சினிமாத்தனம் சிறிதும் இல்லாத வாழ்வியல் திரைப்படம் “கொட்டுக்காளி”

-ஷாஜஹான்-

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.ஏஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னோ பென் நடிப்பில் வெளியான படம் “கொட்டுக்காளி”. அன்னோ பென் கிராமத்து இளம்பெண். பேய் பிடித்தவள்போல் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கிறாள். அவளது முறை மாமன் சூரி. அன்னோ பென்னுக்கு செய்வினை மருந்தை யாரோ கொடுத்துவிட்டதாக அவளது குடும்பத்தினர் நினைகிறார்கள். அதை எடுப்பதற்காக தொலைதூரத்தில் இருக்கும் ஒரு கோயிலுக்கு ஆட்டோவிலும் மோட்டார் சைக்கிளிலும் குடும்பத்துடன் செல்கிறார்கள். அந்த கிராமத்து பூசாரி மருந்தை எடுத்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. இசைகருவிகள் எதுவும் இப்படத்தில் பயன்படுத்தப்படவில்லை. சேவலின் குரல்,  மோட்டார் சைக்கிளின் சப்தம்,  ஆட்டோவின் சப்தம், பெண்களின் கூக்குரல், அடிபிடி சண்டையில் எழுகின்ற பேச்சுக்கள் இவைகள்தான் படமுழுக்க உள்ளது. ஆனால் அனைத்தையும் ரசித்து சிரிக்கும்படி உள்ளது. மனிதனின் யதார்த்த வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்த இயக்குநர் வினோத்ராஜ் பாராட்டுக்குறியவர். கீச்சுக்குரலில் அவ்வப்போது பேசி மன அழுத்தத்தை முகத்தில் காட்டிய சூரியின் நடிப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது. மருந்தெடுப்பதாக சொல்லி பூசாரி செய்யும் சில்மிஷத்தை பார்த்தாவது, மூடநம்பிக்கையை விட்டெழிக்கும் எண்ணம் குக்கிராமத்து மக்களுக்கு வரவேண்டும். விருதுகளை நோக்கி செல்கின்ற படம். ஆனால் திரையரங்குகளில் படம் ஓடுமா? என்பது சந்தேகம்தான்.