ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெ.ஜெயப்பால் இயக்கத்தில் விதார்த், ரித்விகா, ஹரிஷ் (சிறுவன்) ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தீபாவளி போனஸ்”. மதுரையிலுள்ள நிலையூர் என்ற ஒரு கிராமத்தில் விதார்த் ஒரு கொரியர் க்ம்பெனியில் வேலை பார்க்கிறார். அவரது மனைவி ரித்விகா ஒரு வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியாக இருக்கிறார். இவர்களது 7 வயது சிறுவன் ஹரிஸ் அரசு பள்ளியில் படிக்கிறான். தீபாவளி நெருங்கி வருகிறது. விதார்த்துக்கு தீபாவளி போனஸ் கிடைக்கவில்லை. செலவுக்கும் பணம் கிடைக்கவில்லை. ஆதலால் சாலையோரத்தில் சட்டைத்துணி விற்க்கும் தன் நண்பனிடம் வேலை செய்கிறார். அப்போது சில ரவுடிகள் விதார்த்தை அடிக்கிறார்கள். இந்த அடிபிடி சண்டையில் விதார்த்தை போலீஸ்காரர்கள் பிடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள். மறுநாள் தீபாவளி வருகிறது. விதார்த்தின் குடும்பம் தீபாவளியை கொண்டாடினார்களா? போனஸ் கிடைத்ததா? என்பதுதான் கதை. பண்டிகை காலங்களில் ஏழைகள் படும் அவதியை படம்பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜெயப்பால். சாதுவான ஏழையாக விதார்தின் நடிப்பு கைத்தட்ட வைக்கிறது. உரக்கப் பேச தெரியாத ஒரு குடும்பத்தலைவனாக படத்தில் வாழ்ந்திருக்கிறார். தன்மானமிக்க மனைவியாக வரும் ரித்விகாவின் நடிப்பு அபாரம். கணவனின் குறிப்பறிந்து வாழ்ககையை ஓட்டும் குடும்பதலைவியாக பிரதிபலிக்கிறார். தீபாவளிக்கு புத்தாடை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏக்கத்தை முகத்தில் அச்சுப்பொறியாக காட்டுகிறான் சிறுவன் ஹரிஷ். ஒளிப்பதிவும் இசையும் படத்துக்கு பலம் சேர்கிறது.