வரிசையில் காத்திருக்காமல் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பும் வசதியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் அந்த கூட்ட நெரிசலை நினைத்தாலே அங்கு செல்லும் திட்டத்தை கைவிடுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு, சுற்றுலா கழகத்தின் மூலமாக பக்தர்களை திருப்பதிக்கு அழைத்து செல்வதை ஒரு தொகுப்பாகவே வைத்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் ஒரே நாளில் திருப்பதிக்கு சென்று வர முடியும். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில்,  சென்னையிலிருந்து திருப்பதிக்கு காலையில் சென்று, மாலையில் சென்னைக்கு வந்து சேரும் இத்திட்டத்தில்,  ஏழுமலையானை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்களை கால்கடுக்க நிற்க வைக்காமல் விரைவாக தரிசனம் செய்விக்கும்படி துரிதமான ஏற்பாடுகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறை செய்திருக்கிறது. காலை மற்றும் மதிய உணவுகளும் இத்திட்டத்தில் உள்ளடக்கம் என்று தெரிவித்துள்ளது**********

திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து, சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திலிருந்து தினசரி காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றது. ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு. திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது. மேலும் மதிய உணவுக்குபின் திருச்சானூர் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் செய்த பிறகு இரவு உணவு வழங்கப்பட்டு மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com  இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.