உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் “துணிந்தவன்”

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனையோ நடைபெறுகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அந்த மன நோய்க்குக் காரணம் என்ன என்பது புரியாத புதிராக  உள்ளது .உண்மையில் அப்படி ஒரு பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு ‘துணிந்தவன்’  என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சுஜீஷ் தெக்ஷணா காசி – ஹரிநாராயணன் இயக்கியுள்ளார்கள். இந்தப் படம் தக்ஷணா காசி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இந்திரன்,ஜாபர், ஜோனி ஆண்டனி, ஐ. என். விஜயன், சுதீஷ், டயானா ஹமீத், அபர்ணா சிவதாஸ்,  நடித்துள்ளனர். கதையின் பிரதான பாத்திரமான அந்த 10 வயது சிறுமியாகத் தயாரிப்பாளரின் மகள்  காஷ்மீரா நடித்துள்ளார்.******

இந்தப் படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.உன்னி நம்பியார்  இசையமைத்துள்ளார். அச்சு விஜயன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜீமோன் என். எம்.கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கோட்டயம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

படத்தின் கதை பற்றி இயக்குநர் சுஜீஷ் கூறும்போது, “அந்த பத்து வயதுக் குழந்தையை அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் . எப்போதும் துறுதுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் ஆற்றலின் வடிவமாக அந்தச் சிறுமி காணப்படுவாள்.வயது பத்து தான் என்றாலும் இருபது வயதுக்குடைய முதிர்ச்சியோடு பேசுவாள்,மனிதர்களைப்  புரிந்து கொள்வாள். யாருடைய தோற்றத்தைப் பார்த்தும் அவர்களுடைய குணத்தைக் கண்டுபிடித்து விடுவாள். ஒருவருடைய முக அசைவைப் பார்த்தே அவர்களது மனத்தைக் கணித்து விடுவாள்.குடித்துவிட்டு வருபவரையும் கண்டுபிடித்து விட்டு திட்டுவாள். அம்மா, அப்பா, அந்தக் குழந்தை என்று  இருக்கும் அந்த பாசக் குடும்பத்தில் காலத்தின் கோலத்தால் ஒரு புயல் அடிக்கிறது. பல சிக்கலில் இருந்து குழந்தை மீண்டு வந்ததா இல்லையா என்பது  படத்தின் முடிவு என்ன என்பதுதான் இந்த ‘துணிந்தவன்’ படத்தின் கதை.

உன்னி நம்பியார் இசையில் விஜய் ஜேசுதாஸ் வைக்கம் விஜயலட்சுமி, சித்தாரா கிருஷ்ணகுமார் பாடல்களைப் பாடியுள்ளனர்.பாடல்களை நியூ மியூசிக்  நிறுவனம் வெளியிட்டுள்ளது. முற்றிலும் புதிய தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்தைத் தங்கள் படமாக எண்ணி உழைத்திருக்கிறார்கள். இப்படத்தை ‘எஸ் எஃப் சி’ எனப்படும் சாகரம் பிலிம் கம்பெனி ஆட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது ”என்கிறார் இயக்குநர்.

இப்போது மலையாளத்தில் பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்காத நல்ல முயற்சிகள் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘சூட்சும தர்ஷினி’, ‘மார்கோ’ போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன .அந்த நிலையில் இந்தப் படம் மலையாளத்தில் துணிந்தவன் என்ற பொருள் படும்படி ‘ஒறும்பேட்டவன்’ என்ற பெயரில் ஜனவரி 3ஆம் தேதி வெளியாகிறது.

அதனைத் தொடர்ந்து தமிழில் ‘துணிந்தவன் ‘ என்கிற பெயரில்  2025 ஜனவரி இரண்டாம் வாரத்தில் தமிழகத் திரையரங்குகளில் வெளிவர உள்ளது ‘துணிந்தவன்’.