கொலசாமி பாடல்

ஏஞ்சாமி கொலசாமி கொல்லப்புறம் நிக்குதைய்யா
வீட்டுக்கே வந்தாலும் வயலோடு வாழுமைய்யா
காடு கரையெல்லாம் கண்ணாகக் காக்குதைய்யா
ஊனாக உயிராக ஊரிலே உறையுதைய்யா

களத்து மேட்டுலயும் நெல்லுவயக் காட்டுலயும்
குடிலக் கட்டிக்கிட்டோம் குடும்பமா கூடிக்கிட்டோம்
கோழிக் குஞ்சோடும் ஆடுஎரும மாட்டோடும்
காத்தோடும் கருப்போடும் பாம்போடும் வாழ்ந்துவாரோம்
தொப்புள் கொடியாக வெவசாயம் செய்துவாரோம்

கையக் காலப்புடுச்சுவிட்டு வயக்காட்ட உழுதுவிட்டு
நாத்துவிட்டு நட்டுப்புட்டு நடுராத்திரி தூங்கிப்புட்டு
கருசமண்ணா காடுபூராம் கருகருன்னு வயக்காடு
காலையிலே நடையக்கட்டி களையெடுக்கப் போறோமுங்க

கோரப்புல்லு கொக்கரிக்க களக்கொல்லி மருந்தடிக்க
வெட்டவெளிக் காட்டுல வேகாத வெயிலுல
வாயக்கட்டி வயித்தக்கட்டி நெலத்தோரம் வரப்பக்கட்டி
வயத்தண்ணி பாயுதுங்க நாள்கணக்கா ஆகுதுங்க
வாய்க்காத் தண்ணி வத்தி போச்சியோ- ஏன்
வாயித் தண்ணி வத்தி போச்சியோ
வாய்க்காத் தண்ணி வத்தி போச்சியோ- ஏந்
தொண்டத்தண்ணி வத்தி போச்சியோ

கருகருன்னு மிளகாச்செடி தகதகன்னு மொட்டோட
கணக்கெல்லாம் கச்சிதமா கனவெல்லாம் மாளிகையா
நெலத்தோடு எம்வாசம் மனசெல்லாம் தாய்ப்பாசம்
ஏஞ்சாமி கொலசாமி கோயிலுக்கு போவான்னு
ஏவீட்டு பெருஞ்சாமி வளத்திருக்கு தலமுடி

காப்பித்தண்ணி குடிக்கையிலே கருமேகம் கூடிருச்சே
காடெல்லாம் வெள்ளமாயி கனவெல்லாம் கலஞ்சுருச்சே
பூவெல்லாம் மெதக்குதய்யா மிளகாச்செடி நீந்துதய்யா
கஞ்சிக்கும் கதியுயில்லா கடனாகி நின்னய்யா
பூவெல்லாம் மெதக்குதய்யா மிளகாச்செடி நீந்துதய்யா
கஞ்சிக்கும் கதியில்லாம கடனாகி நிக்குதய்யா
சகதியோட சகதியா சந்ததியே நிக்குதய்யா -இந்த
சகதியோட சகதியா ஏஜ் சந்ததியே
நிக்குதய்யா

மக்கள் தொடர்பு: ஜான்சன்.