சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுவா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் பழங்கால கட்டடங்கள் குறித்து அறிந்து கொள்ள பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப, அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,
தமிழ்நாட்டில் யுனஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள் மட்டுமல்லாது 46,000 க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பறவைசரணாலயங்கள், வன விலங்கு சரணாலயங்கள் தமிழ்நாட்டில்தான் அமைந்துள்ளன. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, ஜவ்வாது மலை மற்றும் வால்பாறை ஆகிய மலைவாழிடங்கள் உலகம் முழுவதுமுள்ள ஏராளமான சுற்றுலா பயணிகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கின்றன. இவை கோவில்கள், மலைகள் மட்டுமல்ல. இவை நமது பாரம்பரியம் ஆகும். கட்டடங்கள் மட்டுமல்ல. இவை வரலாற்றினை நமக்கு தெரிவிக்கின்றன. நமது தமிழ்நாட்டில் நிலங்களை ஐந்து வகை நிலங்களாக வகுத்துள்ளோம். அவை ஐந்து வகை நிலங்கள் மட்டுமல்ல. வெவ்வேறு வகையான வாழ்க்கை முறைகளை நமக்கு தெரிவிக்கின்றனர்.
நாம் சென்னையில் நகரப்பகுதியில் வசிக்கின்றோம். நாம் பல்வேறு பகுதிகளுக்கு அடிக்கடி செல்ல முடியாது. எனவே உலக சுற்றுலா தினத்தையொட்டி, சுற்றுலாத்துறை உங்களுக்கு சென்னையில் உள்ள பாரம்பரியமிக்க அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கட்டடங்களின் சிறப்புகள் குறித்தும், வரலாறு, பாரம்பரியம் குறித்தும் இன்று கல்லூரி மாணவிகளான உங்களுக்கு சுற்றுலாத்துறையின் மூலம் விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் 2 வது பழமையான அருங்காட்சியகம் ஆகும். மேலும் சென்னையில் சிறப்புமிக்க பழமையான மருத்துவக் கல்லூரி அமையப் பெற்றுள்ளது. உலகில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே பெண்களை மருத்துவக் கல்வி கற்க அனுமதித்த முதன்மை மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் கூட பெண்கள் மருத்துவக் கல்வி கற்க அனுமதிக்காத காலத்திலேயே சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட ஒரு சில மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் பெண்கள் மருத்துவ கல்வி பயின்றனர். அத்தகைய பாரம்பரிய, தொலைநோக்கு பார்வை, கருத்தியல்களை கொண்ட உலகின் முன்னணி நகரம் நமது சென்னையாகும். அத்தகைய சென்னையின் பெருமைகளில் சிலவற்றை நீங்கள் அறிந்து கொள்ள உள்ளீர்கள். இந்த அருங்காட்சிகத்தை விட்டு நீங்கள் செல்லும்போது மிகப் பெருமையான சில விவரங்களை அறிந்து கொண்டோம் என்ற நீங்காத நினைவுகள் உங்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வரலாற்று அறிஞர் .செல்வி.திருபுரசுந்தரி செவ்வேள், கட்டடக் கலை வல்லுநர் திருமதி. ஆஃப்ரீன் ஆகியோர் சென்னை அருங்காட்சியத்தில் உள்ள பல்வேறு கட்டடங்களுக்கு கல்லூரி மாணவிகளை அழைத்துச் சென்று கட்டடங்களின் வரலாறு மற்றும் கட்ட்டக்கலைச் சிறப்புகளை தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள், எத்திராஜ் மகளிர் கல்லூரி, மகளிர் கிறிஸ்துவ கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.