ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழில் உருவாக்கி இருக்கும் அரசியல் படம் ‘சேவகர்’ முழுக்க முழுக்க ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் ‘சேவகர்’ இது ஓர் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது. ‘சேவகர்’படத்தில் பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன்,மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் ,மனோ,ஜமீன்குமார்,ஷர்புதீன்,சந்துரு,ராஜ்குமார் நடித்துள்ளனர். இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இசை ஆர் டி மோகன். ஒளிப்பதிவு பிரதீப் நாயர், படத்தொகுப்பு ரஞ்சித், கலை இயக்கம் ஸ்ரீகுமார் ,நடனம் ரேவதி ராவ், பாடல்கள் ராஜேஷ் முருகன், வேலன் ராஜ், அன்பழகன் .,சவுண்ட் இன்ஜினியர் கதிர்.தயாரிப்பு மேற்பார்வை சதீஷ் பாலக்காடு. சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ்,தயாரித்துள்ளார். அவருடன் சுனில் குமார் பி ஜி ,இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் இணைந்துள்ளனர்.
நாட்டில் எங்கு அநியாயம் அக்கிரமம் நடந்தாலும் துணிந்து நின்று தட்டிக் கேட்கும் ஒருவராக கதாநாயகன் பிரஜின். அவருக்கு உடன் நின்று கைகொடுக்க நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அங்கே அனைத்து அட்டூழியங்களும் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன் இருக்கிறார். அவருக்குத் துணை போகும் காவல் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். உற்று நோக்கிய போது அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இந்த அநியாயத்தின் பின்னணியில் ஓர் இணைப்புப் பின்னல் இருப்பது புரிகிறது.இதைக் கண்டு கதாநாயகன் பிரஜின் குமுறுகிறார். தன் இயல்புப்படி அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் பிரஜின், ஒரு மக்கள் சேவகனாக இருக்கும் தனது நீதியின் பாதையில் குறுக்கிடும் தீயசக்திகளை அழிக்க நினைக்கிறார்.அப்போது போலீசையும் எதிர்த்துத் தாக்க வேண்டிய சூழல் வருகிறது. இதனால் அவருக்குப் பல வகையில் தொல்லைகள். அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அப்படிப்பட்ட அவருக்குக் காவல்துறையில் இதயம் உள்ள ஒருவரின் புரிதல் கிடைக்கிறது . அப்படி வரும் ஒரு காவல் அதிகாரி தான் போஸ் வெங்கட். அதன் பிறகு கதையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதைச் சொல்லும் படம் தான் இந்த சேவகர்.
இப்படத்தைத் தயாரிப்பாளர் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரித்துள்ளார் .இவர் அமெரிக்காவில் இருக்கிறார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் சில காலம் வாழ்ந்தவர். திரைப்படங்கள் மீது அவருக்கு அளவு கடந்த ஆர்வம் உண்டு. பால்ய வயதிலேயே ஏராளமான திரைப்படங்களை ரசித்துப் பார்த்ததுண்டு.திரைப்படங்களுக்கான சுவரொட்டிகளைக்கூட ரசித்து ரசித்துப் பார்த்தவர். தானும் ஒருநாள் படம் தயாரித்து தனது பெயரும் இடம் பெற்றுள்ள போஸ்டர் ஒட்டப்பட வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். தனது உலகியல் தேவைகளுக்காகப் பொருளீட்டுவதற்காக அமெரிக்கா சென்றார்.தனது நண்பர் சந்தோஷ் கோபிநாத் படம் இயக்க இறங்கிய போது அவருக்குக் கை கொடுத்து உதவ முடிவெடுத்து, தயாரிப்பாளராகியுள்ளார்.அதன் வழியே தனது பால்ய காலத்துக் கனவையும் மீட்டு நிறைவேற்றிக் கொண்டுள்ளார் எனலாம்.அப்படித்தான் உருவானது ‘சேவகர்’ திரைப்படம்.இந்தப் படத்தில் பிரசன்னா பாடியுள்ள வா வா தமிழா, பாடல், மற்றும் இரண்டு பாடல்கள் படம் வெளியான பின் பேசப்படும்.
இப்படத்தில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட படக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களும் கேரளத்தில் இருந்து வந்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்,முழுக்க முழுக்க தென்காசி சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் தமிழில் புதிய முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு இந்தப் பட முயற்சியில் இறங்கி வெற்றிகரமாக ‘சேவகர்’ படத்தை முடித்துள்ளது இப் படக்குழு.படத்திற்கான மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன விரைவில்’சேவகர்’ வெளியாகியுள்ளது.