விலங்குகளை மையப்படுத்தி ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணியை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை பின்னப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஆணவக் கொலை விலங்குகளை கூட விட்டு வைக்கவில்லை. பணக்கார வீட்டில் ஒரு நாய் இருந்தால் அந்த நாயின் ஆணவக் கொலை எப்படி இருக்கும்.. அதுதான் இந்த படத்தின் கதை.. வெளிப்படையாகவே உங்களிடம் சொல்கிறேன். மனித மனங்கள் எப்படி இருக்கின்றன என்பதை பற்றி இந்தப்படத்தில் பேசுகிறோம். யோகி பாபு, தம்பி ராமையா, நாசர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ஆர் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் இருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கிறது. வடிவேலுவை என் படத்தில் நடிக்க வைப்பதற்காக அவரிடம் கதை சொன்னேன்.. ஆனால் அவர் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்கிற முடிவில் அப்போது இருந்தார். இறங்கி வந்தால் சத்தியமாக இருவரும் இணைந்து நடிப்போம். அவரிடம் இந்தப்படத்திற்காக கொடுத்த ஒரு கோடி ரூபாய் இன்னும் அவரிடம் தான் இருக்கிறது..இப்போது இந்த படத்தில் தம்பி ராமையா நடித்திருப்பது கூட வடிவேலுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் தான்.
ஏவிஎம், விஜயவாஹினி என இருந்த இரண்டு ஸ்டுடியோக்களுக்கு நடுவே சினிமாவுக்கு என் பங்களிப்பாக நான்கு ஏசி அரங்குகள் கொண்ட ஸ்டுடியோவை நிர்மாணித்துள்ளேன். சினிமாவில் சம்பாத்தித்து எத்தனையோ பேர் வெளியே முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். நான் வெளியே சம்பாதித்துவிட்டு சினிமாவில் முதலீடு செய்கிறேன். இன்று ஸ்டுடியோக்கள் எல்லாமே அப்பார்ட்மெண்ட்களாக மாறிவிட்ட நிலையில் படப்பிடிப்பிற்காக காஞ்சிபுரம் போக வேண்டி இருக்கிறது. ஆனால் என்னால் முடிந்த அளவில் நகரின் மையப்பகுதியில் இந்த ஸ்டுடியோவை நிர்மாணித்து உள்ளேன்.
வருடத்திற்கு இரண்டு படமாவது நடிக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் இப்போது இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. காரணம் இதோ இந்த ஸ்டுடியோவை கட்டிக்கொண்டு அதில் முதலீடு செய்திருந்தேன். சினிமா என்பது என்னுடைய கனவு.. சினிமாவில் நாம் இருக்கிறோம் என்பதற்கு ஒரு சேவையாக இந்த ஸ்டுடியோவை நான் பெருமையாக நினைக்கிறேன்.. தமிழ் சினிமா என்றாலே கோடம்பாக்கம் தான்.. அப்படி காரைக்குடியில் இருந்து கோடம்பாக்கத்திற்கு சினிமா கனவுகளோடு வந்தவன் நான்.. ஆனால் இன்று கோடம்பாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை துரத்தி விட்டார்கள்.. அடிக்கடி படம் எடுக்கவில்லையே தவிர சினிமாவிற்கு உதவியாக இப்படி ஒரு ஸ்டுடியோவை உருவாக்குவதின் மூலம் என் பங்களிப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தேன்.
எனக்கு அரசியல் வேண்டாம்.. அதை செய்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.. நமக்குத் தெரிந்த வேலையை செய்து விட்டுப் போவோம். என்னுடைய தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே நான் பல சேவைகளை செய்து வருகிறேன். அதுவே எனக்கு போதும். ஓட்டுப்போடுவதுடன் என்னுடைய அரசியல் முடிந்தது.
தொழிலில் வெற்றி என்பது ரகசியம் அல்ல.. அது ஒரு மேஜிக்.. அதில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்று புத்தகம் எழுதுவது என் நோக்கம் அல்ல. என்னைப் பற்றிய சுயசரிதையை எழுத வேண்டும் அதை மற்றவர் படிக்கவேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதற்காக எப்படி உழைப்பைக் கொட்டுவது, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, வெற்றியை அடைவது என்பதாகத்தான் என் சுயசரிதை இருக்க வேண்டுமே தவிர எப்படி வெற்றி பெற வேண்டும் என மற்றவர்களை போல நானும் புத்தகம் எழுத முடியாது” என்று கூறினார் நடிகர் ஆர்கே.