உரிமையை நிலை நாட்டிய “ஹிட்லர்” திரைப்படம்

ராஜ்ஹா, சஞ்சய்குமார், தயாரிப்பில் எஸ்.ஏ.டாணா இயக்கத்தில் விஜய் ஆண்டணி, சரண்ராஜ், கெளதம் வாசுதேவ மேனன், ஆடுகளம் நரேன், ரியா சுமன், ரெட்டின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஹிட்லர்”. முதல் கட்டத்திலேயே ஒரு மலைக்கிராமத்தில் அடைமழை பெய்கிறது. இரவு நேரம் காட்டாற்றை கடக்க பாலம் இல்லாததால் கயிற்றைப் பிடித்துக் கொண்டு சில பெண்கள் ஆற்றை கடக்கும்போது வெள்ளப் பெருக்கு அதிகமாகி ஆற்றில் மூழ்கி இறந்து விடுகிறார்கள். மறுநாள் சென்னையில் ஓடும் ரயிலில் அரசியல்வாதியின் 400 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. அதன் பிறகு மூன்று நபர்களை முகம் தெரியாத ஒரு நபர் சுட்டுக் கொல்கிறார். ரயிலில் ஏன் பணம் கடத்தப்படுகிறது. கடத்துபவர் யார்? அப்பணத்தை கொள்ளையடித்தவர் யார்? மூன்று பேர் ஏன் சுட்டு கொல்லப்படுகிறார்கள். சுட்டுக் கொல்பவர் யார்? சட்டம் தன் கடமையை செய்ததா? இதுதான் கதை. படத்தின் முன்பகுதி மர்மங்கள் நிறைந்த காட்சிகளாக செல்லும் திரைக்கதை படத்த்கின் உச்சக் கட்ட காட்சிவரை ரசிக்கும்படி உள்ளது. இசையமைப்பாளராக கோலோச்சிய விஜய் ஆண்டணி நடிகராக பல திரைப்படங்களில் நடித்து விட்டார். அவரது முதல் படத்தில் எப்படி நடித்தாரோ அதே நடிப்புதான் இப்படம் வரை தொடர்கிறது. கதாபாத்திரத்திற்கேற்ற முகபாவனைகள் இல்லை. அதே முகம் அதே நடை அதே விஜய் ஆண்டணி. நடிப்பில் மாற்றம் கொண்டுவர முயற்சித்துள்ளார். முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள். நடிப்பில் விஜய் ஆண்டணிக்கு அண்ணன் கெளதம் வாசுதேவ மேனன். (இருவரும் பேசிவைத்து நடிப்பார்கள் போலிருக்கிறது) நடிப்புக்கு உடல்மொழிதான் உயிர் என்பதை இவர்கள் உணர வாழ்த்துக்கள். உச்சக்கட்ட காட்சியில் மர்மங்கள் தெளிவாக்கப்படுவது அருமையாக உள்ளது. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்துக்கு வலுசேர்க்கிறது.