இந்தியாவின் செல்ல மகள் வந்தனா! இழிவை நீக்கி புகழை மீட்போம் – சு.வெங்கடேசன் எம் பி

டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சாதி இந்துக்கள் அநாகரிக நடனம்… பட்டாசு வெடிப்பு… அணியில் அதிகம் தலித்துகள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி என சாதி ரீதியான வசவுகள்… எல்லா விளையாட்டுகளில் இருந்தும் தலித்துகளை வெளியே அனுப்ப வேண்டுமென்று கூச்சல்… உத்தரகாண்ட் மாநிலம், அரித்துவார் ரோஷனாபாத் என்ற கிராமத்தில் இந்தியாவின் செல்ல மகள் வந்தனா குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதி… இதே போட்டியில் மூன்று முறை தங்கம் வென்ற முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இதே அணிதான்… கால் இறுதி போட்டிக்கு இந்தியாவை தகுதியாக்கிய தென் ஆப்ரிக்காவுடனான போட்டியில் ஹாட் ட்ரிக் கோல் அடித்து சாதனை புரிந்து வெற்றிக்கு பங்களித்தது வந்தனாதான்…உலகம் முழுவதுமுள்ள மக்கள் குறிப்பாக விளையாட்டு  ஆர்வலர்கள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை குறைத்துள்ளது… தேசத்திற்காக விளையாடும் பெருமை மிக்க வீரர்கள் மனதை இரணமாக்கியுள்ளது. ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சரே… விரைந்து அவமானத்தை சரி செய்யுங்கள்… நம்பிக்கையை விதையுங்கள்…

* இம்முறை இந்திய பெண்கள் ஹாக்கி அணி நாடு முழுக்க பெரும் எழுச்சியை உருவாக்கியது. இந்த எழுச்சியை உருவாக்கிய பெண்கள், மிக எளிய பின்னணியிலிருந்து வந்தவர்கள். வேளாண் குடும்பம், வீட்டில் மகள் ஆடுவதை பார்க்க சரியாக ஒரு தொலைகாட்சி கூட இல்லாத குடும்பம், போட்டிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தந்தையை இழந்த ஒரு வீராங்கனை, குடிக்கு அடிமையான தந்தை தந்த மனவுளைச்சலை மீறி டோக்கியோவில் வெற்றியை நிலை நாட்டிய இன்னொரு வீராங்கனை என்று இவர்களது கதைகளை கேட்க கேட்க நெஞ்சு விம்முகிறது. இந்த வீராங்கனைகளை நாம் சரியாகதான் கொண்டாடுகிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது. தேசம் கொண்டாடுகிறது. மக்கள் கொண்டாடுகிறார்கள். அரசு? அந்த அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசால் பெருமை செய்யப்பட்டு உற்சாகப்படுத்தப்பட வேண்டும். அரசு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 1 கோடி சிறப்பு பரிசை அறிவிக்க வேண்டும். * குற்றவாளிகள்  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதுங்கள்…* நாடு திரும்பும் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு பெரிய பாராட்டு விழா நடத்துங்கள் * வந்தனா வீட்டிற்கு நீங்களே நேரில் சென்று தேசம் உன் பின்னால் முழுமையாக நிற்கிறது என்று சொல்லுங்கள்… என இந்திய அமைச்சருக்கு கடிதத்தில் தெரிவித்துள்ளார்