“விடுதலை 2” திரைப்பட விமர்சனம்

ஆர்.எஸ்.இன்போடெய்மெண்ட் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, கெளதம் மேனன், கிஷோர், கென் கருணாஸ், போஸ்வெங்கட், வின்செண்ட் அசோகன், சேட்டன், மஞ்சு வாரியார், பவானிஶ்ரீ ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “விடுதலை 2”. விடுதலை முதல் பாகத்தின் முடிவில் விஜய்சேதுபதியை சூரி கைது செய்வதிலிருந்து விடுத்லை 2 ஆம் பாகம் தொடங்குகிறது. இப்படத்தில் எது அரசியல் என்பதை வெள்ளித்திரையில் பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். மரத்தின் ஆணிவேர் நிலத்தின் நீரை உறிஞ்சி வளர்வதைப்போல, ஆதிக்கவர்க்கத்தினர் பாட்டாளிகளின் ரத்தத்தை உறிஞ்சி வளர்வதை துல்லியமாக நம் கண்முன்னே காட்டியிருக்கும் வெற்றிமாறனை பாராட்ட வேண்டும். அரசியல் கொலைகளை அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குநர். முதலாளிகளின் காமப்பசிக்கு இரையாகும் கூலித்தொழிலாளிகளின் வேதனைகளை திரையில் காணும்போது பார்வையாளர்களின் ரத்தம் கொதிக்கிறது. பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிப்போக செய்துவிட்டார். ஏன் பாட்டாளி போராளியாக மாறுகிறான்?  என்பதையும் அரசியல் விழிப்புணர்வையும் கொடுத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் வெகுவான பாராட்டுதலுக்குரியவர். படத்தின் அனைத்து கோணத்திலும் பளிச்சிடுகிறார் வெற்றிமாறன். பாடசாலையில் வாத்தியராகவும், களத்தில் போராட்டவாதியாகவும், வீட்டில் குடும்பத்தலைவராகவும் வாழ்ந்திருக்கிறார் விஜய்சேதுபதி. காவல்த்துறையின் உயர் அதிகாரிக்கு ஏற்ற நடிப்பை கெளதம் மேனன் கொடுத்திருக்கிறார். காவல்த்துறையின் கடைநிலை காவலராக நடித்திருக்கும் சூரியின் உணர்ச்சிப் பொங்க நடிப்பு பாராட்டுதலுக்குறியது. வில்லத்தனத்தின் விளிம்புக்கே சென்றிருக்கிறார் போஸ்வெங்கட். இளமையின் துள்ளலை கண்களில் காட்டி, கண்கள் பேசும் மவுன மொழி காதல் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் மஞ்சு வாரியார். படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை பக்கபலமாக உள்ளது. அனைவரும் காணவேண்டிய படம் “விடுதலை 2”.