தமிழகத்தில் மிகுந்த அழுத்தம் மிகுந்த துறை காவல்துறையாகும். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் காவல் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு கொண்டு வரப்பட்டார். இது காவல்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன்பிறகு தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவு வந்தது. இது தவிர காவலர்களின் குறைகளை அவர்களை நேரில் சந்தித்து கேட்டு வருகிறார் சைலேந்திரபாபு. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த காவலர் ஒருவர், டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை வெகுவாக பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- என் பெயர் ஜெகன். தலைமை காவலராக சென்னையில் திருமங்கலம் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வருகிறேன். 2013-ல் எனக்கு கொடுத்த தண்டனையை ரத்து செய்யகோரி இன்று காலை (4-ந்தேதி) நமது காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபுவின் அலுவலகம் சென்றேன். அவரை காணவரும் அனைவருக்கும் தண்ணீர் மற்றும் தேநீர் வழங்குகின்றனர். பின்னர் வரவேற்பு அறையில் மனுவின் படி எல்லோரையும் வரிசைபடுத்தி அமர வைத்தனர். உங்கள் அனைவரையும் அய்யா பார்க்க வர சொல்கிறார் என மாடியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றார்கள். உள்ளே சென்ற போது எந்த ஒரு ஆரவாரம் இன்றி அய்யா அமர்ந்திருந்தார். உள்ளே சென்ற போது ஒரு பயம் கலந்த பதட்டத்துடன் சென்றேன். உள்ளே சென்ற அனைவரையும் அந்த அறையில் இருந்த ஷோபாவில் அமர சொன்னார். அவரின் எதிரே ஒரு டேபிள் இரண்டு சேர். எனக்கு முன்னால் உதவி ஆணையாளர் சென்றார். அவரை அவர் எதிரே உள்ள சேரில் அமர வைத்து மிகவும் பரிவோடு விசாரித்து அனுப்பி வைத்தார். அதன் பிறகு நான் சென்றேன். என்னுடைய மனுவை பெற்றுக்கொண்ட அய்யா அவர்கள் அவர் எதிரே இருந்த சேரில் அமர சொன்னார். வியந்து வியர்த்து போனேன். என் குறையை கருணையோடு விசாரித்தார். அவருக்கு இருக்கும் வேலைகளுக்கு இடையே கடை நிலை ஊழியரான என்னையும் அவர் எதிரே அமர வைத்து பரிவோடு விசாரித்தார். அதுவே என் தண்டனை ரத்து செய்தது போலாகிவிட்டது. அய்யாவுக்கு என் மனம் நிறைந்த நன்றி. காவல்துறை நண்பர்கள் அனைவருக்கும் ஒர் வேண்டுகோள். உங்கள் தண்டனை சம்மந்தமாக அய்யாவின் அலுவலகத்தில் தினமும் காலை 11 மணிக்கு நேரில் சந்திக்கிறார். நீங்களும் பயன் பெறுங்கள்’ என்று அந்த காவலர் கூறியுள்ளார்.