இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் தமிழகத்தில் பெரும்பாலான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த திரைப்படம் இந்தியாவில் பெரும்பாலானோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைத்து மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியும் இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் SDPI கட்சியினர் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள சாந்தி (தனியார்) திரையரங்கை கோவை மாவட்ட SDPI கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ள சுமார் 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு திரையரங்கை நெருங்கி வரும் பொழுது போலிசார் அவர்களை தடுப்புகளைக் கொண்டு தடுத்தனர். தடுப்புகள் மீறி வருவதற்கு முயன்ற போதிலும் காவல்துறையினர் தடுத்ததால் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர். பின்னர் காவல் துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்டிபிஐ மாநில துணைச் செயலாளர் காஜா உசேன், அமரன் திரைப்படத்தில், ஒரு தனி மனிதனின் புகழை பாடுவதற்காக ஒரு சமூகத்தில் அனைத்து மக்களையும் குற்ற பரம்பரையாக சித்தரித்து காண்பித்துள்ளதாக தெரிவித்தார். இந்த படத்தில் ராணுவ வீரரின் கதையை காண்பிக்கின்ற சினிமாத்துறை காஷ்மீரின் மறுபக்கத்தை காண்பிக்க தவறி விட்டனர் என்றார். உண்மை வரலாறு என்று பேசக்கூடிய இந்த கதையை உண்மையில் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறைத்து காண்பித்துள்ளதாக விமர்சித்தார். காஷ்மீரில் பல்வேறு பெண்கள் இளம் விதவைகளாக வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் அங்கு இருக்கக்கூடிய காவல் துறையையும் ராணுவமும் அங்கு இருக்க கூடியவர்களை சிறை பிடித்து செல்லக்கூடியது தான் என தெரிவித்தார்.
தமிழக மக்களிடையே மதவெறுப்பை தூண்டுகின்ற வகையில் இந்த படம் அமைந்துள்ளதாகவும் சிறுபான்மை இன மக்களின் காவலர் என்று கூறிக் கொள்ளும் தமிழக முதல்வரே இந்த படத்தை தடை செய்வதற்கு பதிலாக அந்த படத்தை பாராட்டியிருப்பது கண்டனத்திற்குரியது வருந்தத்தக்கது என தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வரே இந்த படத்திற்குச் சான்றளித்திருப்பது மத வெறுப்பை ஊக்குவிக்கின்ற வகையில் அமைந்துள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதியின் நிறுவன விநியோகத்தில் இந்த படம் வந்துள்ளதால் முதல்வரே இந்த படத்திற்கு விளம்பர்தூதுவராக மாறி இருப்பதாகவும் விமர்சித்தார்.
தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என தெரிவித்தார். ராணுவ வீரரின் தியாகம் போற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என தெரிவித்த அவர் அதே சமயம் அங்கு இருக்கக்கூடிய உண்மை நிலையை தான் எடுத்துக் கூறும் வகையில் படம் இருக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். இந்த படத்தை தடை செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.