இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றோரமாக 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜூலை 29 அன்று, காவல்துறை உதவியுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருபகுதி குடிசைகளை அப்புறத்தினர். இவர்களில் 2014ம் ஆண்டு குடிசை மாற்று வீடுகளுக்காக பதிவு செய்யப்பட்ட 94 குடிசை வாசிகளுக்கு மட்டும் கே.பி.பார்க்கில் உள்ள குடிசை மாற்று வாரிய தொகுப்பு வீடுகளில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். வீடுகள் ஒதுக்கப்படாத சுமார் 23 குடும்பத்தினர் பரிதவித்து நிற்கின்றனர். இதனால் வீடற்றவர்களாக குழந்தைகளுடன் திறந்தவெளியில் தங்கியிருக்கும் மிகவும் பரிதாபகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அனைவருக்கும் முறையான மாற்று வீடுகளை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சென்னையின் பூர்வகுடி மக்களாகிய இவர்களை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து பல கிலோ மீட்டருக்கு அப்பால் நகர்த்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். ஏனெனில் பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் வாழும் குடிசைப் பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் அந்த பகுதிகளிலேயே அமைத்துக் கொள்வதால், பல கிலோ மீட்டருக்கு அப்பால் அவர்களை வலுக்கட்டாயமாக நகர்த்துவது அவர்களின் வாழ்வாதாரத்தையும், குழந்தைகளின் கல்வியையும் மிகவும் பாதிக்கும். இதன் காரணமாகவும் குடிசைப் பகுதி மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வெளியேற மறுக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அரசின் நோக்கம் மற்றும் திட்டங்கள், குடிசைப் பகுதிகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, குடிசை வாசிகளை நடைபாதை வாசிகளாக மாற்றுவதாக அமைந்து விடக் கூடாது. ஆகவே, தமிழக அரசு இந்த விசயத்தில் மிகக் கவனமுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு பிரச்சினை வராமல், அனைவருக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்த பின்னர் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, அரும்பாக்கம் ஆர்.கே. நகரில் வீடு இழந்து பரிதவிக்கும் 23 குடும்பத்தினருக்கும் கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பிலேயே வீடுகளை ஒதுக்கித் தர வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர்: கரீம்.