இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., சத்துணவு மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க இருந்த காலை உணவினை சாப்பிட்டு அதன் தரம் குறித்து கேட்டறிந்ததுடன் குழந்தைகளுக்கு அரசு உத்தரவுப்படி ஒவ்வொரு நாளுக்கும் உரிய உணவினை வழங்கிட வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் சத்திரக்குடி பேருந்து நிலைய பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் தூய்மை கடைபிடிப்பது குறித்த உறுதிமொழி பொதுமக்கள் முன்னிலையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவரும் தனது வீட்டையும் தங்கள் வசிக்கும் சுற்றுப்புற பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் ஆரோக்கியமுடன் இருந்திட முடியும் என பொதுமக்களிடம் தெரிவித்ததுடன் அதேபோல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டுமென தெரிவித்ததுடன் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் மஞ்சப்பை வழங்கினார். தொடர்ந்து மஞ்சூர்; ஊராட்சியில் ஆசிரியர் பயிற்சி மைய கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் சத்திரக்குடியில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் அரசு மகளிர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவிகளுக்கு அட்டவணைப்படி உணவுகள் வழங்கப்படுவது குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்ததுடன் உணவு பொருட்களின் இருப்பு குறித்து பதிவேடுகளை பார்வையிட்டதுடன் விடுதியின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு செய்ததுடன் நல்ல முறையில் பராமரித்திட வேண்டுமென விடுதி காப்பாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து பரமக்குடி அருள் சான்று மனவளர்ச்சி மாற்றுத்திறனாளர் சிறப்பு பள்ளிக்குச் சென்று மாணவர்களின் கல்வித்திறன் குறித்து கேட்டறிந்ததுடன் மாற்றுத்திறன் மாணவர்களிடம் நன்றாக படித்திட அறிவுரை வழங்கினார்.
பின்னர் உரப்புளி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டுவரும் நாற்றங்கால் பண்ணையினை பார்வையிட்டதுடன் மாவட்டத்தில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கேற்ப பனைவிதைகள் சேகரித்து கிராம பகுதிகளுக்கு வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். மேலும் உரப்புளி ஊராட்சியில் வைகை ஆற்றிலிருந்து பாசன கால்வாய் செல்லும் பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு மழைகாலம் துவங்கவுள்ளதை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் பரமக்குடியில் அறிவுசார் மைய கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சித்திரா, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பாலசுந்தரம, உதவி திட்ட அலுவலர்கள் ராஜா முகமது, கிருஷ்ண நவனீதன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.