மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும்

ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர்  ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில்  இன்று  நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன்ஜி, டத்தோ ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை இயக்குனர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜே.எஸ்.கே கோபி, படத்தொகுப்பாளர் தேவராஜ்  உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி பேசுகையில்,”

இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் ‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் வி. கே. ராமசாமி, நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். நாங்கள்‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் படத்தை எடுக்க திட்டமிட்டு விவாதித்தோம். பிறகு சில காரணங்களால் அதனைத் தொடர முடியவில்லை. இந்நிலையில் நண்பர் ஜேஎஸ்கே கோபியின் உதவியுடன் இயக்குனர் மோகன்ஜி என்னை சந்தித்தார். நீங்கள்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்தார் அப்போது நான் ஒரு தொகையை சம்பளமாக கேட்டேன் அதைக் கேட்டு அதிர்ந்து சென்றவர்தான் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. பிறகு அவர் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து சொன்னார்.
நான் டப்பிங் யூனியன் தலைவராக பணியாற்றி வருகிறேன்/ தற்போது திரையுலகில் பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் உறுப்பினர்களாக சேர்க்க சொல்லி என்னை சந்திக்கிறார்கள். அவர்களும் டப்பிங் யூனியனில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள்/ ஏனெனில் இவர்களுக்கு சினிமாவைத் தவிர வேறு தொழில் தெரியாது. படத்திற்கு இசை அமைப்பாளர் ஜுபின் எனக்கு புதியவர். படக்குழுவினருக்கு நண்பராக பழகியவர். இந்த படத்திற்கு அவர் மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். நான் இதற்குப் பிறகு ஏதேனும் படத்தை தயாரிக்கும் எண்ணம் இருந்தால்… அவரை இசையமைப்பாளராக பயன்படுத்துவேன்.படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்ட வேண்டும் என்றால் குறிப்பாக கலை இயக்குனரை பாராட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக நீதிமன்ற காட்சிகளுக்கான அரங்கத்தை அவர் வடிவமைத்திருந்தது மிகச் சிறப்பாக இருந்தது. படபிடிப்புத் தளத்தில் இயக்குநரிடம் ஒரே ஒரு வசனத்தை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டேன் அவரும் அதனை ஒப்புக் கொண்டு, அந்த வசனத்தைப் பேச அனுமதித்தார்.
இந்தப்படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. எது நியாயமானதோ அதை இயக்குனர் பேசியிருக்கிறார். உண்மையில் நமக்கெல்லாம் இது பெருமையாக தான் இருக்கும். எனக்கு இவர் தான் தலைவர் என சொல்லும் அனைவருக்கும் இந்த படம் பெருமையாக இருக்கும். இயக்குநர் மோகன்ஜி இந்த படத்தை குறிப்பிட்ட அந்த தலைவருக்காக எடுத்தது போல் இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் பாராட்ட வேண்டும். திருந்த வேண்டும். இந்தப் படம் சிறப்பான படம். அனைவருக்கும் பொதுவான படம். படம் 1ஆம் தேதி வெளியான பிறகு, இதுதான் டாக் ஆஃ தே டவுனாக இருக்கும். தனுஷ் நடித்ததால் கர்ணன் படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ருத்ர தாண்டவம் படம் ரிச்சர்ட் நடித்ததால் இரண்டு மடங்கு வரவேற்பைப் பெறும். அவருக்கும் இப்படத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நான் வணங்கும் தலைவர்களில் டாக்டர் அம்பேத்கரும் ஒருவர். அவர் இந்தியாவிற்கான அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். அவர் ஒரு ஜாதிக்காக இதனை செய்யவில்லை. இதை சொல்வது தான் ருத்ர தாண்டவம் படம். மலையாள திரை உலகில் படைப்பாளிகளும், திரைக்கதை ஆசிரியர்களும் எதைச் சொல்ல நினைக்கிறார்களோ… அதை அவர்களால் உறுதியாகவும், துணிச்சலாகவும் செல்ல முடியும். அது போன்றதொரு நிலை தமிழகத்தில் இல்லை. இங்கு ஒரு காட்சியில் பின்னணியில் நிற்பவர்களால் கூட அரசியலாக்கப்படுகிறது. நான் ஒரு திறமையான நடிகன் இதனை சொல்லி சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டேன் இனிமேல் சொல்வதில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். ஏனெனில் திரை உலகில் காகித பூக்களுக்கு தான் மரியாதை. உண்மையான வாசம் வீசும் மலருக்கு மரியாதை கிடைப்பதில்லை. ஊடகவியலாளர்கள் நினைத்தால் நன்றாக இருக்கும் ஒருவரை கூட ஆட்டோ சங்கர் ஆக மாற்றிவிட முடியும் நீங்கள் நினைத்தால் ஆட்டோ சங்கரை கூட சாய்பாபாவாக மாற்றிவிட முடியும். எனவே இப்படத்தை பற்றி எழுதி ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ‘என்றார்.

