“தென் சென்னை” திரைப்பட விமர்சனம்

ரங்கா தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் “தென் சென்னை”. கதாநாயகியாக ரியா, இளங்கோ குமணன், திலீபன், வத்சன், நடராஜன், சுமா , விஷால், ராம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நான்காவது தலைமுறையாக கதாநாயகன் ரங்கா ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். அந்த உணவகத்தை அடமானம் வைத்து அந்த பணத்தில் அவரது தாய் மாமன் இளங்கோ குமணன் அந்த உணவகத்தில் மதுபானங்களையும் விற்று வருகிறார். அந்த வருமானத்தை கொள்ளையடிக்க நான்குபேர் திட்டம் போடுகிறார்கள். அந்த திட்டத்தை முறியடிக்க ஒருபாதுகாப்பு நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் கதாநாயகன் ரங்கா. சாலையோரத்தில் ஒரு குழந்தை அனாதையாக கிடக்கிறது. அதை எடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கிறார். பிறகு அந்த குழந்தையையே தத்தெடுக்கிறார். அந்த குழந்தை யாருடையது?  கொள்ளை கும்பலின் தலைவன் யார்? பாதுகாப்பு நிறுவனம் ரங்காவின் சொத்தை மீட்டுத் தந்ததா?. இந்த கேள்விகளுக்கு பதிலாக வருவதுதான் படத்தின் கதை. படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து பாடல்களும் எழுதி இயக்கியிருக்கும் ரங்காவின் துணிச்சலை முதலில் பாராட்ட வேண்டும். அமைதியான நடிப்பால் அசத்தியிருக்கிறார். திரைக்கதை விறுவிறுப்பில்லாமல் தட்டுத்தடுமாறி நகர்கிறது. நகைச்சுவை பாத்திரம் ரசிக்கவில்லை. கோவிட்டில் அக்காவின் மரணத்தை எண்ணி அழுகின்ற காட்சியில் ரியாவின் நடிப்பு தத்ரூபமாக இருக்கிறது. அவருக்கு ஆறுதல் சொல்லும் காட்சியில் ரங்காவின் நடிப்பு இயற்கையாக உள்ளது. பாதுகாப்பு பணியாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்வார்களா? இதை இயக்குநர் சிந்தித்திருக்க வேண்டும். குற்றச் செயல்கள் நிரம்பிக் கிடக்கும் படம் தென் சென்னை.