ரஜினி கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம்.”* ரசிகர்கள் மீது *நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்.

நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து அவரது ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேறிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது . ஏற்கனவே கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிற கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேரிலும், பதிவு தபால் மூலமும் பலமுறை கோரிக்கை முன் வைத்தும் தனது ரசிகர்களை கண்டித்து நல்வழிப்படுத்த தவறிய அவர் இவ்விகாரத்திலாவது உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். தவறான கலாச்சாரம் தமிழகத்தில் அரங்கேற அவர் காரணமாக இருக்க கூடாது என திரு. ரஜினிகாந்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.