ராமநாதபுரம் மாவட்டத்தில், போகலூர் ஊராட்சி ஒன்றியம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், கமுதி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் (16.07.2024) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. போகலூர் ஊராட்சி ஒன்றியம், முத்துச்செல்லாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் .செ.முருகேசன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கடந்த வாரம் துவங்கப்பட்டு, தொடர்ந்து இம்முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர் ஊராட்சி ஒன்றியம், முத்துச்செல்லாபுரம் ஊராட்சியிலும், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சியிலும், கமுதி ஊராட்சி ஒன்றியம், இராமசாமிபட்டி ஊராட்சியிலும் இம்முகாம் இன்று நடைபெறுகிறது. இம்முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறும். இம்முகாம் வருகின்ற 19.09.2024 வரை 76 மையங்களில் நடைபெறவுள்ளது. இம்முகாம் நடைபெறும்பொழுது அதனைச்சார்ந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்த கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம். இம்முகாமில் 17-க்கும் மேற்பட்ட துறை அலுவலர்கள் பங்கேற்பார்கள். இம்முகாமில் பெறக்கூடிய மனுக்களுக்கு 30 தினங்களுக்குள் உரிய தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இம்முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தெரிவித்தார்.
தொடர்ந்து இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய மனுக்களை பதிவு செய்து அதற்குரிய மேல் நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் போகலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.சத்யா குணசேகரன் அவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.பூமிநாதன் அவர்கள், பரமக்குடி வட்டாட்சியர் திருமதி.சாந்தி அவர்கள், போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மணிவன்னன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.