கொரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுக்கும் முதல் நடிகர்! – சிரிஷுக்கு கிடைத்த பெருமை
’மெட்ரோ’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிரிஷ், ’ராஜா ரங்குஸ்கி’ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது ‘பிஸ்தா’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து வரும் சிரிஷ், சினிமாவில் பிஸியாக இருந்தாலும் கொரொனாவால் பாதித்த ஏழை மக்களுக்கும்,
திரையுலகினருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பலர், பல உதவிகளை செய்து வருவது போல், நடிகர்
சிரிஷும் அத்தியாவாசிய மளிகை பொருட்கள், உணவு போன்ற உதவிகளை செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், ஏழை மக்களின் உயிரை காக்கும் விதமாக, இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம்களை நடத்தி வருகிறார். சென்னையில் நடத்தப்பட்ட முதல் முகாமில் சுமார் 185 பேருக்கு நடிகர் சிரிஷ் அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். 100 பேருக்கு மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. அதேபோல், இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட முகாமில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் 196 பேருக்கு நடிகர் சிரிஷ் அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மூன்றாவது முகாமில் பொதுமக்கள் 150 பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதோடு, அவர்களுக்கு அரிசி, பருப்பு அடங்கிய மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. இதில், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள், ஏடிஎம்
காவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். இந்தியா முழுவதும் நடிகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தாலும், கொரோனா
தடுப்பூசியை இலவசமாக இதுவரை யாரும் வழங்கவில்லை. அந்த வகையில், இந்தியாவிலேயே நடிகர்களில் சிரிஷ் மட்டுமே இத்தகைய முயற்சியில் முதல் முறையாக ஈடுபட்டு வருகிறார். முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் நடிகர் சிரிஷ் நடத்தி வரும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு, மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும், வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்தாலும், சமூக பணிகளில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் சிரிஷின் இத்தகைய
செயல்களுக்கு திரையுலகினரிடம் மட்டும் இன்றி பொதுமக்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மக்கள் தொடர்பு: சதீஷ்