சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன் பதிலுரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வைக்கம் வீரர், திராவிட இயக்க முன்னோடி, ஒடுக்கப்பட்டு, தடுக்கப்பட்டு, நடுக்கம் கொண்டிருந்த நலிந்தோரை நெஞ்சு நிமிர வைத்த வைக்கம் போராட்டத்தின் சரித்திரச்சான்றோன் தந்தை பெரியார் அவர்களை வணங்குகிறேன். திராவிட முன்னேற்ற கழகத்தின் சீர்மிகு சிற்பி,  மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று முத்திரை கருத்தை முழங்கியவர், ”கடமை கண்ணியம்கட்டுப்பாடுஎன்ற முப்பெரும் முனைப்புகளை  ஒற்றைத் தாரக மந்திரமாக கற்றுத் தந்தவரான பேரறிஞர்அண்ணாவை வணங்குகிறேன்.  “அண்ணா வழியில் அயராது உழைப்போம்என மூச்சு முட்ட உழைத்தமுத்தமிழ் வித்தகரின் முனைப்புகள், திராவிடப் பூங்காவிற்கு உரமாகவும், தரமிகு திறனாகவும் உள்ளன. அத்தகைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஓய்வெடுக்கும் இடம் நோக்கி வணங்குகிறேன்.  அறிவாற்றல் மிகுசாதனையாளர், இனமான பேராசான், தன்மானச் சிங்கம், நிலைமாறா நெறியாளர் முத்தமிழறிஞர் கலைஞர்அவர்களின்  முதுபெரும் தோழர், பேராசிரியர் பெருந்தகை  அவர்களை வணங்குகிறேன்.   முத்தமிழறிஞர்கலைஞரின் மனசாட்சி, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டவர், முரசொலி நாளிதழின்உழைப்பு அவரை முரசொலி மாறன் என்றே வடிவமைத்தது அத்தகு கொள்கை குன்றான முரசொலி மாறன்அண்ணன் அவர்களை வணங்குகிறேன். ”உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அதுதான் தளபதியாரின்  தனிப்பெரும்சிறப்புஎன்று  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால்  போற்றப் பெற்றவர் உலக தமிழ் மக்களின்பாதுகாவலர்,  திராவிட மாடலை வளர்த்தெடுத்த சீலர், சமூகநீதி, சமத்துவம், சமதர்மம் ஆகிய முப்பெரும் தாரகமந்திரங்களின் ஒப்பற்ற தலைவர் தளபதியார், வைக்கம் போரட்டத்தில் தந்தை பெரியார் போராடினார். அதன்நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று தளபதியார் திராவிட இனத்திற்கே பெருமை சேர்த்தார்.  

பிற்பகல் 3-40

நிகழ் யுக தமிழின தலைவராக நெஞ்சு நிமிர்த்தியவர்; திராவிட மாடலை வடிவெடுத்து,  தமிழ்நாட்டு மக்களைதலை நிமிர வைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வணங்குகின்றேன்.

     இளைஞர்களின் எழுச்சி நாயகர்; கழக இளைஞரணி செயலாளர்; தமிழ்நாட்டு மக்களின் இல்லத்து செல்லப்பிள்ளை; விளையாட்டு வீரர்களுடன் களமாடும் செயல்சிட்டு சீர்மைமிகு சின்னவர்; பார்புகழும் மன்னவர்; மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், சிறப்புமிகு சின்னவரைவணங்குகிறேன்.

      மாண்புமிகு அவை முன்னவர் அவர்களையும், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களையும், மாண்புமிகுபேரவைத் துணைத் தலைவர் அவர்களையும், மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்களையும், மாண்புமிகுஅமைச்சர் பெருமக்களையும், அனைத்து கூட்டணி கட்சிகளின் மாண்புமிகு சட்டமன்ற குழுத் தலைவர்கள்மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் வணங்கி, இம்மாமன்றத்தில் சுற்றுலாத்துறையின் மானியக் கோரிக்கை மீதான எனது பதிலுரையை வழங்குகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சுற்றுலா என்பது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரதுறையாகும். சுற்றுலாப் பயணிகளின் பணப் புழக்கம் காரணமாக உள்ளூர் மக்களின் பொருளாதாரம்பொலிவடையும். வேலைவாய்ப்புகளை பெருக்கி; வறுமையினை ஒழித்து; வருவாயை அதிகரித்து; அன்னியசெலவாணியை ஈட்டி; பொருளாதாரத்தை பேணிட; சுற்றுலா உதவுகிறது. .நா. சபையின் ஆய்வின்படி, பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் என 3 அம்சங்களை சுற்றுலா பெற்றுள்ளது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சுற்றுலா என்ற சொல்லில் பல பிரிவுகள் உண்டு. தமிழ்நாட்டைஆண்ட பண்டைய மன்னர்கள் பற்றிய கோட்டைகள், அரண்மனைகள், கோயில்கள், நினைவுத் தலங்கள் எனசுற்றிப் பார்க்க வந்தால் அது பாரம்பரியம் மற்றும் ஆன்மீக சுற்றுலா.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை 1,076 கி.மீ. நீண்ட நெடிய கடற்கரை புவியமைப்பை கொண்டதுதமிழ்நாடு. இயற்கை எழில் கொட்டி கிடக்கின்ற அப்பகுதிகளை சுற்றிப் பார்க்க வந்தால் அது கடற்கரைசுற்றுலா.