நடிகை தர்ஷா குப்தா பேசுகையில்,”

தர்ஷா குப்தா என்றால் ‘குக் வித் கோமாளி’, ‘விஜய் டிவி’ என்ற அளவில்தான் அனைவருக்கும் அறிமுகமாகி இருக்கிறேன் ஆனால் என்னுடைய நீண்டநாள் கனவு திரைப்படத்தில் நடிகையாக நடிக்க வேண்டும் என்பது. அதிலும் ஒப்பனையே இல்லாமல் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அந்தக் கனவை இயக்குனர் மோகன்ஜி ருத்ர தாண்டவம் படத்தில் மூலம் நிறைவேற்றியிருக்கிறார். என்னுடைய திரைப்பட அறிமுகமே பெரிய நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடைபெறுவதால் மகிழ்ச்சியுடன் பெருமிதமாகவும் இருக்கிறது. இந்தப்படத்தில் கிராமத்தில் வாழும் பெண்ணாகவும், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்திற்கான ஆடிஷன் தேர்வில் இயக்குனர் மேக்கப் எதுவுமில்லாமல் வரவேண்டுமென கேட்டுக்கொண்டார். இது எனக்கு சவாலானதாக இருந்தது. இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

படத்தின் இயக்குனர் மோகன்ஜி பேசுகையில்,”

