ராகம் மூவீஸ் தயரிப்பில் அகில்பவுல் – அனஸ்ஹான் இயக்கத்தில் டொவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய், அஜு வர்க்கீஸ், மண்டிரா பெடி, அர்ச்சனா கவி, ஷம்மி திலகன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “ஐடெண்டி”. ஒரு துணிக்கடையில் ஒரு இளம்பெண் ஆடை மாற்றுவதை ஒருவன் கைப்பேசியில் படம் பிடித்துவிடுகிறான். பிறகு படம் பிடித்தவன் பணம் கேட்டு இளம் பெண்ண மிரட்டுகிறான். இது தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் திரிஷாவுக்கு தெரிய வருகிறது. பணம் கைமாறுவதை படம்பிடித்து தொலைக்காட்சியில் வெளியிடவேண்டும் என்று திரிஷா பணம் கொண்டு செல்பவரை ரகசியமாக பின் தொடர்கிறார். அங்கு படம் பிடித்தவரை ஒரு நாற்காலியில் கட்டிவைத்திருக்கிறார்கள். பணத்தை கொண்டு சென்றவர் ஒருவரிடம் பணம் கொடுக்கிறார். பணத்தை வாங்கியவர் படம் பிடித்தவர்மேல் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்கிறார். அத்துடன் அந்த இடத்தையே தீக்கிரையாக்கிவிட்டு தப்பித்தும் விடுகிறார். இதை படம் பிடித்த திரிஷா பயந்து ஓடுகிறார். அப்போது ஒரு கார் திரிஷா மீது மோதுகிறது. அந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த திரிஷா ஒருவித நோய்க்கு ஆளாகுகிறார். இளம் பெண் உடை மாற்றும்போது படம் பிடித்தவனை கொலை செய்தது யார்? என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை. படத்தின் முன்பாதி விறுவிறுப்பாக செல்கிறது. போலீஸ் ஆய்வாளராக வரும் வினய் ராய் அலட்டிக் கொள்ளாத அதிகாரியாக நடித்து அசத்துகிறார். வினய்யின் விசாரணைக்கு உதவி செய்யும் ஓவியராக வரும் டொலினோ தாமஸ், திரிஷா சொல்லும் அங்க அடையாளங்களை வைத்து கொலைகாரனை படம் வரைகிறார். அந்த படம் கொலைகாரனின் முகம், படம் வரைந்த டொவினோ தாமஸின் முகத்திற்கு ஒத்துபோகிறது. இந்த காட்சியில் டொலினோ தாமஸ் சிரித்த முகத்துடன் நடிக்கும் காட்சி கைத்தட்ட வைக்கிறது. கொலைகாரன் யார் என்பதை படத்தின் பின்பகுதியின் நடுவிலேயே தெரிந்துவிடுவதால் விறுவிறுப்பு சற்று தளர்ந்துவிடுகிறது. ஆனால் விமானம் பறக்கும் காட்சி தளர்ந்துபோன பார்வையாளர்களின் விறுவிறுப்பை எகிற வைக்கிறது. நாற்காலியின் நுனிப்பகுதிக்கு பார்வையாளர்கள் வந்துவிடுகிறார்கள். உச்சக்கட்ட காட்சியில், பறக்கும் விமானத்துக்குள் வினய் ராய்க்கும் டொவினோ தாமசுகும் நடக்கும் சண்டைக் காட்சி ஆங்கிலப்படத்துக்கு ஈடு கொடுக்குமளவுக்கு பிரமாதமாக படமாக்கியுள்ளார் இயக்குநர். பின்னணி இசையில் பின்னி எடுத்துவிட்டார் இசையமைப்பாளர். மதிப்பீடு 5க்கு 3.5.