மலையேற்றம், கடல் நீச்சல், நீர் விளையாட்டு, ரங்க ராட்டினம் என பயணப்பட்டால் அது சாகசச் சுற்றுலா.

இயற்கை வழங்கிய வனப்பு மிகு வனங்களும், மலை வாசஸ்தலங்களும், சரணாலயங்கள், தேசிய பூங்காக்களும்என சுற்றிப் பார்க்க வருவதே சுற்றுச்சூழல் மற்றும் வனச் சுற்றுலா.

வெளிநாட்டு நோயாளிகள் மருத்துவச் சிகிச்கைக்காக சிறப்பும், சிக்கனமும் கருதி தமிழ்நாட்டிற்குவருகின்றனர். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதே மருத்துவச் சுற்றுலா.

உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனைகளின் பொருட்டு வணிகர்களின் அன்றாட பயணங்களே வணிகச்சுற்றுலா.

பரபரப்பான நகர மக்கள் நகர்ந்து சென்று மலைசார்ந்த கிராமச் சூழல்களிலும் பண்ணை இல்லங்களில்பொழுதை கழிப்பதும், கிராமிய மற்றும் மலைத்தோட்ட பயிர்கள் சுற்றுலா.

கேரவான்களில் பயணித்தபடி, சுற்றுலாத் தலங்களில் சுகம் காணும் திட்டங்களே கேரவான் சுற்றுலா.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ், பொங்கல் திருவிழாக்கள், கிராம தேவதைகளுக்கான விழாக்கள்ஆகியவற்றை கண்டுகளிக்க வந்தால் அது பண்பாட்டுச் சுற்றுலா.

மண்ணுக்கேற்ற மணமும், மண்பானைச் சோறும் என பண்டைய தமிழர் உணவு பழக்கங்களில் திளைக்கவிரும்பினால் அது உணவுச் சுற்றுலா.

பள்ளிப் பாடங்களில் பவனி வருகின்ற பல்வேறு நிலைப்பாடுகளை நேரில் பார்பதற்காக மாணவர்களைஅழைத்து சென்று சுற்றிக்காட்டுவது என்ற நிலை பாடத் திட்டங்களில் உண்டு. இதுவே கல்விச் சுற்றுலா.

கலை கலாச்சாரம், இயற்கை எழில் சூழ்ந்த மலை, நீர், நிலப்பரப்புகள் கொண்டதாகவும் இருப்பதால், தமிழ்நாடுநாட்டிலேயே முதன்மை சுற்றுலா தலமாக விளங்குகிறது. தமிழ்நாடு மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் 38 சுற்றுலா அலுவலகங்கள், 22 சுற்றுலா தகவல் மையங்கள் உள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, மலேசியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின்பயணிகளே பெருமளவில் நம் நாட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமானமாமல்லபுர நினைவுச் சின்னங்கள் 1,44,984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் பார்வையிடப்பட்டு, வருகையில் முதலிடம் வகிக்கின்றன.

தாஜ்மஹாலை 38,922 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு, இரண்டாம் இடத்தில் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் 10 பிரபலமான பாரம்பரிய நினைவுச் சின்னங்களின்பட்டியலில், திருமயம் கோட்டை அருங்காட்சியகம்; வட்டக்கோட்டை; செஞ்சி கோட்டை; சித்தன்னவாசல்குடைவரை ஜெயின் கோயில்; சாலுவன்குப்பம் புலிக்குகை கோயில் உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள்தமிழ்நாட்டில் உள்ளன.

