மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும் – தொல் திருமாவளவன்

மணிப்பூரில், மாநில பாஜக அரசின் ஆதரவோடு பழங்குடி மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவெறி- மதவெறி வன்முறையைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில முதலமைச்சரைப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் விசிக சார்பில் 24.07..2023 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்கும்படி அழைக்கிறோம். மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்துப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச்சென்று அவமானப்படுத்திய இழிசெயலுக்கு  உலகமெங்கிலுமிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.  சுமார் மூன்று மாதங்களாக பழங்குடியினருக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் கொடிய வன்முறை வெறியாட்டம் பற்றி வாய் திறக்காத பிரதமர் மோடி அவர்கள் காலத்தின் கட்டாயத்தின் பேரில் கருத்துச் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.  ‘மணிப்பூரின் புதல்விகளுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் எவரும் தப்பமுடியாது’ என்று பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அத்தகைய நெருக்கடியை அவருக்கு அந்த பேரவலம் ஏற்படுத்தியுள்ளது.

இதுவரையிலான வன்முறையில்  150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கான கிராமங்களும், ஆயிரக்கணக்கான வீடுகளும் எரிக்கப்பட்டுள்ளன.  250 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் சாம்பலாக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தின் காங்போக்பி மாவட்டத்தில், நூற்றுக் கணக்கானவர்கள் பார்த்திருக்க , பட்டப்பகலில் ஒரு பெரிய வன்முறைக் கும்பலால் குக்கி சமூகத்தைச் சார்ந்த இரண்டு  பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பொதுவெளியில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். தெருவில் நிர்வாண ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டனர். அந்தப் பேரிழிவைக் கண்டித்து அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் அந்த வன்முறைக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அந்தக் காட்சிப் பதிவு வெளியானதற்குப் பிறகு அப்படி நடந்த மேலும் பல சம்பவங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த வன்முறைகள் யாவும் மணிப்பூரிலுள்ள மெய்தி இனப் பயங்கரவாதக் குழுக்களால் நடத்தப்படுவதாகவும், மாநில காவல்துறையின் கமாண்டோக்களும் தீவிரவாதிகளோடு சேர்ந்து பழங்குடி மக்களைப் படுகொலை செய்வதாகவும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். மணிப்பூரில் நடப்பது இரண்டு குழுக்களுக்கு இடையேயான கலவரம் அல்ல. அது திட்டமிட்ட இனக் கருவறுப்புக் கொடூரமாகும். 2002 இல் குஜராத்தில் நடந்ததுபோல இப்போது மணிப்பூரில் அரசு ஆதரவோடு ஒரு இன அழித்தொழிப்பு நடக்கிறது.  
 
2023 மே மாதம் முதற்கொண்டே மணிப்பூரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. அதனால்தான் இந்த வீடியோ பரவுவதற்கு இவ்வளவு கால தாமதம் ஆனது என்கிறார்கள். ஆனால், இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு மாநில அரசு ஏன் முன்வரவில்லை? ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் ஏன் மாநில அரசை அறிவுறுத்தவில்லை? நிர்வாணமாக ஊர்வலம் விடப்பட்ட பெண் ஒருவரின் கணவர் 28 ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்துள்ளார்.  ‘கார்கில் போரில் பங்குபெற்று நாட்டைக் காப்பாற்றிய என்னால் என் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லையே’ என அவர் கதறியது தேசத்தையே உலுக்கியுள்ளது. அது இந்த போலி தேச பக்தர்களுக்கு மட்டும் ஏன் கேட்காமல் போய்விட்டது? என்ற கேள்விகள் இப்போது எழுகின்றன. மணிப்பூரைப் பற்றிய செய்திகள் வெளி உலகுக்குத் தெரிந்துவிடாமல் தடுத்துக்கொண்டே அங்கே எவ்விதத் தடையுமில்லாமல் தாக்குதல் நடத்த அனுமதித்திருக்கிறது மணிப்பூர் பாஜக அரசு.
 
‘மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும். அந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்ற எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை மோடி அரசு ஏற்க மறுக்கிறது. நாடாளுமன்ற இரு அவைகளையும் நடத்திடாமல் தள்ளி வைக்கிறது.
 
மதப் பெரும்பான்மை வாதத்தை வாக்குகளைத் திரட்டுவதற்கான உத்தியாக பாஜக உள்ளிட்ட சனாதன சங்கப் பரிவாரக் கட்சிகள் கருதுகின்றன. அதனால் இன்று மணிப்பூரில் நடப்பது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கக்கூடிய பேராபத்து உள்ளது. அவ்வாறு நடக்காமல் தடுப்பது நம் கடமை. அதற்காகக் குரலெழுப்பவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஏற்கனவே, மே16 அன்று சென்னையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தற்போது இரண்டாவது கட்டமாக மதுரையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
 
ஒன்றிய பாஜக அரசே!

*மணிப்பூர் பழங்குடி மக்கள்மீதான இனவெறி- மதவெறித்  தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும்!

*இன அழித்தொழிப்பில் ஈடுபட்டுள்ள மணிப்பூர் மாநில முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும்!

*நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் கொடூரம்  பற்றி விவாதிக்க அனுமதிக்க வேண்டும்!

*பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் இந்த இழிநிலை இனக் கருவறுப்புத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உடனே பதவி விலக வேண்டும்!