சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி.இ.ஆ.ப., முன்னிலையில் (14.9.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது,
“தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கினார்கள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், சுற்றுலா பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என குறைந்த செலவில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சுற்றுலா சேவைகளை வழங்கி வருகின்றது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சுற்றுலா பயணிகளின் விருப்பமான முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ஓட்டல் தமிழ்நாடு உணவகங்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டறியும் வகையில் அமுதகம் என்று பெயர் சூட்டியுள்ளார். சுற்றுலா கொள்கை 2023- ஐ வெளியிட்டு, சுற்றுலாத்துறையில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கி.மீட்டர் நீள சாலைகளில் வெற்றிகரமாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் உலக அளவில் புகழ் பெற்றதோடு, நமது தீவுத்திடல் பொருட்காட்சி மைதானத்தை உலகறியச் செய்து விட்டது. ஃபார்முலா கார் பந்தயம் மூலமாக உலகப் புகழ் பெற்ற தீவுத்திடல் மைதானத்தில் வணிகப் பெருமக்கள் பொருட்காட்சிகளையும், மிகப் பெரிய நிகழ்ச்சிகளையும் நடத்தி பயன்பெற வேண்டும்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், சாகச படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் இயக்கி வருகிறது. வாட்டர் ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 590 படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு நீங்காத அனுபவங்களை அளித்து வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி புதிய படகு குழாம்கள் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நகரின் மையப்பகுதிகளில் குறிப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ளன. ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் தொடர்ந்து வெவ்வேறு ஊர்களில் 3 நாட்கள் தங்குபவர்கள், ஒரே விடுதியில் 3 நாட்களுக்கு தங்குபவர்கள், மொத்தமாக 5 அறைகள், 10 அறைகள், 20 அறைகள் என முன்பதிவு செய்பவர்கள் ஆகிய நபர்களுக்கு தள்ளுபடி சலுகைகள் வெவ்வேறு சதவீதத்தில் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்கள் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதி அறைகளை முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.comஎன்ற இணைதள பக்கத்தில் தங்களது செல்போன் அல்லது கணினி மூலமாக முன்பதிவு செய்தோ, அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திற்கு நேரில் வருகை தந்தோ முன்பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவர. www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்” என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் ச.கவிதா உள்பட சுற்றுலாத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர்கள், மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.