ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’. இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய், சாய்தீனா , மீசை ராஜேந்திரன், ராணுவ வீரர் காமராஜ், குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். படதொகுப்பு ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக். ‘குற்றம் தவிர் ‘ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை கங்கை அமரன் வெளியிட்டார். விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அதிமுக கட்சியை சேர்ந்த புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி, தொழிலதிபர் பிரகாஷ் பழனி , இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு, பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.*******
படத்தின் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசும்போது. “நாங்கள் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்தாலும் படப்பிடிப்புகள் பெரும்பாலும் அங்கே நடந்திருந்தாலும் தமிழ்நாட்டு நடிகர்களையே முழுதாகப் பயன்படுத்திப் படம் எடுத்து இருக்கிறோம். ஒரு திரைப்படத்தின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிகிறது .அவர்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது .இந்தப் படத்தை வெற்றி பெற வைத்தால் மீண்டும் படமெடுப்பேன். அதேபோல் நான் பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பேன்.எனவே இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். முன்னோட்டம் மற்றும்
பாடல்களை வெளியிட்டு இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது, “முதலில் கர்நாடகத்திலிருந்து படம் எடுக்க வந்துள்ள இவர்களை வரவேற்கிறேன். இங்கே கதாநாயகன் நாயகி தோன்றிய காட்சிகளைப் பார்த்தேன். பொதுவாக இதுபோல வெளியீட்டு நிகழ்ச்சிகளில் படத்தின் பாடல்களைப் போடுகிறார்கள், சண்டைக் காட்சிகளைப் போடுகிறார்கள். ஆனால், சென்டிமெண்ட் காட்சிகளையோ நகைச்சுவைக் காட்சிகளையோ போடுவதில்லை . இனி அதையும் போட்டுக் காட்ட வேண்டும் . அதையும் சேர்த்துக் காட்டுங்கப்பா .அதைப் பார்க்கும் போது தான் நடிகர்களுக்கு நடிப்புக்கான மதிப்பெண் கொடுக்க முடியும். இது ஒரு அறிவுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.எப்போதும் நான் வெளிப்படையாகப் பேசுவேன். ஏதாவது குறை இருந்தாலும் சொல்வேன். எனக்கு மனதில் தோன்றியதைச் சொன்னேன் .அந்தச் சுவைகளுடன் இந்தச் சுவைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா நன்றாக இசையமைத்துள்ளார் .அவர் எனது உறவினர் தான். நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் நண்பர் சுவாமிஜி இங்கே வந்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் நல்ல பழக்கம். என்னை அழைத்து அங்கே பெரிய மரியாதை எல்லாம் செய்தார்கள். இங்கே செண்ட்ராயன் வந்திருக்கிறார் அவர் எங்கள் பக்கத்து ஊர்க்காரர் தான். அவர் பிக் பாஸ் ரகசியங்களை இங்கே சொல்ல வேண்டும். பெங்களூரில் இருந்து படம் எடுக்க இங்கே வந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”என்றவர் ‘மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே ‘என்ற மூகாம்பிகைப் பாடலை முழுதாகப் பாடி முடித்துப் படக் குழுவினரை வாழ்த்தினார்.
இயக்குநர் கஜேந்திரா பேசும்போது, “இது எங்களுக்கு முதல் படம்.நாங்கள் புதிதாகப் படம் எடுக்க வந்திருக்கிறோம் அனைத்து நடிகர்களையும் சென்னையில் இருந்து வரவழைத்து ஒரு தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறோம். இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் .தயாரிப்பாளர் இல்லாமல் திரைப்படம் எடுக்க முடியாது. படப்பிடிப்பில் எந்தக் குறையும் இல்லாமல் அவர் எங்கள் அனைவரையும் நன்றாகப் பார்த்துக் கொண்டார்” என்றார்.
கதாநாயகனாக நடிக்கும் ரிஷி ரித்விக் பேசும்போது, ” நான் வில்லனாக நடித்து வந்தேன் .இப்போது இதில் கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்ற போது நான் முதலில் யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் உடனே ஒரு லட்ச ரூபாய் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது .உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. பருத்திவீரன் படத்தில் பார்த்து நான் வியந்த சரவணன் சார் இப்படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பாஸ்கர், எடிட்டர் ரஞ்சித் போன்றவர்களின் ஈடுபாடும் உழைப்பும் சாதாரணமானதல்ல.அனைவரும் சேர்ந்து விருப்பத்தோடு சிரமப்பட்டு எடுத்திருக்கிறோம். படம் ஒரு நல்ல கருத்தைப் பற்றிப் பேசுகிறது . இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.
