தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில்,கட்சித் தலைமை அலுவலகத்தில் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மண் பானைகளில் பொங்கல் வைத்து, கரும்பு மற்றும் பழங்கள் வைத்து சூரியனையும், இயற்கையையும் உழவையும் வணங்கி, கும்மி பாட்டு இசைக்க ஆடவரும் மகளிரும் ஆடிப் பாடி கொண்டாடினர். இவ்விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று சிறப்பித்தார்.
இவ்விழாவின் நிறைவாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான் அவர்கள், “நிலத்தை உழுது, விதைத்து, விளையவைத்து, அறுவடை செய்து, அந்த புதிய நெல்லை அறுத்து வந்து புடைத்து, புதுப்பானையில் பொங்கலிட்டுக் கொண்டாடுகிற அறுவடைத் திருநாளாகவும், தமிழ்ப் பேரினத்தினுடைய பெருமைக்குரிய திருநாளாகவும் பொங்கல் பண்டிகை திகழ்கிறது. எங்களோடு உழவாண்மைக்கு உடனிருந்து உழைக்கும் உறவாக இருக்கின்ற மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பாக மாட்டுப் பொங்கல் என்று மாட்டுக்கு ஒரு பண்டிகை வைத்துக் கொண்டாடும் ஒரே இனம் தமிழினம். சூரியன் இல்லாது பூமியில் எந்த இயக்கமும் இல்லை. ‘நீரின்றி அமையாது உலகு’ என்று தமிழர் மறை போதிக்கின்றது. அந்த மழைப் பொழிய காரணமாக இருப்பது ஞாயிறு என்கிற சூரியன். ஞாயிறின் கதிரொளியில் தான் கடல் தாயின் நீர் வெப்பத்தால் நீராவியாகி பின்பு குளிர்ந்து மேகமாகி, நீரை மழையாக பூமிக்குப் பொழிகிறது. இது இயற்கையின் அருங்கட்டமைப்பு, பெருங்கொடை.
எங்களுடைய வள்ளுவப் பெருமகனார், ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற குறளைப் பாடும் போது, ‘ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று பாடுகிறார். அதன் பொருள் விளக்கம் என்பது, உலகத்தின் எல்லா மொழிகளும் அகர ஒலியில் தொடங்குவது போல உலகம் தோன்றியது ‘ஆதி பகவன்’ என்பது பகலவன் என்கிற சூரியனிலிருந்து தான் என்று குறிக்கின்றது. சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய பல கோள்களில் ஒன்று தான் பூமி. அத்தகைய சூரியனுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பாக சூரியனை வணங்கி கொண்டாடப்படும் விழா தான் பொங்கல் திருநாள்.
மருதத் திணையில் நாங்கள் வேளாண்மை செய்வதற்காக, அதாவது நிலத்தை ஏர் கலப்பைக் கொண்டு உழுவதற்காக, மாடுகளின் திமிலோடு ஏறி, தழுவி விளையாடி, மாட்டோடு நட்பு கொண்டு, காட்டு விலங்கை வீட்டு விலங்காக மாற்ற பழகுவதனால், அதை ஏறுதழுவுதல் என்று அழைக்கின்றோம். சங்க இலக்கியத்திலே, ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்‘ என்று பாடுகிறது. இப்பிறவியில் மாட்டை அடக்க அஞ்சுகிற ஒரு ஆண் மகனை அடுத்தப் பிறப்பில் கூட திருமணம் செய்ய விரும்பமாட்டாள் ஆய மகள் என்று பொருள் கொண்டது தான் அப்பாடல். அப்படி எங்கள் மரபுவழித் திருநாள் தான் பொங்கல் என்னும் பண்டிகை. தமிழ் தேசிய இனத்தின் பண்டிகை பொங்கல் பெருவிழா ஒன்றுதான். அதனை நாங்கள் நெகிழ்வோடும், உள்ளமகிழ்வோடும் உலகெங்கும் வாழும் தமிழ்ப் பேரினத்தின் மக்கள் கொண்டாடுகின்றோம். உங்கள் அனைவருக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.
பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், “பொங்கல் திருநாள், தமிழ்த்தேசிய இனத்தின் பண்டிகைப் பெருநாள். இந்த மாதம் முழுவதும் நாங்கள் உரியடித்தல், ஏறுதழுவுதல் போன்ற பல்வேறு கொண்டாட்டங்களை மேற்கொள்வோம். ஆனால், பொங்கல் பண்டிகையை இந்துக்களின் பண்டிகை என்று நீங்கள் சொல்வது போல வலிந்து எங்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. இது ஒன்று மட்டுமல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக இவர்கள் பல்வேறு திணிப்புகளைச் செய்திருக்கின்றார்கள். முருகனும், மாயோனும் எங்கள் தமிழினத்தின் இறை தான். இந்து என்கிற மதம் உருவாகுவதற்கு முன்பிருந்தே சிவனும், முருகனும் தமிழினத்தின் இறைகளாக இருக்கின்றார்கள். நாம் பல்வேறு வேலைகளின் காரணமாக மன அழுத்தத்தில் இருக்கும்போது ஒரு பொழுதுபோக்குத் தேவைப்படுகிறது. அப்படி இந்தத் திணிப்புகளை எல்லாம் நாங்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறோம்” என்று கூறினார்.
“ஆளுநர் அவராக ஏதும் சொல்லுவதில்லை, அவருக்கு அப்படிப் பேச சொல்லுகின்றார்கள், அதை அவர் பேசுகின்றார். இது எங்கள் நாடு, தமிழ்நாடு. இந்த நிலப்பரப்பு மட்டுமல்ல அவர்கள் கூறும் இந்திய நிலப்பரப்பும் எங்கள் நாடு தான். பாரத நாடே பைந்தமிழர் நாடு தான். வேண்டுமென்றால் ஆளுநர் என்னோடு நேருக்கு நேர் தர்க்கம் செய்யட்டும். இத்தனை நாட்கள் ‘பாரத மாதாவிற்கு ஜே’ என்று முழக்கமிட்டவர்கள் இப்போது ஏன் ‘தமிழ்த்தாய் விருது’ வழங்குகின்றார்கள்? ஏனென்றால், தமிழ் தேசிய இனம் எழுச்சிக் கொண்டுள்ளது. ‘தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!’ என்று தமிழ் இளம் தலைமுறையினர் எழுச்சியும், புரட்சியுமாக முழக்கமிடுவது இவர்கள் காதில் விழுகிறது. அதனால், பாரத மாதா விருதுக்குப் பதில் தமிழ்த்தாய் விருது கொடுக்கப்படுகிறது. இங்கே அவர்கள் வாக்கு வாங்க வேண்டுமென்றால் நாங்கள் பேசும் அரசியலைத் தான் பேசியாக வேண்டும்.”
“எங்களுக்கு ஆரியமும், திராவிடமும் ஒன்று தான். ஆரிய மாயை என்றார்கள் திராவிடர்கள். நாங்கள் ஆரியம், திராவிடம் இரண்டுமே மாயை தான் என்கிறோம். இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதனால் நாங்கள் இரண்டையும் சம அளவில் எதிர்க்கின்றோம். நான் பேசுவதையே தற்போது முதல்வரும் பேசுகின்றார். மொழி சிதைந்தால் இனம் அழியும், பண்பாடு அழியும் என்று நான் பல ஆண்டுகளாக பேசி வருகிறேன். அதையே அவரும் பேசுகிறார். ஆனால் அந்த மொழியைக் காக்க இவர்கள் எடுத்த முன்னெடுப்பு என்ன? இவர்கள் மொழியைச் சிதைக்கின்றார்களா? அல்லது மீட்டுருவாக்கம் செய்கின்றார்களா? இவர்கள் விளம்பரம் செய்யும் ஒரு அரசு திட்டம், ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்று இருக்கிறது. அது ஏன் ‘நம் பள்ளிக்கூட கட்டமைப்பு’ என்று தமிழில் இல்லை? சென்னை கடற்கரையில் ‘நம்ம சென்னை’ என்று இருக்கிறது. அதில் ‘நம்ம’ என்பது தமிழிலும், ‘சென்னை’ என்பது ஆங்கிலத்திலும் இருக்கிறது. இவர்களே மொழியைச் சிதைத்துவிட்டு, நான் உளமார பேசியதை, அவர்கள் வெறும் பெயருக்காகப் பேசுகிறார்கள். இவர்களுக்கு அந்த நிர்பந்தத்தைக் கொடுத்ததே தமிழ்த்தேசிய அரசியல் தான்” என்று தெரிவித்தார்.