திரௌபதி படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான 7ஜி சிவா அவர்களுக்கு முதல் பிரதி அடிப்படையில் இந்த திரைப்படத்தை என்னுடைய சொந்த நிறுவனமான ஜி எம் கார்ப்பரேஷன் ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறேன்.
திரௌபதி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரமாண்டமான பட்ஜெட்டில் படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்தது. திரௌபதி படத்தின் பட்ஜெட் 45 லட்சம். ஆனால் படத்தின் பட்ஜெட்டை விட இருபதிலிருந்து இருபத்தி மூன்று மடங்கு கூடுதலாக வசூலித்தது. இதனால் ஏராளமான வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. முன்னணி நடிகர்கள் இருவர் கூட நல்ல ஊதியத்தில் படங்கங்களை இயக்க வாய்ப்பு வழங்கினார்கள். பழைய வண்ணாரப்பேட்டை படத்திலிருந்து திரௌபதி படம் வரை என்னைச் சுற்றி இருப்பவர்களின் கதைகளைத்தான் படைப்பாக உருவாக்கி இருக்கிறேன். சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தான் திரௌபதி திரைப்படத்தை உருவாக்கி இருந்தேன். ருத்ர தாண்டவம் படத்தின் கதையையும் என்னுடைய நண்பரான கிருத்துவ பாதிரியார் ஒருவர் தான் அளித்தார். அவர்  திரௌபதி படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அதனை படைப்பாக மாற்ற இயலுமா..? என கேட்டு கேட்டு விட்டு ஒரு விஷயத்தைச் சொன்னார், கிருத்துவ மதத்தில் பல உட்பிரிவுகள் இருக்கிறது கிறிஸ்தவ மதத்தை சிலர் கார்ப்பரேட் நிறுவனம் போல் மாற்றியமைத்து இருப்பதையும் எடுத்துரைத்தார். மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் என்ற படத்தை பற்றி விரிவாக விவாதித்தார். இதனை திரைப்படமாக உருவாக்கினால், சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகும் என விவரித்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும் என சொன்னார்.
சிலர் எளிதாக மேடையில் இந்து மதத்தை அழித்து விடுவோம். வேரறுத்து விடுவோம் என பேசுகிறார்கள். அதற்கு கைதட்டல்களும் கிடைக்கிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய கார்ப்பரேட் அரசியல் இருப்பதையும், மிகப் பெரிய சதி திட்டம் இருப்பதையும் எடுத்துரைத்தார். இவையெல்லாம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. மக்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. நம்முடன் இருந்து கொண்டே இந்து மதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை பாதிரியாருடைய கண்ணோட்டத்திலிருந்து சொல்லும்பொழுது எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இதுவரை உண்மையான கிறிஸ்துவராக இருந்தோம். தற்போது திடீரென்று ஏராளமானவர்கள் இங்கு வந்து கிறிஸ்துவராகவும் இல்லாமல், இந்துவாகவும் இல்லாமல் எங்களை நோக்கி கேள்வி கேட்கிறார்கள். இதை கேட்டவுடன் இதுதான் என்னுடைய அடுத்த படைப்பு என்று உறுதி எடுத்துக் கொண்டு ருத்ரதாண்டவம் என தலைப்பு வைத்து பணிகளைத் தொடங்கிவிட்டேன்.  இதுதான் ருத்ரதாண்டவம் உருவான கதை.   இந்த தருணத்தில் நடிகர் ரிச்சர்ட்டிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். திரௌபதி படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நடிகர் அவர். தினமும் ஊதியம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக நாட்களை கடத்திக் கொண்டிருந்தவரை, ஊதியம் வாங்காமல் என்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என கூறினேன். இரண்டு கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்றும், எட்டு மாத காலம் என்னுடன் பயணிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தேன். அவர் ஓராண்டு வரை என்னுடன் பயணித்தார். ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. அத்துடன் அவர் பயன்படுத்தும் வாகனத்தையும் எங்களுக்கு கொடுத்து உதவினார்.  இந்த அளவிற்கு நடிகர் ஒருவர், இயக்குநரையும், அவர் வைத்திருக்கும் கதையும் நம்பி ஓராண்டு வரை பயணம் செய்ததால், அதற்கு கைமாறாக தான் இந்தப்படத்தில் நாயகனாக அவரை நடிக்க வைத்தேன். இதைக் கடந்து எங்கள் இருவரிடையே புரிதலுடன் கூடிய நட்பு நீடிக்கிறது. நான் ரிச்சர்ட் உடன் தொடர்ந்து படங்களை படங்களில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் முப்பத்தி எட்டு, முப்பத்தி ஒன்பது நாட்களுக்குள் ஒரு படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டு நிறைவு செய்கிறோம் என்றால், அதற்கு நாயகனின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. படப்பிடிப்பு ஏழு மணி என்றால்இ ஏழு மணிக்கு ஒப்பனையுடன் தயாராக ரிச்சர்ட் இருப்பார். படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் எந்த ஒரு நெருக்கடியை கொடுக்காமல் வீட்டுக்கு செல்வார். இதுபோன்ற ஒரு நாயகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே கருதுகிறேன். தமிழ்சினிமா இவரை கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய இயக்கத்தில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி ஆகிய படங்களில் தெரிந்த முகங்கள் யாரையும் நடிக்க வைக்கவில்லை. அனைவரும் புதுமுகங்கள்தான் புதுமுகங்களை தான் நடிக்க வைத்தேன். திரைத் துறையில் எனக்கு அதிக அளவு நண்பர்கள் கிடையாது மேலும் எனக்கு தெரிந்த சினிமாவும் அவ்வளவுதான். நான் ஒரு சுயாதீன திரைப்பட படைப்பாளர். சினிமாவை தெரிந்து கொள்வதற்காக நான் டீக்கடைகளிலோ, மதுபான பார்களிலோ நேரத்தைச் செலவிடுவதில்லை. அதுபோன்ற நண்பர்களையும் சம்பாதித்தது இல்லை. படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் ராயபுரத்தில் உள்ள என்னுடைய நண்பர்களுடன் இணைந்து நேரத்தை செலவழிப்பது தான் என்னுடைய பொழுதுபோக்கு.

