விநாயகர் சதுர்த்தி தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு நிபர்களிடம் கூறும்போது வீடுகளில் பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு நீர் நிலைகளில் கரைக்கலாம் என்று தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடத்த கொரோனா தொற்று காரணமாக அனுமதி அளிக்கப்படவில்லை. இது மாநில அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல. மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திய படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்ய பார்க்கிறார்கள். அரசியல் செய்ய எவ்வளவோ வழிகள் உள்ளது. ஆனால் இதுபோன்று மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் செய்ய நினைத்தால் நிச்சயம் தமிழக அரசு அதை அனுமதிக்காது. இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். பக்கத்து மாநிலங்களில் கொரோனா தொற்று 30 ஆயிரத்தை தாண்டுகிறது. உயிர் பலி எண்ணிக்கை 100-யை தாண்டுகிறது. அதுபோல் தமிழகத்திலும் நடைபெறக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இங்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நோய் குணமாக வேண்டுமென்றால் கசப்பு மருந்து சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் அதுபோல தான் இதுவும். வீடுகளில் களிமண்ணால் ஆன பிள்ளையாரை வைத்து வணங்கி வழிபட்டு அதனை நீர்நிலைகளில் தனித்தனியாக கொண்டு சென்று கரைக்கலாம். இவ்வாறான வழிபாட்டை விநாயக பெருமான் ஏற்றுக்கொண்டு நிச்சயம் பொதுமக்களுக்கு நன்மை செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.