மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில், சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள, பல்வேறு ஊக்கத் தொகைகள் பெறும் வகையிலான, சுற்றுலாத் துறைக்கு தொழில் அந்தஸ்து வழங்கும் தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கையை 26.09.2023 அன்று வெளியிட்டார்கள். உலகெங்கிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க சக்தியாக திறன்மிக்க ஆற்றலுடன் சுற்றுலாத் தொழில் விளங்குகிறது. ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதற்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டை உயர்த்துவதையும், சுற்றுலாப் பயணிகள் தங்கும் காலத்தை அதிகரிப்பதற்கும், அந்நியச்செலாவணியை ஈர்க்கும் வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை செயல்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்தும், புதிய ஓட்டல்கள் கட்டுவதற்கு அதிக தேவையும், முக்கியத்துவமும் வாய்ந்த பகுதிகள் மற்றும் இடங்களை தேர்வு செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மதுரை – இராமேஸ்வரம் வழித்தடத்தில் மிக அதிக அளவில் ஆன்மீகச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், இராமேஸ்வரத்தில் ஆன்மீகச் சுற்றுலாப் பயணிகளுக்கு உலகத்தரத்திலான கூடுதல் தங்கும் விடுதிகளை அமைப்பதற்கும், அழகிய கடற்கரைகளில் நீர் சாகச விளையாட்டுகள் ஏற்படுத்துவதற்கும் தேவை அதிகளவில் உள்ளது. இவ்விடங்களில் கடலின் அழகினை இரசிப்பதற்கு ஏதுவாகவும், நீர் சாகச விளையாட்டுகளை ஏற்படுத்த ஏதுவாகவும் இடங்களை தேர்வு செய்ய கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
உலக பயண மற்றும் சுற்றுலா அமைப்பினால் (WTTC) வழங்கப்பட்டுள்ள நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கான ஆலோசனைகளை கடைபிடித்து நிலையான சுற்றுலா வளர்ச்சியை ஏற்படுத்தவும் விவாதிக்கப்பட்டது. இராமநாதபுரம் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள இடங்களில் சுற்றுலா தங்கும் விடுதிகளை புதிதாக கட்டுவதற்கு இடங்களை தேர்வு செய்யலாம் என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும் அதிகம் பிரபலமடையாத சுற்றுலாத் தலங்களான ஜவ்வாது மலை, வத்தல் மலை, பச்சைமலை, திருமூர்த்தி மலை ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குதற்கு வசதிகள் ஏற்படுத்த ஏற்ற இடங்களை தேர்வு செய்யலாம் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. கோவில் நகரங்களான தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்கான வசதிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றது. அந்த இடங்களில் சுற்றுலா கொள்கையின் அடிப்படையில் புதிய ஓட்டல்கள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், புதிதாக அமையவுள்ள விமான நிலையம் அருகிலும், கல்பாக்கத்திலிருந்து மரக்காணம் வரையிலும், புதிதாக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நட்சத்திர அந்தஸ்திலான ஓட்டல்கள் கட்டலாம் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.புதிதாக ஓட்டல்கள் அமைக்க நிலம் தேவைப்படும் இடத்தினை தேர்வு செய்ய ஏதுவாக ஓட்டல் நிர்வாகிகள் தேவைப்படும் நிலத்தின் அளவு மற்றும் இடத்தினை தெரிவிக்குமாறு சுற்றுலாத்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஓட்டல் நிர்வாகிகள் பங்கேற்றனர்.