இந்நிலையில் டத்தோ ராதாரவி அவர்களை சந்தித்து கதையை சொல்ல வேண்டும் என்றபோது எனக்குள் நிறைய தயக்கம் இருந்தது. நண்பர் ஜேஎஸ்கே கோபி அவர்களின் உதவியுடன் டத்தோ ராதாரவியை சந்தித்து கதையைக் கூறினேன். அப்போது அவர் ஒரு திருத்தத்தை சொன்னார் அதை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இப்படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். அவர் சொன்ன திருத்தத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு எமக்கு திரைஉலக பக்குவம் இல்லாததால், சிறிது கால அவகாசம் கேட்டுவிட்டு பிறகு, அவர் கேட்ட விஷயத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு சம்மதம் தெரிவித்தேன். அது என்னவெனில் இந்தப்படத்தில் அவர் நீதிமன்றத்தில் பேசும்பொழுது ‘நான் ஒரு பட்டியலின வகுப்பை சேர்ந்த வழக்கறிஞர் என்பதை பெருமிதமாக நினைக்கிறேன்’ என்பார்

மேலும் அவர் நடிப்பதற்கு சம்பளமாக ஒரு தொகையை கேட்டார். அது இந்த படத்திற்கான பட்ஜெட்டுக்குள் அடங்க வில்லை என்பதால், நான் பதிலேதும் கூறாமல் திரும்பி விட்டேன். பிறகு மீண்டும் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கதையை முழுவதும் கேட்ட பிறகு அதனை உள்வாங்கி ஒரு இயக்குனர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்து அற்புதமாக படப்பிடிப்பு தளத்தில் ஒத்துழைப்பு கொடுத்தார். அத்துடன் கதையை கேட்டு முடித்ததும் அவருடைய தோற்றம் குறித்து முழுமையான விவரங்களை அவர் நுட்பமாக விவரித்தபோது சினிமா மீதான அவரின் அர்ப்பணிப்புடன் அர்ப்பணிப்புடன் கூடிய உணர்வை கண்டு வியந்தேன்.

அவர் படப்பிடிப்புக்காக கலந்துகொண்ட இடம், உடன் பணியாற்றிய துணை நடிகர்கள் கொரோனா காலகட்டம், அவரின் வயது…. என பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் அவர்  எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை மனமுவந்து வழங்கினார். இதற்காக அவருக்கு நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் தயார் என்றால், அவரை கதையின் நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க நான் தயாராக இருக்கிறேன். என்னிடம் அதற்கான கதை இருக்கிறது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கதையை தயார் செய்து வைத்திருக்கிறேன். தயாரிப்பாளருடன் அவர் வந்தால் அவரை கதையின் நாயகனாக வைத்து இயக்குவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.

கதாநாயகி தர்ஷா குப்தா அவர்களுக்கு இன்னும் அவர்களுடைய ஊதியத்தில் சிறு தொகை நிலுவையில் இருக்கிறது. பட வெளியீட்டுக்கு முன்னால் அதை வழங்கி விடுவேன் என உறுதி கூறுகிறேன். தர்ஷா குப்தா இந்த படத்தில் அவருடைய நடிப்பிற்கு அவரே பின்னணி குரல் கொடுத்தார். இது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் கருதுவேன். ஏனெனில் நான் இயக்கிய 3 படங்களிலும் நாயகிகள் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார்கள். இதனால் தமிழ் பேசத் தெரிந்த நடிகர்களை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஊக்கமாக இருக்கிறது. தர்ஷா குப்தா படத்தில் 8 மாத கர்ப்பிணியாக கதையில் அறிமுகமாகி, ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு நிச்சயம் அவர் பேசப்படுவார் .

நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர் 7ஜி சிவா பரிந்துரை செய்தார். ஆனால் அவரை சந்திக்க எனக்கு எனக்கு தயக்கமாக இருந்தது ஏனெனில் திரௌபதி படம் வெளியான பிறகு என்னை பற்றி சமூக வலைதளத்தில் எதிர்மறையான விமர்சனங்கள், பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் ‘அதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். சினிமாவை சினிமாவாக  தான் பார்ப்பார்கள். நீங்கள் எந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களோ அதே போல் அவர்களும் பல விஷயங்களில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். திரைத்துறையில் ஒரு உண்மையை சொல்வதற்கு பெரிய துணிச்சல் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது அதனால் அவரை சந்தித்து கதை கூறுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

நான் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சலீம் கௌஸ் அவர்களைத்தான் தேர்வு செய்து வைத்திருந்தேன். அவர் மும்பையில் இருப்பதாலும், தொடர்பு கொள்வதில் பல சிக்கல்கள் இருந்தாலும் அவருக்கு மாற்றாக கௌதம்மேனன் அவர்களை சந்தித்தேன். கதையைக் கேட்டுவிட்டு நான்தான் நடிக்க வேண்டுமா? எனக் கேட்டார். அவரிடம் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால்.., எனக்கு திரை உலகில் வெற்றியும், அங்கீகாரமும் கிடைக்கும் என கூறினேன். அவர் உடனே, கதையாகவும், திரைக்கதையாகவும் நன்றாக இருக்கிறது. ஒரு நடிகராக என்னுடைய ஒத்துழைப்பு எந்த அளவுக்கு வழங்க முடியுமோ அந்த அளவுக்கு வழங்குகிறேன் என வாக்குறுதி கொடுத்தார்.

இந்த படத்தில் நடிகை மாளவிகா அவினாஷ் அவர்களும் அற்புதமான முக்கியத்துவமான நீதியரசர் வேடத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களும் அந்த கொரோனா காலகட்டம் என்பதால் படப்பிடிப்பு தளத்திற்கு வர தயங்க, நாங்கள் கொரோனாவிற்காக கடைப்பிடிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை விவரித்து, ராதாரவி அவர்களும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார் என எடுத்துக் கூறிய பிறகு அவர்கள் சென்னைக்கு வருகை தந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கினார் அதுவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

நடிகர் மனோபாலா சார் அதிரடியாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். விரைவில் ஸ்னீக் பீக்காக வெளியாகவிருக்கிறது. அந்த முன்னோட்ட காட்சிகள் வெளியான பிறகு நிச்சயம் சலசலப்பு உண்டாகும். இதற்கு எதிர்மறையாக விமர்சனங்கள் வரும். இதற்கு நான் இப்போதே பதிலளித்து விடுகிறேன். படத்தில் அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் தவறு என்றால், நிஜத்தில் தலைவர் ஒருவர் மேடையில் பேசிய அத்தகைய பேச்சும் தவறுதான். தலைவர் ஒருவர் மேடையில் பேசிய பேச்சை தான் இப்படத்தில் வசனங்களாக இடம்பெற வைத்திருக்கிறேன். இந்த சலசலப்பு படத்தின் வெளியீட்டிற்கு வெற்றிக்கும் பெரிய அளவில் உதவி செய்யும் என நம்புகிறேன்.

அதேபோல் மற்றவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன் நீங்கள் ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதள பக்கத்தில் என்னுடைய மதத்தை பற்றியோ.. என்னுடைய சமூகத்தைப் பற்றியோ.. ஏதேனும் காயப்படுத்தும் வகையில் பேசினால், அதனை அப்படியே என்னுடைய படைப்பில் இடம்பெறும் கதாபாத்திரம் பேசும் வகையில் வைத்து விடுவேன். அதனால் மற்றவர்களை காயப்படுத்தும் முன் தீர யோசனை செய்து வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திரௌபதி 360 திரை அரங்குகளில் வெளியானது. ருத்ர தாண்டவம் அக்டோபர் 1ஆம் தேதியன்று 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என வினியோகஸ்தர் 7 ஜி சிவா வாக்குறுதி அளித்து இருக்கிறார். அது நடைபெறும் என நினைக்கிறேன். அது நடைபெறறால் இப்படத்தின் வெற்றி உறுதியாகிவிடும்.

இந்தப் படம் யார் மனதையும் காயப் படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை. ஒரு படைப்பாளியாக எனக்கு கிடைத்த ஒரு நல்ல கருவை அனைவரும் ரசிக்கும் வகையில் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன். படத்தைப் பார்த்துவிட்டு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும என கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார்.

மக்கள் தொடர்பு: மணவை பூவன்