விவசாயிகள் மீது வாகனம் மூலம் தாக்குதல்! – 4 பேர் பலி! மத்திய அமைச்சர் மகன் மீது கடுமையான நடவடிக்கை தேவை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் போராடிய விவசாயிகள் மீது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தைக் கொண்டு மோதவிட்டு நடத்திய கொடூரமான தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி வன்மையாக கண்டித்துள்ளார். நான்கு விவசாயிகளை கொன்ற மத்திய அமைச்சர் மகனுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஃபைஸி வலியுறுத்தினார். வாகனத் தாக்குதலில் கொல்லப்பட்ட விவசாயிகளான லவ்ப்ரீத் சிங் (20), தல்ஜீத் சிங் (35), நச்சட்டர் சிங் (60) மற்றும் குர்விந்தர் சிங் (19) ஆகியோருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த ஃபைஸி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.

“உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைந்ததிலிருந்து, மாநிலத்தில் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான கும்பல் கொலைகள், திட்டமிடப்பட்ட என்கவுன்ட்டர் கொலைகள், கூட்டு பாலியல் வன்முறைகள் மற்றும் கொலை போன்றவை வாடிக்கையாகிவிட்டது. ஆளும் கட்சி மற்றும் அதன் விளிம்பு குழுக்களின் கூட்டாளிகளால் உ.பி. சிதறுண்டுள்ளது. உண்மையில் யோகியின் ஆட்சி காட்டுத் தர்பார் ஆட்சியாக மாறிப் போயுள்ளது. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், கார்ப்பரேட் ஆதரவு அரசால் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏறக்குறைய ஒரு வருடமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் பல விவசாயிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஆளும் ஒன்றிய அரசாங்கம் அதன் நெருங்கிய முதலாளித்துவத்தின் பாட்டுக்கு ஏற்ப நடனமாடுவதோடு விவசாயிகளின் கோரிக்கைகளை மறுக்கிறது. இந்த மோசமான சூழ்நிலையில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் தனது 3 வாகனங்களுடன், மத்திய அமைச்சருக்கு எதிராக ஹெலிபேடில் போராட்டம் நடத்திய பின்னர் கலைந்து சென்ற விவசாயிகள் மீது வெறித்தனமாக மோதியுள்ளார். எஸ்.கே.எம் என்ற விவசாய அமைப்பின் தலைவர் தஜிந்தர் சிங் விர்க் மீது ஒரு வாகனத்தை இயக்கி நேரடியாக தாக்கியுள்ளார். அதோடு விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இத்தகைய குற்றச்செயல்களுக்கு ஆதரவான நிர்வாகத்தின் மவுனமே, வன்முறையாளர்களையும், குண்டர்களையும் இத்தகைய வன்முறை செயல்களில் ஈடுபடுத்துவதற்கு தூண்டுகிறது. இந்த சம்பவத்தில் குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ரா, தனது தந்தையின் மத்திய அமைச்சர் சலுகையை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இதற்கெதிரான அரசாங்கத்தின் எந்தவொரு வழக்குகளிலிருந்தும் அமைச்சரின் அதிகாரம் அவரை காப்பாற்றும் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.” என பைஸி தெரிவித்தார். மேலும், விவசாயிகள் மீதான இத்தகைய வன்முறை சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் எழ வேண்டும் என தெரிவித்த பைஸி, இந்துத்துவா பாசிஸ்டுகளின் அகராதியில் இல்லாத நீதியை, பாஜக ஆளும் உ.பி. அல்லது ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்திய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துக்கொள்ளவும், அமைச்சரின் மகன் உட்பட அனைத்து குற்றவாளிகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஏ.கே.கரீம்
ஒருங்கிணைப்பாளர்