சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு (டிரைவ் இன்) உணவகத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திடீராய்வு மேற்கொண்டார்.

சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு (டிரைவ் இன்) உணவகத்தில்  மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (2.06.2023) திடீராய்வு மேற்கொண்டு சமைக்கப்பட்ட உணவு வகைகளின் ருசியை சரிபார்த்தார். சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் சாதனைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இந்த ஆண்டு முதல்  தமிழ்நாட்டை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் 300 அரங்கங்கள், கலைநிகழ்ச்சிகளுடன் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்ற  சென்னை விழா உள்பட பல்வேறு தனியார் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தீவுத்திடலுக்கு வருகை புரியும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் சேவைகளை அளிக்கும் வகையில் திறந்த வெளி திரைங்கம், பார்ப்பிக்யு அசைவ உணவு பிரிவு, குயிக் பைட்ஸ் என்ற சிற்றுண்டி உணவு பிரிவு ஆகியவற்றுடன் குளிரூட்டப்பட்ட ஓட்டல் தமிழ்நாடு உணவகம் செயல்பட்டு வருகின்றது. 

தற்போது நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை தீவுத்திடல் திறந்த வெளி திரையரங்கில் காண, ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து உணவு வகைகளை ருசிபார்த்துக் கொண்டே கிரிக்கெட் போட் டிகளை கண்டு களித்தனர். சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு (டிரைவ் இன்) உணவகத்தில்  மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (2.06.2023) திடீராய்வு மேற்கொண்டு சமைக்கப்பட்ட உணவு வகைகளின் ருசியை சரிபார்த்தார். அப்போது காய்கறிகள் சரியாக வேகவைக்கப்பட்டுள்ளனவா, இனிப்பு, உப்பு, காரம், புளிப்பு ஆகிய சுவைகள் சரியாக உள்ளனவா என்று உணவு வகைகளின் மாதிரிகளை உட்கொண்டு ருசியை சரிபார்த்தார்.

பின்னர் உணவக மேலாளர் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடியபோது மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,  சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல்துறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சிகளால் ஓட்டல் தமிழ்நாடு உணவகங்களில் சீரமைப்பு பணிகள் பொதுமக்களை கவரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் திகழ்கின்றன. அதே நேரம் இங்கு வருகை தரும் பொதுமக்களுக்கு அவர்கள் விரும்பும் வகையிலான உணவு வகைகளை விரைந்து தயாரித்து வழங்க வேண்டும். உணவுப் பொருட்களை தலைமை சமையலர், ஓட்டல் மேலாளர் ஆகியோர் அவ்வப்போது ருசி பார்த்து உணவுவகைகளை வாடிக்கயாளர்கள் திருப்தியாக சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். ஆர்டர் செய்த உணவு வகைகளை குறித்த நேரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மீண்டும், மீண்டும் வரும் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். உணவகத்தில் பணியாற்றிடும் அனைவரும் தங்கள் பணிகளை சரியாக செய்து பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவதற்கான முயற்சிகளை ஆர்வத்தோடு மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் அறிவுறுத்தினார்.

  இந்த ஆய்வில் சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள், உதவி தலைமை மேலாளர் (ஓட்டல்கள்) திரு.சௌ.வெங்கடேசன், ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தின் மேலாளர், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.