“மழையில் நனைகிறேன்” திரைப்பட விமர்சனம்

ஶ்ரீவித்யா ராஜேஷ், மற்றும் ரஜேஷ் குமார் தயாரிப்பில், சுரேஷ் குமார் இயக்கத்தில் அன்சன் பால், ரேபா ஜான், மேத்யூ வர்சி, அனுபாமா குமார், கிஷோர் ராஜ்குமார், ஷங்கர் குரு ராஜா, வெற்றிவேல் ராஜா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மழையில் நனைகிறேன்”. அன்சன் பால் வசதியான கிறிஸ்துவ குடுப்பத்தில் பிறந்தவர் வேலை இல்லாமல் படிக்காமல் நண்பர்களுடன் குடித்துவிட்டு ஜாலியாக ஊர் சுற்றுபவர். அனுபாமா குமார் வசதியான ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்து நன்றாக படித்து அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்ற கனவில் வாழ்ந்து வருகிறார். அன்சன் பால் அனுபாவை பார்த்ததும் அவள் மீது காதல் கொள்கிறார். இதற்கு அனுபாமா முதலில் மறுக்கிறார். பிறகு அன்சன் பால் மீது காதல் கொள்கிறாள். தன் காதலை சொல்வதற்காக அன்சன் பாலுடன் மோட்டார் சைக்கிளில் செல்கிறாள். தன் காதலை சொல்வதற்குள் மோட்டார் சைக்கிள் மீது ஒரு கார் மோதி பெறும் விபத்து நடக்கிறது. இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் மீதிக்கதை. படத்தின் முன்பகுதி கதாநாயகன் ஜாலியாக ஊர் சுற்றுவதும் கதாநாயகி படிப்பில் கவனம் செலுத்துவதுமாக திரைக்கதை நகர்கிறது. படத்தின் இடைவேளைக்குப் பிறகுதான் படம், பார்வையாளர்களை நிமிர்ந்து உட்காரவைக்கிறது. திரைக்கதையை மெல்லியதாக இலகுவாக ஆராவாரமில்லாமல் அமைதியான சூழ்நிலையில் படமாக்கியிருக்கும் இயக்குநர் சுரேஷ் குமார் பார்வையாளர்களின் மனதை கவர்கிறார். வசனகர்த்தாக்கள் விஜி மற்றும் கவின் பாண்டியனைத்தான் கதாநாயகர்கள் என்று சொல்ல வேண்டும். பாராட்டும்படியான அறிவுக்கு பொறுத்தமான வசனங்களை எழுதியுள்ளார்கள். கதாபாத்திரங்களின் ஒவ்வொரு உரையாடல்களும் சிந்திக்கும்படியும் கைத்தட்டவும் வைக்கிறது. இசை படத்துக்கு பக்கபலமாக இசைக்கிறது. உச்சக்கட்ட காட்சியில் யாரும் எதிபாராத திருப்பத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் பாராட்டுதலுக்குறியவர். கதை மட்டும் மழையில் நனையவில்லை. பார்வையாளர்களின் மனமும் கண்களும் “மழையில் நனைகிறது”.