‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் முக்கிய நடிக, நடிகையர் பலர் நடித்துள்ளனர்.********
இப்படத்தின் கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.