அன்பின் அடையாளம் “ரயில்” திரைப்படம்

வேடியப்பன் தயாரிப்பில் பாஸ்கர்சக்தி இயக்கத்தில் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ ஆகியோரின் நடிப்பில் வெளிவரும் படம் “ரயில்’.  தேனி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் குங்குமராஜ் தனது மனைவி வைரமாலாவுடன் வாழ்கிறார். குங்குமராஜ் குடிகாரன். அவரது மனைவி வைரமாலா குடும்பப்பெண். இவர்கள் எதிர் வீட்டில் மும்பையிலிருந்து வேலைக்காக வந்த பர்வேஸ் மெஹ்ரூ குடியிருக்கிறார். வைரமாலாவும் பர்வேசும் அக்கா தம்பியாக பழகுகிறார்கள். குங்குமராஜ் பர்வேசை பகைவனாக பார்க்கிறார். வைரமாலாவிடம் பர்வேஸ் தனது பணப்பையை கொடுத்துவிட்டு வெளியில் செல்கிறார். சென்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி இறந்தும் விடுகிறார். இறந்த் செய்தியை கேள்விபட்டதும் பரவேஸின் அப்பா அம்மா மனைவி குழந்தை எல்லோரும் தேனிக்கு வந்து சடங்குகள் எல்லாம் முடித்துவிட்டு மும்பைக்கு செல்லும்போது,  வைரமாலா பரவேஸ் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த பணப்பையை எடுத்துவர வீட்டுக்குள் செல்கிறாள். ஆனால் வைத்த இடத்தில் பை இல்லை. அப்பையை திருடியது யார் என்பதுதான் கதை. கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாத எதார்த்தமான ஒரு அன்பின் பிணைப்பை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாஸ்கர்சக்தி. அழுத்தமான கதையை தெளிந்த நீரோடை போல் திரைக்கதை செல்கிறது. நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சமில்லை. யதார்த்தமான வாழ்க்கையை எளிய உரையாடல் விளக்குகிறது. கதாபாத்திரத்திற்கேற்ற நடிகர்கள் அனைவரின் நடிப்பும் அற்புதம். கிராமத்தின் அழகை திரையில் ரசிக்கும்படி செய்த ஒளிப்பதிவாளர் போற்றதலுக்குறியவர்.