட்டி அவர்களது உலகத்தில் வாழ்கிறார்கள்.
தந்தையால் விற்கப்பட்ட ஆட்டுக்குட்டி எங்கு சென்றது என்று தெரியாமல் துர்கா தவிக்க கூடவே சரவணன் அவளுடன் சென்று தேடும் படலம் தொடங்குகிறது. அவர்கள் பல ஊர்களுக்குப் பயணம் செல்கிறார்கள். பட்டணம் தொடங்கி பீடம் பள்ளி, ஐயம்பாளையம், பல்லடம் ,கண்ணம்பாளையம், அனுப்பட்டி என்று பயணம் செய்கிறார்கள்.
அந்த தேடல் பயணத்தில் அவர்கள் பல நல்ல மனிதர்களையும் கெட்ட மனிதர்களையும் சந்திக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் அது கசாப்பு கடைக்காரர் ஒருவரிடம் விற்கப்பட்டது அறிந்து அந்த ஆட்டுக்குட்டியைத் தங்களிடம் கொடுத்து விடுமாறு கெஞ்சி மன்றாடுகிறார்கள். கசாப்புக் கடைக்காரர் தான் பணம் கொடுத்து வாங்கியதாகவும் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால் கொடுத்து விடுவதாகவும் கூறுகிறார். அந்தத் தொகையைத் திரட்டுவதற்காகப் பல்வேறு இடங்களில் இந்த குழந்தைகள் போராடுகின்றன. சிறுகச் சிறுக எதிர்ப்படும் மனிதர்களிடமெல்லாம் நிதி உதவி கேட்டு பணம் சேர்த்துத் திரட்டிக் கொண்டு போனால் அந்த ஆட்டுக்குட்டி அதற்குள் கைமாறி ஊர் மாறிச் சென்று விடுகிறது. அதைத் தேடி பதற்றத்தோடு பயணம் செய்கிறார்கள். இறுதியில் அந்த உணர்ச்சிமிகு போராட்டம் முடிவுக்கு வருகிறது .
இப்படத்தில் ஆட்டுக்குட்டி மீது நேசம் வைத்துள்ள பாசக்காரப் பெண் பிள்ளையாக பிரணிதி நடித்துள்ளார். அந்தக் குழந்தை நட்சத்திரத்தின் தோற்றமும் உதட்டுச் சுழிப்பும் பட்டாம்பூச்சி போல் படபடக்கும் கண்களும் அந்தப் பாத்திரத்தை பார்ப்பவர் மனதில் பதிய வைக்கின்றன. உடன் செல்லும் அண்ணன் சரவணன் பாத்திரத்தில் நடித்துள்ள கார்த்திக் விஜய் அச்சு அசலாக அந்தப் பாத்திரத்தில் பொருந்தியுள்ளார். அவர்களுக்கு உதவுவதற்காக உடன் பயணம் செய்கிற தர்ஷினி பாத்திரத்தில் வரும் லாவண்யா கண்மணியும் இயல்பாக நடித்துள்ளார். எப்போதும் நல்லதே நினைத்து நல்லதே செய்யும் வாலிபன் சிவா பாத்திரத்தில் நடித்துள்ள கமல்குமார் கவனம் ஈர்க்கிறார். ஒரு கட்டத்தில் பஸ் நிறுத்தத்தில் களைப்பில் தூங்கிவிடும் அந்த மூன்று குழந்தைகளையும் தீய நோக்கத்தில் போலீஸ் ஜிப்பில் ஏற்றிச் செல்லும் இன்ஸ்பெக்டரை எதிர்கொள்ளும் கான்ஸ்டபிளாக பிரபா பாத்திரத்தில் வரும் வைதீஸ்வரி நடிப்பில் தன் கடமையைச் சரியாக செய்துள்ளார்.