  பிற்பகல் 3-45

2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 கோடியே 65 இலட்சத்து 66 ஆயிரம். இவற்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்து 30 ஆயிரம். 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 21 கோடியே89 இலட்சத்து 11 ஆயிரம். இவற்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
4
இலட்சத்து 7 ஆயிரம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2022 ஆம்ஆண்டில் 10 கோடியே 23 இலட்சத்து 45 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கூடுதலாக தமிழ்நாட்டிற்குவருகைபுரிந்துள்ளனர்.  

தமிழ்நாடு மாநில திட்டக் குழு “2030-க்குள் நிலையான சுற்றுலாவை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளைஉருவாக்குதல், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் கொள்கைகளை வகுத்துசெயல்படுத்துதல்என்ற இலக்கினை சுற்றுலாத் துறைக்கு நிர்ணயித்துள்ளது.  இந்த இலக்கினை எய்திட, உலகப் புகழ் பெற்றஇந்திய நாட்டிய விழாஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் டிசம்பர் முதல் ஜனவரி வரைநடத்தப்படுகிறது. இந்திய நாட்டிய விழாவைக் காண ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மாமல்லபுரத்திற்கு வருகைபுரிகின்றனர். 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மற்றும்பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்நாட்டின் முக்கிய கோடை வாசஸ்தலங்களான உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, வால்பாறை, ஏலகிரி மற்றும் கொல்லிமலை ஆகிய பகுதிகளில் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன. சர்வதேச பயணச்சந்தைகளில் சுற்றுலாத் துறை பங்கேற்பதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தமிழ்நாட்டில்கணிசமாக உயர்ந்துள்ளது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு சுற்றுலாத் துறை
2022-2023
ஆம் ஆண்டில் பின்வரும் விருதுகளைப் பெற்றுள்ளது.

1. சிறந்த கடற்கரைகள் மற்றும் கடற்கரை தலத்திற்கான விருது, இந்தியா டுடே குழுமத்தால் கன்னியாகுமரிமாவட்டத்தின் Lemur கடற்கரைக்கு வழங்கப்பட்டுள்ளது.

2. “ஆன்மீக சுற்றுலாவிற்கான சிறந்த மாநிலம்என்ற விருது தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு Travel + Leisure India and South Asia 11-வது பதிப்பில், கிடைத்துள்ளது.

3. SKOCH உச்சி மாநாட்டில் 2023-ல்வெள்ளிவிருது கிடைத்துள்ளது.

4. இந்தியாவில் பிரம்மிக்கவைக்கும் மலைக் காட்சிகளுக்கான சிறந்த இடத்திற்கான பிரிவில் நீலகிரிமாவட்டம், குன்னூருக்கு ‘‘வெள்ளி’’ விருதினை, புதுடெல்லியில் Outlook Traveller Awards-2022 விழாவில்பெற்றது.

5. பசுமை சுற்றுலாத் தலங்களுக்கான விருதுக்காக 2022-ல் கிரேக்கத்தின் Athens-ல், திருச்சிராப்பள்ளிமாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

6. “இந்தியாவின் சிறந்த பாரம்பரிய தலத்திற்கானவிருது தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு ஜெர்மன் தலைநகர்Berlin-ல் Pacific Area Travel Writers Association (PATWA) வழங்கப்பட்டது.

7. “இந்தியாவின் சிறந்த சுற்றுலா அமைச்சர் 2023” என்ற விருது தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர்ஆகிய எனக்கு Pacific Area Travel Writers Association ஆல் (PATWA) ஜெர்மன் தலைநகர் Berlin-ல்நடைபெற்ற சர்வதேச பயண விருதுகள் விழாவில் வழங்கப்பட்டது. (மேசையைத் தட்டும் ஒலி)

தமிழ்நாடு சுற்றுலாத் துறையானது, TravelXP Television Global Channels  மற்றும் TravelXP சமூகஊடகங்கள்மூலம் தமிழ்நாட்டின் அழகையும் கலாச்சாரத்தையும் 15 மொழிகளில் உலகெங்கிலும் உள்ளபார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் விளம்பர உத்திகள் 2022-2023 ஆம்ஆண்டில் மாநிலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க உதவியது.

