10 வது வகுப்பிற்கான கல்வி பிப்ரவரி 2021 லேயே முடிந்து விட்டது. கோவிட் இரண்டாம் அலையால் தேர்வு முடிவுகள் தாமதமாகி ஆகஸ்ட் 3, 2021 ல் தான் அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் முடிக்கப்பட்டது. ஆனால் 11 வது வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் காலாண்டுக்கும், இரண்டாவது காலாண்டில் ஒன்றரை மாதத்திற்கும் சேர்த்து ரூ 3150 கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவனுக்கு ஏப்ரல் மாதம் இருந்து கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
11 ஆம் வகுப்பில் சேராத காலத்தில் டியூசன் கட்டணம் 1200, வித்யாலயா விகாஸ் நிதி 1500, கணினி கட்டணம் 300, கணினி அறிவியல் கட்டணம் ரூ 150 என வசூலிக்கப்பட்டு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சில பெற்றோர் என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். வகுப்புகள் , கல்வி நடவடிக்கைகள் எதுவுமே இல்லாத காலத்திற்கு கட்டணம் என்பது முறையல்ல. பெற்றோரின் புகார் முற்றிலும் நியாயமானது. ஆகவே இதில் தலையிட்டு வசூலித்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும், இல்லாவிடில் எதிர்கால கட்டணத்தில் நேர் செய்ய வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார்.