தி வீக், என்ற, ஆங்கில வார இதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் சசிகலா. அதில் ஜெயலலிதா மற்றும் தனக்கு இடையே இருந்த உறவுகள் பற்றி பல்வேறு முக்கிய விஷயங்களை அவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
பேட்டியிலிருந்து சில முக்கிய அம்சங்கள்:
போயஸ் கார்டனிலிருந்து ஜெ. என்னை வெளியேற்றியது மக்களை நம்ப வைக்கதான்-
பிரதமர் நரேந்திர மோடி 2015ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ம் தேதி தனது பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி போயஸ் இல்லம் வந்திருந்தார். நரேந்திரமோடி எப்போதுமே ஜெயலலிதாவின் நண்பராக இருந்துள்ளார். அவர் வீட்டுக்கு வருகை தரும்போது சிறப்பான முறையில் சைவ உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு போட்டு இருந்தார் அக்கா (ஜெயலலிதா) நரேந்திர மோடிக்கு ஆப்பம் மிகவும் பிடித்த உணவு. அன்று வீட்டில் நடைபெற்ற விருந்தின்போது மீண்டும் மீண்டும் ஆப்பத்தை கேட்டு சாப்பிட்டார் நரேந்திரமோடி. அவருக்கு, தென்னிந்திய உணவு மிகவும் பிடித்திருந்ததை பார்த்து அக்கா மகிழ்ச்சி அடைந்தார். அப்போது அதிமுக லோக்சபாவில் நாட்டிலேயே 3வது பெரிய கட்சியாக இருந்தது. உணவு உபசரிப்பு முடிந்தபிறகு ஜிஎஸ்டி வரி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ஜிஎஸ்டி வரி விதிப்பை ஏற்கவில்லை என்று ஜெயலலிதா உறுதிபட தெரிவித்தார். மோடி மட்டுமல்லாது, அத்வானி, ராஜீவ் காந்தி போன்ற பல தலைவர்களும் போயஸ் இல்லத்தில் விருந்து சாப்பிட்டு இருக்கிறார்கள்.
அக்கா மீது அத்வானி மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார். ஆனால் மோடி எப்போதுமே அக்காவுக்கு ஒரு நண்பராக இருந்தார். ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடி விரைந்து வருகை தந்தார். அப்போது நான் முற்றிலுமாக நிலை குலைந்து போய் இருந்தேன் என்பது மோடிக்கும் தெரியும். பாஜக தலைவர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவர் அடல் பிகாரி வாஜ்பாய் . 1980-களில் இருந்தே வாஜ்பாய் உரைகளை ரேடியோவில் கேட்கும் பழக்கம் எனக்கு இருந்தது. எனது தந்தையும் வாஜ்பாய் பேச்சின் அபிமானியாக இருந்தார்.
1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு க்கு அதிமுக ஆதரவு அளித்தது. அப்போதுதான் முதல் முறையாக டெல்லியில் வாஜ்பாயை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் 13 மாதங்கள் கழித்து வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அக்கா வாபஸ் பெற்றுக்கொண்டார்.
அது முழுக்க முழுக்க என்னுடைய விருப்பம் இல்லாமல் அக்கா தன்னிச்சையாக எடுத்த முடிவு. சென்னையில் இருந்து டெல்லிக்கு நாங்கள் விமானத்தில் சென்றோம். நான் ஒரு நுழைவு பாதை வழியாக விமான நிலையத்துக்கு சென்றேன், இன்னொரு நுழைவு பாதை வழியாக அக்கா உள்ளே சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் வாஜ்பாய் அரசுக்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். விமானத்தில் நாங்கள் ஒன்றாக பயணம் செய்து டெல்லி சென்று சேர்ந்தோம். தங்கியிருந்த அறையில் தொலைக்காட்சிப் பெட்டியை பார்த்த போது தான் இந்த விஷயம் எனக்கு தெரிய வந்தது. ஆதரவு வாபஸ் பெற வேண்டாம் என்று நான் அவரிடம் வாக்குவாதம் செய்தேன். ஒரு கட்டத்தில் சண்டை என்கிற அளவுக்கு கூட போனது. ஆனால் எனது கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. வாஜ்பாய் அரசு கவிழ்ந்து விட்டது.