சுற்றுலாத் துறையானது, 2021 ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள்/இடங்களைக்கண்டறிந்து மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், 2022-2023 ஆம் ஆண்டில், அணைக்கட்டுகள், நீர்த் தேக்கங்கள், பூண்டி அணைக்கட்டு, ஆண்டிபாளையம் ஏரிப் பகுதி, கொளவாய் ஏரிப் பகுதி, ஒகேனக்கல் அருவிப் பகுதி, முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி, பூம்புகார், குற்றாலம், பிச்சாவரம், முத்துப்பேட்டை Mangrove காடுகள், முத்துக்குடா பகுதி, வத்தல்மலை ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த மொத்தமாக ரூ.97.0068 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஆன்மீக மற்றும்கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா, இராமேஸ்வரம் மற்றும் கொடைக்கானல் helicopter இறங்குதளம்ஆகியவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.46.9593 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகுஉறுப்பினர் அவர்கள் helicopter இறங்குதளம் அமைப்பது பற்றிக் கேட்டிருந்தார்கள். அதை அமைப்பதற்கானநடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.              

          பிற்பகல் 3-50

தமிழ்நாட்டிற்கு  வருகைபுரியும்  சுற்றுலா  பயணிகளுக்கு தரமான      சேவைகளை வழங்குவதற்கு, “தமிழ்நாடுசுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலா பேருந்து இயக்குபவர்களுக்கான திட்டம் 2023″ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சுற்றுலாக் கொள்கை தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்படும்.    

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2022-ல் வழங்கப்பட்டன. இதில் சுற்றுலா செயல்பாட்டாளர்கள், விமான நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், வழிகாட்டிகள் போன்றபல்வேறு சுற்றுலா பங்களிப்பாளர்களை உள்ளடக்கிய 17 வெவ்வேறு பிரிவுகளில் 55 விருதுகள்வழங்கப்பட்டன.

ஆடம்பர வசதிகளுடன்கூடிய Cordelia Cruises என்ற சொகுசு கப்பல் சேவை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்களால் சென்னை துறைமுகத்திலிருந்து துவக்கி வைக்கப்பட்டது.  இந்நிகழ்வு தமிழ்நாடுசுற்றுலாத் துறைக்கு ஒரு முக்கிய மைல் கல்லாக அமைகிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா அவர்களால் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகம் 3-6-1971 அன்று நிறுவப்பட்டது, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான தங்குமிடவசதிகள், பல்வேறு தொகுப்பு சுற்றுலாக்கள், படகு குழாம்கள், பொருட்காட்சி மற்றும் திருவிழாக்கள்போன்றவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முக்கிய செயல்பாடுகளாகும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தற்போது 28 ஓட்டல்களை நேரடியாக நிர்வகித்து வருகிறது. ஓட்டல்தமிழ்நாடு திறந்தவெளி உணவகம் தீவுத்திடல், கடற்கரை ஓய்வு வளாகம் மாமல்லபுரம், ஓட்டல் தமிழ்நாடுமதுரை-2, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருச்சி, ராணிப்பேட்டை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில்உள்ள ஓட்டல் தமிழ்நாடு 2022-2023 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு தரமுயர்த்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உணவகங்களில் உணவு விற்பனையை மேம்படுத்துவதற்காக மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படியேஅமுதகம்என்ற பெயரில் வணிக பெயர்உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 35 உணவகங்கள்அமுதகம்என்ற பெயரில் இயங்கி வருகின்றன.

வண்டலூர், கோவளம், ஏற்காடு மற்றும் வாலாங்குளம் ஏரி ஆகிய சுற்றுலாத் தலங்களில்குயிக் பைட்ஸ்என்றவணிக பெயரில் துரித உணவகங்கள்மூலம் மார்ச் 2023 வரை ரூ.56.59 இலட்சம் வருவாய் ஈட்டியுள்ளன

    ஆலயம் என்ற பெயரில் இராமேஸ்வரம், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பக்தர்கள் தங்கும்மூன்று விடுதிகளை 50:50 என்ற இலாப பகிர்வு அடிப்படையில் இந்து சமய அறநிலையங்கள் துறையுடன்இணைந்து நடத்தி வருகின்றது. 2022-2023 ஆம் ஆண்டில் ஆலயம் விடுதிகள்மூலம் ரூ.291.54 இலட்சம்வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்மூலம் முட்டுக்காடு, முதலியார்குப்பம், உதகமண்டலம், பைகாரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம், வாலாங்குளம் ஆகிய 9 இடங்களிலும் சாகச படகு சவாரிமற்றும் நீர் விளையாட்டுகளுடன்கூடிய படகு குழாம் இயக்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 2022-2023 ஆம் ஆண்டில், முட்டுக்காடு படகு குழாம்மூலம்ரூ.485.82 இலட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. முதலியார்குப்பம் படகு குழாம்மூலம் ரூ.117.20 இலட்சம்வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. உதகமண்டலம் படகு குழாம் மூலம்  ரூ.1375.95 இலட்சம் வருவாய்ஈட்டப்பட்டுள்ளது. பைக்காரா படகு குழாம் மூலம் ரூ.390.00 இலட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கொடைக்கானல் படகு குழாம்மூலம் ரூ.452.98 இலட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஏற்காடு படகுகுழாம்மூலம் ரூ.364.17 இலட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பிச்சாவரம் படகு குழாம்மூலம்  ரூ.466.87 லட்சம்வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய படகு இல்லம் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 24.08.2022 அன்று கோயம்புத்தூர் வாலாங்குளம் ஏரியில் திறக்கப்பட்டது. 2022-2023 ஆண்டு இதன்மூலம் ரூ.29.85 இலட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

