டிஜி விஷ்வா பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேஹா ஆகாஷ், மாறன், எம்.எஸ்.பாஸ்கர், ஜான்விஜய், ரவிவர்மா, நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வடக்குப்பட்டி ராமசாமி“. கடவுள்நம்பிக்கை இல்லாத சந்தானம் ஊர் மக்களை ஏமாற்றி பிழைக்க ஒரு அம்மன் கோயில் கட்டுகிறார். ஊர்மக்கள் அந்த கோயிலுக்கு அதிகளவு காணிக்கைகளையும் நிலபுலன்களையும் எழுதி வைக்கிறார்கள். இதை அறிந்த அவ்வூர் தாசில்தார் கோயில் சொத்தை அபகரிக்க திட்டம் போடுகிறார். அதை முறியடித்துதானே கோயில் சொத்தை அனுபவிக்க சந்தானம் திட்டமிட்டு வேலை செய்கிறார். படம் முழுவதும் நகைச்சுவையோடு பயணிக்கிறது. எந்த இடத்திலும் சலிப்பு தட்டவில்லை. பல காட்சிகளில் பகுத்தறிவு வசனங்களை தனக்கே உரித்தான நகைச்சுவையோடு சந்தானம் பேசியிருப்பது கைத்தட்ட வைக்கிறது. உச்சக்கட்ட கன்னிவெடி காட்சி சிரிக்காதவர்களையும் சிரிக்க வைத்து விடுகிறது. உடலுக்கு பகுத்தறிவு, உயிருக்கு ஆன்மீகம் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுகள்.