இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்து இருப்பது மிகப்பெரிய அவலம். மாநில அரசுக்குச் சேர வேண்டிய வருவாயை பாஜக அரசு ஏற்கனவே பறித்து விட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் பொதுமக்கள் மீது திணிப்பது என்பது அறமற்ற செயலாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கட்டுக்குள் இருக்கும் இந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருகிறது. அதேபோல் 14 கிலோ வீட்டு உபயோக எரிவாயு உருளை ரூ.25.50 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு எரிவாயு உருளையின் விலை ரூ.825ஆக இருந்தது. ரூ.25.50 காசு உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.850.50 ஆக உயர்ந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள ஒன்றிய அரசைக் கண்டித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலையை உடனே குறைக்கக் கோரியும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் சலீமுல்லாகான், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் கே. அப்துல் சலாம், மாவட்டச் செயலாளர் ஈ.எம். ரசூல், வட சென்னை மாவட்டத் தலைவர் நசுரூதீன், மாவட்டச் செயலாளர் எச்.நசீர் உசேன் உள்ளிட்ட ஏராளமான மமக மற்றும் தமுமுகவினர் தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்து முக்கவசம் அணிந்து கலந்து கொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
இவண்
மனிதநேய மக்கள் கட்சி
தலைமையகம்