படத்தில் நகைச்சுவைப் பகுதியை ஈடு செய்யும் விதத்தில் துர்கா – சரவணன் ஆகியோரின் தாய் சித்ராவாக வரும் நக்கலைட் ஸ் மீனா கொங்கு தமிழ் பேசி, குடிகாரக் கணவனை ஏசி, சண்டை போட்டு அந்த பாத்திரத்தை இயல்பான நடிப்பால் உயிர் கொடுத்ததுடன் சிரிக்கவும் வைத்துள்ளார்.அதிகம் பேசாமல் உளறல் மொழி பேசி குடிகாரக் கணவனாக வரும் நடிகரும் படம் பார்ப்பவர்களிடம் பதிகிறார். கசாப்புக் கடை பாயாக வரும் வரதராஜனும் தோற்றத்திலும் நடிப்பிலும் தன் பங்கை விட்டு வைக்கவில்லை.
தொலைந்து போன ஆட்டுக்குட்டி புஜ்ஜியைத் தேடும் பயணத்தில் அந்தக் குழந்தைகள் சந்திக்கும் கதா பாத்திரங்கள், சம்பவங்கள், செல்லும் ஊர்கள் என்று கதை சிறகடித்துப் பறக்கிறது. அதே வேளை சில கிளைக் கதைகளும் பிரிந்து விரிந்து செல்கின்றன. அப்போது ஆட்டுக்குட்டியைத் தேடிச் செல்லும் பயணம் ஒரு திரில்லர் அனுபவமாக மாறுகிறது. கதை திசை மாறிவிட்டதோ என்று நினைத்தால்.பிறகு விட்ட இடத்தில் வந்து சேர்ந்து விடுகிறது கதை.
இந்தப் பயணத்தின் இடையே சிரிக்க வைக்க, கலகலப்பூட்ட, நெகிழ வைக்க, கலங்க வைக்க ,திகிலூட்ட என்று பல்வேறு காட்சிகள் வருகின்றன. இயல்பான கதை ஓட்டத்திற்கு ஏற்றபடி ஒளிப்பதிவு செய்துள்ளார் அருண் மொழிச் சோழன். கதையின் பயணத்தின் வேகத்தில் படத்தொகுப்பு செய்துள்ளார் எடிட்டர் சரவணன் மாதேஸ்வரன்.
படத்தின் பெரிய பலமாக கார்த்திக் ராஜாவின் இசை அமைந்துள்ளது.புதிய படக் குழுவினரின் ஒரு படத்தினை அவர் தனது நேர்த்தியான பின்னணி இசையால் பல மடங்கு உயரம் கூட்டிக் காட்டி உள்ளார்.பாடல்களும் பக்கபலமாக அமைந்துள்ளன. குறிப்பாக கு.கார்த்திக் வரிகளில் அமைந்த ‘புஜ்ஜி புஜ்ஜி என் செல்லத் தங்கம்’ பாடலின் இசையும் படமாக்கி உள்ள விதமும் இதம். பட உருவாக்கத்தில் பட்ஜெட்டின் சிக்கனம் தெரிகிறது.எனவே தொழில்நுட்ப ரீதியாகப் படம் ஈர்க்காமல் கதை சொல்லும் படமாக உருவாகி உள்ளது.படம் பார்க்கும்போது அந்தக் குறை தெரியாமல் கதை நகர்வது தான் இயக்குநரின் சாமர்த்தியம்.
குழந்தைகளை மையப்படுத்திய குழந்தைகளுக்கான படமாக உருவாக்கியுள்ள இந்தப் படத்தில் மது அருந்தும் காட்சிகள் இடம்பெற்று உள்ளதும் காவல்துறையை எதிர்மறை நிழல் படிந்த கோணத்தில் காட்டி உள்ளதும் உறுத்தல். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற கருத்தைச் சொல்லாமல் சொல்கிற இந்தப் படத்தில் ஆட்டுக்குட்டி புஜ்ஜியைத் தேடும் துர்காவின் பாசமும் தவிப்பும் கொண்ட பயணத்தில் படத்தின் பார்வையாளர்களாகிய நாமும் குழந்தையாக மாறி ஆட்டுக்குட்டியைத் தேடும் மன நிலைக்கு வருவதுதான் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் பெற்றிருக்கும் வெற்றி எனலாம் .
நிறை குறை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பார்த்தால் நிச்சயமாக புஜ்ஜி அட் அனுப்பட்டி, குழந்தைகளுக்கான பட வரிசையில் அமையும் பெரியவர்களுக்கான படமும் கூட என்று கூறலாம்.