திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவர் கோட்டைகரை பகுதியில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், அவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கடந்த 4-ஆம் தேதி ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போது கல்யாணியின் மகன் ராஜ்குமார் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் முன்னிலையிலேயே தனது உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் கவனக்குறைவாக இருந்ததாக வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்த வீடு இருக்கும் நிலம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர் வட்டாட்சியர் கண்ணன் என்பவர் அந்த இடத்தை நேரடியாக ஆய்வு செய்து அந்த இடம் பட்டா இடம் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் அந்த இடம் ஆக்கிரமிப்பு இடம் எனக்கூறி மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் அவர்களது வீட்டை அகற்ற வந்ததால், ஏற்பட்ட மன உளைச்சலில் கணவனை இழந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கின்றது.
பட்டா நிலம் குறித்து முறையாக விசாரிக்காமல், கடும் போக்குடன் அதிகாரிகள் நடந்துகொண்டதே ராஜ்குமார் தீக்குளிப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. அரசுக்கு சொந்தமான இடங்களையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து மிகப்பெரும் கட்டிடங்கள், வர்த்தக நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அவற்றுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள், ஏழை ஒருவரின் குடிசை வீட்டை அகற்ற கடுமை காட்டி, அதனால் ஒரு உயிர் பறிபோயிருப்பது வேதனை அளிக்கின்றது. இந்த விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கணவனை இழந்து மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்துவரும் கல்யாணி, தனது மகனின் இழப்பால் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார். ஆகவே அதிகாரிகளின் கடுமையான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் ராஜ்குமாருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.