ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேட்டைக்காரி’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ராகுல் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வின்செண்ட் செல்வா வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேலுச்சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் முன்னோட்டக் காணொளியை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்.*********
வைரமுத்து பேசுகையில், “கருப்பர் சாமி என்ற பெயரில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இங்கு இரண்டு கருப்பர்கள் வாழ்த்த வந்திருக்கிறோம். ஒன்று பெரியகருப்பர் அமைச்சர், மற்றொருவர் சின்ன கருப்பராகிய நான். இயக்குநர் காளிமுத்து என்னை வந்து சந்தித்ததும் கதை சொன்னார், கதை எனக்கு பிடித்திருந்தது. கதை நன்றாக இருக்கிறது தம்பி, சினிமா என்பது இன்று கதை இல்லை, ஆக்கம். எப்படி அதை கொடுக்கிறீர்கள் என்பது தான் முக்கியம், என்று சொன்னேன். நெஞ்சில் தைப்பது போன்று காட்சிகளை அமைக்க வேண்டும், அந்த இடத்தில் தான் பார்வையாளருக்கும், இயக்குநருக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இந்த இடத்தில் தான் மற்ற இயக்குநர்களை விட வித்தியாசப்படுத்தி சில இயக்குநர்கள் நிற்கிறார்கள், வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் காளிமுத்து இந்த படத்தை சிறப்பாக எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு பிறந்தது, அதனால் அவருடைய கதைக்கு ‘வேட்டைக்காரி’ என்ற தலைப்பு கொடுத்தேன்.
நான் தலைப்பு கொடுப்பது புதிதல்ல, பொன்மாலை பொழுது என்று எழுதினேன் அது தலைப்பானது, வெள்ளை புறா என்று எழுதினேன் அது ஒரு படத்திற்கு தலைப்பானது. என் பல்லவி பூவே பூச்சூடவா அது அந்த படத்திற்கு தலைப்பானது. இப்போது தான் தெரிந்தது திருப்பாச்சி என் பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட தலைப்பு என்று. இதுபோல் பல படங்களுக்கு என் பாடல் வரிகள் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் யாரும் என்னிடத்தில் வந்து கேட்பதில்லை. இவர்கள் அனைவரும் வைரமுத்து நமக்கானவர், தமிழுக்கானவன் என்று நினைத்து எடுத்துக்கொள்கிறார்கள் அதனால் நான் யாரையும் கேட்பதில்லை. என்னிடம் பலர் நீங்கள் கேட்க கூடாதா என்று கேட்பார்கள். அதற்கு நான் ஜெயகாந்தன் பாணியில் பதில் சொல்ல வேண்டும் என்றால், “இல்லாதவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், இதை ஏன் கேட்க வேண்டும்”. எது எப்படியோ தமிழ் பல வகையில் வளர வேண்டும். ஒரு தலைப்பு என்பது சாதாரணமானதல்ல, அது எப்படி எல்லாம் சுழற்சி முறையில் சுழன்றுக் கொண்டிருப்பதோடு, பல தளங்களில், பல வடிவங்களில் சென்றடையும். நல்ல தமிழ் பெயர் இருந்தால் அதனால் தமிழ் நீட்சியடையுகிறது, ஆட்சி செய்கிறது. ஒரு திரைப்படத்தின் தலைப்பு உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது, அதனால் தான் உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், நல்ல தமிழில் தலைப்பு வையுங்கள். ஆங்கிலத்தில் தலைப்பு வைத்து படம் ஓடினால், அதற்கான சான்றுகள் கொடுத்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயம், தமிழில் தலைப்பு வைத்து அந்த படம் ஓடவில்லை என்றால் அதற்கும் சான்றுகள் கொடுத்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழை தமிழ்நாட்டை கடந்து செல்லுபடியாக வைக்க வேண்டும். அதனால் தான் காளிமுத்துக்கு இந்த வேட்டைக்காரி என்று தலைப்பை வழங்கினேன், அவரும் ஏற்றுக்கொண்டார், அதற்கு அவருக்கு நன்றி.