உறவுகளின் பெருமையை சொல்லும் “வீராயி மக்கள்”

சுரேஷ் நந்தா தயாரிப்பில் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வீராயி மக்கள்”. அண்ணன் தம்பிகளான வேல ராமமூர்த்தியும் மாரிமுத்துவும் தனது தங்கையான தீபா சங்கர் ஆகியோருடன் ஒற்றுமையாக சிறுவயதில் இருந்தார்கள். பெரியவர்களானதும் திருமணம் முடித்து தனித்தனியாக பகைவர்களாக பிரிந்து விடுகிறார்கள். ஏன் பகைவர்களாக ஆனார்கள்?. தனியாக விடப்பட்ட தங்கையின் கதி என்ன? பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் கதை. பொதுவாக கடுகடுப்பான முகத்துடன் நடிக்கும் வேல ராமமூர்த்தி இப்படத்தின் பின்பகுதியில் கல்லுக்குள் ஈரம் இருப்பதை முகத்தில் காட்டி பாரவையாளர்களின் கண்கள் நனையும்படி நடித்திருக்கிறார். தாயின் சமாதியில் நின்று அழுகின்ற மாரிமுத்து உண்மையில் தாயை இழந்த மகன் ஏங்கியேங்கி அழுவதை அப்படியே திரையில் காட்டினார். (மாரிமுத்துவின் மறைவு திரையுலகத்திற்கு பெறும் நஷ்டமாகும்). அண்ணன்களுக்கு முன்னாள் பாசத்திற்காக ஏங்கி கெஞ்சும் தீபா சங்கரி நடிப்பு அருமை. தயாரிப்பாளரும் கதாநாயகனுமான சுரேஷ் நந்தா நடிப்புக்கு முழுமையான பயிற்சி எடுக்க வேண்டும். தயாரிப்பாளர் என்பதால் இயக்குநர் அவரை கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார் அல்லது நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. குடுப்ப உறவின் பெருமையை காட்டிய இயக்குநர் பாராட்டுக்குறியவர். கதாநாயகியாக நடித்திருக்கும் நந்தனா நடிகை கயல் ஆனந்தியை நினைவு படுத்துகிறார். வெள்ளித்திரை அவருக்கு பச்சை விளக்கு காட்டும்.  ரமாவுக்கு குடும்பத்தலைவி பாத்திரம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மாரிமுத்துவின் மனைவியாக நடித்திருக்கும் செந்தி வில்லித்தனத்தில் வெளுத்து வாங்குகிறார். கதையின் ஓட்டம் அவரைத்தான் பின் தொடர்கிறது. அரந்தாங்கி கிராமத்தின் மண்வாசனையை திரையில் மணக்கச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சீனிவாசன்.