சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏன்? – எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “கொரோனா பாதிப்பின் காரணமாக சிறைச்சாலைகளில் தொற்று பரவாமல் தடுக்க  தகுதிவாய்ந்த சிறைவாசிகளைப் பிணையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு கடந்த மே மாதல் சில முக்கிய உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நிலையில், அந்த வழக்கின் நீட்சியாக மீண்டும் கடந்த ஜூலை 16 அன்று மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசால் உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்டும் சிறைக்கைதிகள் எவரும் அதனடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்படவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது. கொரோனாவின் மூன்றாவது அலை பரவல் தொடர்பான மருத்துவ வல்லுநர்களின் எச்சரிக்கை வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் நடவடிக்கையில் கால தாமதம் ஏன்?  

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுக்கள் அதே வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் சிறைவாசிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, மாநில உயர்நிலைக் குழுவின் பரிந்துரைப்படி விடுவிக்கப்பட்ட அனைத்து சிறைவாசிகளையும் மீண்டும் பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும், புதிதாக சிறைவாசிகளை பிணையில் விடுவிப்பது பற்றியும் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. மேலும், மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் முடிவுகளும் சிறைவாசிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் அந்தந்த மாநில சிறைத் துறையின் இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. இதனடிப்படையில் பல மாநிலங்கள் உயர்நிலைக் குழுக்களை அமைத்து சிறைவாசிகளை பிணையில் விடுவித்துள்ளன.

ஆனால், தமிழகத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு உயர்நிலைக்  குழு அமைக்கப்பட்டு, அக்குழு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா அவர்கள் தலைமையில் கடந்த மே 19 அன்று கைதிகளுக்குப் பிணை வழங்குவது தொடர்பாக 9 பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. ஆனால் குழுவின் பரிந்துரைப்படி சிறைவாசிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. சிறைவாசிகளுக்கு பிணை வழங்கும் அரசின் நடவடிக்கையில் சிறைக் கைதியின் வயது, அவருக்குள்ள இணை நோய்களின் விவரம் ஆகிய அம்சங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என கடந்த ஜூலை 16 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த கூடுதல் உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு மேலும் காலம் தாழ்த்தாமல், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள் மற்றும்  தண்டனைக் கைதிகளை பிணையில் விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.கரீம்