ராஜலட்சுமி, ராஜேஸ்வரி சந்திரசேகரன் ஆகியோரின் தயாரிப்பில் வீரமுருகன் இயக்கத்தில் அப்புக்குட்டி, தீபா, சம்பத்ராம், காயத்ரி, யாசர், சேரன்ராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “கலன்”. போதை ஒழிப்பை கருவாக கொண்டு கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் வீரமுருகன். சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தின் வீதியில் தீபாவின் மகன் யாசரை ஒரு ரவுடிக் கும்பல் கொலை செய்கிறது. ஏன் யாசர் கொலை செய்யப்பட்டார்? கொலை குற்றவாளி யார்? கொலைக்கு பழிதீர்க்கப் பட்டார்களா? என்பதுதான் கதை. கண்ணுக்கு கண், காதுக்கு காது என்ற அடிப்படையில் அநீதியை அநீதியின் வழியில் நின்று அழிப்பதுதான் தர்மம் என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் வீரமுருகன். அஞ்சாநெஞ்சம் படைத்த வீரமங்கையாக நடித்திருக்கும் தீபா, பழிக்கு பழி தீர்த்த வேலு நாச்சியாரை நினைவு படுத்துகிறார். நீதிக்குப் போராடி உயிர் நீத்த யாசரின் தாய்மாமனாக நடித்திருக்கும் அப்புக்குட்டி, சுடுகாட்டு வேட்டைக்குச் சென்று திரும்பிய கருப்பண்ணசாமி பரண்மீதேறி பன்றியின் நெஞ்சை குத்துவதுபோல் கஞ்சா வியாபாரி சம்பத்ராமின் நெஞ்சை குத்தி குதறி ஆவேசமாக நடித்திருக்கிறார். கஞ்சா மற்றும் போதை மாவு வியாபாரியான சம்பத்ராம், வில்லத்தனத்தின் உச்சிக்கே சென்று தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வில்லன் கதாபாத்திரம் இனி அவரை தேடி வரும். குணச்சித்திர வேடத்தில் இதுவரை நடித்துவந்த நடிகை காயத்ரி, சுருட்டும் கையுமாக கஞ்சா போதையில் கண்கள் சொருகியபடி அடாத செயலுக்கு துணையாக பேசி நடிப்பதில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கிராமத்துக் கோயில் திருவிழாவை அசகுபிசகு இல்லாமல் அப்படியே திரையில் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஜெயக்குமாரும், இசையமைப்பாளர் ஜெர்ஜனின் இசையும் ரசிகர்களை கைத்தட்ட வைக்கிறது. நாட்டின் நலனுக்காகவே தனது வாழ்நாட்களை அர்பணித்து தியாக தீபங்களாக பிரகாசித்த சில பெருந்தலைவர்களை பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்திய இயக்குநர் வீரமுருகன் பாராட்டுதலுக்குறியவர். படத்தில் காட்டப்படும் வன்முறை காட்சிகளை பாதிக்கப்பட்டவர்களின் கண்களைக் கொண்டு பார்த்தால் அந்த காட்சிகள் நியாயமாகத் தோன்றும். வழங்கப்படும் நீதி பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்தி அளிக்க வேண்டும் என்ற கோணத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் வீரமுருகன். இப்படத்தில் காவல்துறையில் சிலர் காவலர்கள் சட்டத்திற்கு புறம்பாக நடப்பதையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். மதிப்பீடு 5க்கு 3.5.