இன்னொரு விஷயத்திலும் எனக்கும் அக்கா ஜெயலலிதாவுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. 2003ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில், சென்னை விமான நிலையத்தில் வைத்து காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைதுசெய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை கூடாது என்று இரவு முழுக்க நான் அக்காவுடன் சண்டை போட்டேன். நமது கட்சியின் நல்ல பெயரை கெடுத்து விடும் என்று நான் வாதம் செய்தேன். ஆனால் தப்பு செய்த ஒவ்வொருவரும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா என்னிடம் தெரிவித்தார். ஒருகட்டத்தில் நான் அவரது காலில் விழுந்து கூட கைது நடவடிக்கை வேண்டாம் என்று கெஞ்சினேன் . ஆனால் அந்த விஷயத்தில் எனது அறிவுரையை அவர் ஏற்கவில்லை.
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி போயஸ் கார்டன் இல்லத்தில் திடீரென ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. படுக்கையறையில் நாங்கள் இருவரும் அப்போது பேசிக் கொண்டிருந்தோம். கழிப்பறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார் . அப்போது தனக்கு மிகவும் சோர்வாக இருப்பதாக தெரிவித்தார். அவரை நோக்கி வேகமாக நடந்து சென்றேன். திடீரென அவர் என் மீது விழுந்து விட்டார். ஒரு கையில் அவரை பிடித்துக்கொண்டு மருத்துவர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்தேன்.
போயஸ் இல்லத்தில் இருக்கும் போது இந்த வயர்லெஸ் தொலைபேசியை எனது சல்வார் கமீஸ்க்குள் எப்போதும் வைத்திருப்பேன். எப்போது தேவை என்றாலும் அக்கா என்னை அழைப்பதற்கு அந்த தொலைபேசி தான் துணையாக இருந்தது. அதில்தான் டாக்டர்களை அழைத்தேன். ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மிக விரைவில் அவர் திரும்பி விடுவார் என்றுதான் நினைத்திருந்தேன். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அவர் நலமாக தான் இருந்தார். காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த நாள் அவர் அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். ஆனால் 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், எங்களது வேண்டுதல்கள் எதுவும் நிறைவேறாமல் இறந்துவிட்டார்.
டிசம்பர் 4ஆம் தேதி சாயங்காலம் கூட ஜெயலலிதா நலமாக இருந்தார். டிசம்பர் 19ஆம் தேதி அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தோம். டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டு இருந்தார். மருத்துவமனை டயட் நிபுணர் மற்றும் போயஸ்கார்டன் சமையல்காரர் ஆகிய இருவரும் பன் மற்றும் ஃபில்டர் காஃபி ரெடி செய்வதற்காக மருத்துவமனையில் உள்ள கிச்சன் பகுதிக்கு சென்றனர். பன் மேற்புறம் சற்று முறுகலாக இருந்தால்தான் அக்காவுக்கு பிடிக்கும். எனவே, நானும் அதை மேற்பார்வையிட சமையலறை சென்றேன். காபி மற்றும் பன்னை டிராலியில் வைத்து தள்ளியபடி படுக்கையை நோக்கி நான் சென்றேன். அப்போது படுக்கையில் அமர்ந்து இருந்தபடியே “ஜெய் ஹனுமான்” தொலைக்காட்சி தொடரை அவர் பார்த்து கொண்டு இருந்தார். காபியுடன் அவரை நான் நெருங்கிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு பெருமூச்சு விட்ட, அவர் அங்கேயே படுக்கையில் சரிந்து விழுந்தார். நான் அவரைப் பார்த்து, அக்கா.. அக்கா.. என்று கத்தினேன். அவரால் கண்களை திறக்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. எனவே அவர் ஐசியூ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.’