சபரிஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி ஆகியோரின் தயாரிப்பில் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, காளிவெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சௌவுந்தர்ராஜா, ஶ்ரீரேகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “அலங்கு”. கேரள வனப்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து தன் அம்மா, தங்கை, நண்பர்களுடன் கூலி வேலைக்காக செல்கிறார் குணாநிதி. அந்தக் காட்டில் ஒரு நாயை கண்டெடுத்து வளர்கிறார். தன் முதலாளியின் சிறுவயது செல்ல மகளை வேறொரு நாய் கடித்து விடுகிறது. அதனால் அந்த ஊரிலுள்ள எல்லா நாய்களையும் வெட்டிக் கொல்லும்படி தன் அடியாட்களை அனுப்பி வைக்கிறார். கண்ணில் கண்ட நாய்களை எல்லாம் அடியாட்கள் வெட்டிக் கொல்கிறார்கள். குணாநிதியின் நாயையும் பிடித்து சென்று விடுகிறார்கள். அந்த நாயை தரும்படி கேட்கிறார் குணாநிதி. அடியாட்களின் தலைவன் நாயை கொடுக்க மறுக்கிறார். இதனால் சண்டை வலுக்கிறது. அந்த சண்டையில் அடியாட்களின் தலைவனின் கையை குணாநிதி துண்டாக வெட்டிவிடுகிறார். பிறகு என்ன நடந்தது? என்பதுதான் கதை. மலைஜாதியினரின் வாழ்க்கை முறையை தத்ரூபமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல். மலைஜாதியினரின் வேடத்துக்கு அனைத்து நடிகர்களும் பொறுத்தமாக இருக்கிறார்கள். படத்துக்கு மிகவும் பக்கபலமாக இருப்பது பாண்டிக்குமாரின் ஒளிப்பதிவுதான். மலையின் பசுமையையும் நீர்வீழ்ச்சிகளின் அழகையும் காண கண் கோடிவேண்டும். குழுமையான ஒளிப்பதிவு. காளிவெங்கட் உள்பட அனைத்து நடிகர்களின் கடின உழைப்பு படத்தில் நன்கு தெரிகிறது. மலைஜாதி மக்கள் அடிவாங்குவதை சற்று குறைத்திருக்கலாம். என்னா ஆ ஆ ஆ அடி. “திருப்பி அடிடா” என்று சொல்லும் அளவுக்கு அடி வாங்குகிறார்கள். காளிவெங்கட் தன் கதையை சொல்லி அழுகின்ற காட்சியில் நடிப்பின் முத்திரையை பதித்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்பு தட்டாமல் செல்கிறது. உச்சக்கட்ட காட்சியில் தாழ்த்தப்பட்ட இன மக்களின் பெருந்தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறார் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல்.