கதாநாயகி நடிகை ஆராதியா பேசும்போது, ” ஒவ்வொரு படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சிறப்பாகச் செய்யும் ஊடகங்களுக்கு நன்றி .இந்தப் படத்தையும் கொண்டு செல்லுங்கள் . ‘மதிமாறன்’ படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது .அதன் மூலம் என்னை அனைவருக்கும் தெரிய வைத்த இயக்குநர் மந்த்ரா சாருக்கு நன்றி .நான் இதுவரை 12 படங்கள் நடித்திருக்கிறேன். ஒன்றுதான் வெளியாகி இருக்கிறது. மற்றவை வெளிவர உள்ளன. இந்தப் படத்தில் தயாரிப்பாளர்,அவரது குழுவினர் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். முதன் முதலில் இதில் நடனமாடி நடித்திருக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி “என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “இங்கே பேசியவர்கள் பலரும் எம்ஜிஆர் பற்றிப் பேசினார்கள். எம்ஜிஆர் மட்டும் தான் வில்லனைக் கொல்ல மாட்டார். எந்தப் படத்திலாவது அவர் நம்பியாரைக் கொன்றிருக்கிறாரா?கெட்டது செய்பவர்களைக் கூட திருந்தத் தான் வைப்பார். அதனால்தான் அவரைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.இப்போதெல்லாம் பழிவாங்க உடனே சுட்டு விடுகிறோம். கர்நாடகாவில் பல மொழி பேசுகிறார்கள் என்றார் செண்ட்ராயன். அப்படியானால் அவர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தருகிறார் என்று கூறலாமா? சினிமாதான் அனைத்து துறையினரையும் ஒன்றிணைத்து வாழவைக்கும் துறை. இங்கே பாருங்கள் ஆன்மீக துறையினர், அரசியல் துறையினர், ராணுவத்தினர், காவல்துறையினர், ஊடகத் துறையினர் என அனைவரும் இணைந்து இருக்கிறார்கள். ஒரு துறை விழா என்றால் அந்தத் துறை சார்ந்தவர்கள்தான் கலந்து கொள்வார்கள். ஆனால் சினிமாவில் தான் எல்லாத்துறையினரும் இணைகிறார்கள். இங்கே ஸ்ரீகாந்த் தேவா வந்திருக்கிறார் பாடல்கள் சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவர் சிவகாசி படத்திற்குப் போட்ட பாடல்கள் வெற்றி பெற்றன. அப்போதெல்லாம் இசையமைப்பாளர்களை மலேசியா, சிங்கப்பூர், பாங்காக் என்று அழைத்துக் கொண்டு போய் மெட்டுப்போட வைப்பார்கள்.அவருக்கும் வெளிநாடு செல்லலாம் என்று ஆசை இருந்தது. கேட்டுக் கொண்டே இருந்தார். தருமபுரி படத்தில் பணியாற்றி வந்த போது விஜயகாந்த் கட்சி தேர்தல் என்று பரபரப்பாக இருந்தார். படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது. அங்கே வரவழைத்து கேரவனிலேயே மெட்டுப்பட வைத்தேன். மூன்று பாடல்கள் அங்கேயே போட்டுக்கொடுத்தார் . பழனி படம் வந்தபோது பழனிக்கும் திருவண்ணாமலை சமயத்தில் திருவண்ணாமலைக்கும் வரவழைத்து மெட்டுகளை வாங்கினேன் .உள்ளூர் பெயரை வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டேன். கடைசி வரை அவரது வெளிநாடு கனவு பலிக்கவே இல்லை. குற்றங்களைத் தவிர்க்க வேண்டும் .திரையரங்குகளில் படங்களைப் பார்க்க முடியாமல் இறுகப்பற்று, எம காதகி போன்ற படங்களை ஓபிடியில் பார்க்கும்போது எனக்குக் குற்ற உணர்ச்சியாக இருக்கும். அதுபோன்ற குற்றங்களை இனி தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாடல் காட்சிகளைப் பார்த்தோம்.கதாநாயகன் ரிஷியும் நாயகி ஆராதியாவும் நன்றாக ஆடினார்கள்.பாடல்களைப் பாடும் போது ஆராதியாவுக்கு லிப் மூவ்மெண்ட் சரியாக இருந்தது. ஆனால் ரிஷிக்கு சரியாக அமையவில்லை.கதாநாயகியின் இடுப்பைப் பார்த்துக் கொண்டே ஆடியதால் அதாவது ‘ஹிப்’பைப் பார்த்ததால், ‘லிப்’பைக் கோட்டை விட்டுவிட்டார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார்.
விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் படக் குழுவினருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்று கர்நாடகத்துப் பாரம்பரிய முறையில் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்தது , எந்தவொரு தமிழ் திரைப்பட திருவிழாவிலும் காண முடியாத பண்பாட்டுச் செயல் பாடாக இருந்தது.