“ஆசை காதல்” என்ற வார்த்தையை. இடது பக்கமாக படித்தால் வரும் சொல்லைத்தான் படத்தின் தலைப்பு “ல் தகா சை ஆ” . ராம் – ரம்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ள புதுமண ஜோடி. ராம் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். ரம்யா கர்ப்பமாக இருக்கிறார்.இந்நிலையில் ராமுக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருகின்றன. அந்தக் கனவுகள் நிஜத்தில் பலிக்கின்றன. ராம் ஒரு விலை மகளுடன் இருக்கும்போது அந்தப் பெண் இறந்து விடுகிறாள். ஒன்றும் புரியாமல் சடலத்தை எடுத்துக் கொண்டு காரில் பயணிக்கிற ராமுக்கு பல்வேறு இடையூறுகள். போலீஸ் மோப்பம் பிடித்து அவரைப் பிடிக்கிறது. தப்பி ஓட முயலும் அவரைச் சுடுகிறது. இப்படி ஒரு கனவு வருகிறது .ராம் காணும் ஒவ்வொரு கனவாக பலித்து வரும் நிலையில் இப்படி ஒரு கெட்ட கனவு வந்ததும் அவர் பதற்றம் அடைகிறார். இதனால் அவர் எதிலும் நிலை கொள்ளாமல் மனம் பிறழ்ந்தவர் போல் காணப்படுகிறார். இதைப் பார்த்து, தன் காதல் கணவனுக்கு ஏதோ ஆயிற்று என்று மனைவி கவலைப்படுகிறார். ராம் காணும் அந்தக் கனவு நிஜத்தில் நடந்ததா ? ராம் அதை எப்படி எதிர்கொண்டார் ? என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை. படத்தில் சதா நாடரும் அவர் மனைவி மோனிகா செலேனாவும் நாயகர்களாக நடித்துள்ளார்கள். படத்தின் முக்கால் பாகம் கணவன் மனைவியின் படுக்கையறை காட்சிகளாகவே நிறைந்திருக்கிறது. மனைவியை கொஞ்சுவதற்கு முக்கியத்துவம் கொடுத்த் இயக்குநர் சதா நாடார் கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் ஒரு விறுவிறுப்பான படத்தை பார்த்திருக்கலாம். மோனிகா செலேனா ஒரு வணிகப் படத்திற்கான முகவெட்டும் திரைத் தோற்றமும் கொண்டவராக இருக்கிறார்.அவர் வணிக ரீதியிலான ஒரு கதாநாயகியின் திரைத் தோற்றத்தை அவர் ஈடு செய்கிறார். அந்த அளவிற்கு அவர் தோற்றமும் நடிப்பும் ஒரு அனுபவம் உள்ள நடிகையைப் போல் இருக்கிறது. மொத்தத்தில் புதிய படக் குழு தயாரித்திருந்தாலும் பல்வேறு சின்ன பட்ஜெட் படங்களை விட இந்தப் படம் பட உருவாக்கத்தில் ஆறுதல் அளிக்கிறது என்று கூறலாம்.