உத்தர பிரதேச காவல்துறையால் ஆறு முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பால் நகருக்கு வருகை தந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை தடுத்த செயலுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழ.ஷர்ஃபுதீன் அஹமது தனது அறிக்கையில் கூறுகையில்; உ.பி. அரசின் ஜனநாயகமற்ற மற்றும் சர்வாதிகாரத்தனமான இந்த செயல், தலைவர்களின் அரசியல் சாசன உரிமையை முற்றிலும் மறுப்பதாகும். அநீதியையும், தம்மைப் பாதிக்கும் பிரச்சனைகளையும் எதிர்க்கும் உரிமை குடிமக்களுக்கு இருக்கிறது. அதிகாரம் மற்றும் பலத்தை பயன்படுத்தி இதுபோன்ற போராட்டங்களை ஒடுக்கவோ, போராட்டக்காரர்களை சுடவோ அதிகாரிகளுக்கு உரிமை இல்லை.
காவல்துறையினரால் கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவே எதிர்க்கட்சித் தலைவர்கள் சம்பாலுக்குச் சென்றனர். இந்த மனிதாபிமான செயலைத் தடுப்பது ஒரு நாகரீக சமுதாயத்திற்கு ஏற்புடையதல்ல.
உ.பி.யில் உள்ள சம்பால் ஜாமிஆ பள்ளிவாசலில் ஆய்வு மேற்கொள்வதற்கு எதிரான போராட்டத்தின் போது, காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு முஸ்லிம் இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தது பற்றிய உண்மைகளை உலகம் அறிய உ.பி அரசு விரும்பவில்லை. அரசாங்கத்தின் தோல்விகளை மறைப்பதற்கும், விமர்சனம் எழும் பிரச்சனைகளில் அரசாங்கம் சொல்வதை மக்கள் நம்ப வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் துயர நிகழ்வுகள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதைத் தடுக்கிறார்கள். ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நிகழ்விலும் இதுதான் நிகழ்ந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், போராட்டக்காரர்கள் மீதே குற்றத்தை சுமத்த உ.பி. அரசு முயல்கிறது. போராட்டக்காரர்கள் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக பிரச்சாரம் செய்து வந்த காவல்துறை, அந்த இடத்தில் இருந்து ‘பாகிஸ்தான் தயாரிப்பு’ தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக தற்போது போலிக் கதையை பரப்பி வருகிறது. ‘பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட’ தோட்டாக்கள் கொண்ட நாட்டுத் துப்பாக்கிகளை ஏந்திய போராட்டக்காரர்கள், காவல்துறையை நோக்கிச் சுடாமல் போராட்டக்காரர்களையே ஏன் சுட்டுக் கொன்றார்கள், துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவலரும் ஏன் காயமடையவில்லை என்பதை மக்களுக்கு சொல்லத் தவறுகிறார்கள்.
உண்மைகளை மூடி மறைத்து, ஆறு இளைஞர்களைக் கொன்ற குற்றவாளிகளைப் பாதுகாக்க, உ.பி. அரசு முயல்கிறது. இத்திட்டத்தை முறியடித்து உண்மையை வெளிக் கொண்டுவர பாஜக அல்லாத கட்சிகள் முன்வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.