தொட்டபெட்டா, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு ஆகிய  மலை வாசஸ்தலங்களிலும் தொலைநோக்கிஇல்லங்கள் இயங்கி வருகின்றன. 2022-2023 ஆம் ஆண்டு இவைமூலம் ரூ.299.55 இலட்சம் வருவாய்ஈட்டப்பட்டுள்ளது.

பிற்பகல் 3-55

டென்மார்க் சுற்றுசூழல் கல்விக்கான அறக்கட்டளையின்மூலம், நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கோவளம்கடற்கரை தமிழ்நாட்டின் முதல் மற்றும் இந்தியாவில் 9 ஆவது நீலக்கொடி கடற்கரை என்ற பெருமையைப்பெற்றுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் நீலக்கொடி கடற்கரையின் பராமரிப்பு மற்றும்செயல்பாடுகளை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொண்டு வருகிறது.

2022-2023 ஆம் ஆண்டு கோவளம் நீலக்கொடி கடற்கரைமூலம் ரூ.178.98 இலட்சம் வருவாய்ஈட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சொந்தமாக 14 சொகுசுப் பேருந்துகளை இயக்கிவருகிறது. இவற்றின் எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஒருநாள் திருப்பதி சுற்றுலா, 3 நாட்கள் நவக்கிரக சுற்றுலா, 8 நாட்கள் தமிழ்நாடு சுற்றுலா மற்றும்8 நாட்கள் கிழக்குமேற்கு கடற்கரைச் சுற்றுலா ஆகியவை மிகவும் புகழ்பெற்றவை.

பொதுமக்களின் அமோக வரவேற்பினை பெற்ற சென்னைதிருப்பதி ஒருநாள் தினசரி சுற்றுலாவைஇணையவழி முன்பதிவுமூலம் பதிவு செய்து, திருமலை திருப்பதி தேவஸ்தான கணினியுடன் இணைக்கப்பட்டு, விரைவாக தரிசனம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. (குறுக்கீடு) இதோ முடித்துவிடுகிறேன்.

தற்போது தினசரி 1,000 விரைவு தரிசன சீட்டுகளைப் பெற்று சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், ஓசூர் மற்றும் கடலூரில் இருந்து தினசரி இச்சுற்றுலாவை இயங்கி வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 33 திருக்கோயில்களிலும் உடனடி சிறப்புதரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2022-2023 ஆம் ஆண்டில் ஆடி மாதம் அம்மன் மற்றும் புரட்டாசிமாதம் பெருமாள் சிறப்பு தரிசன சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தேவாலய சுற்றுலாஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜைன சமய தொடர்புடைய இடங்கள் அதிகம் உள்ளன. இவற்றை பிரபலப்படுத்தி, சுற்றுலாப்பயணிகள் வருகையை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன்முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம், உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகள், மாமல்லபுரம் மரகதப் பூங்காவில்ஒளிரும் பூங்கா ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை ஆகிய சுற்றுலாத் தலங்களில் கம்பி வட ஊர்தி நிறுவுவதற்கும், சென்னையில்எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்என்ற பேருந்து வசதியினை அறிமுகப்படுத்துவதற்கும், தமிழ்நாட்டிலுள்ள ஐந்து திருக்கோவில்களை laser ஒளிக்கற்றை மூலம் மிளிரும் வகையில் அமைப்பதற்கானவிரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளன.  

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சென்னை தீவுத்திடலில் 1974 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர்முதல் மார்ச் வரை 70 நாட்களுக்கு இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை நடத்தி வருகிறது. அந்தக் காலகட்டத்தில் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவாறு இத்திட்டத்தை வடிவமைத்து வழங்கியவர்முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அய்யா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 47-வது இந்தியசுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி மாதம் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 23 ஆம் தேதி வரைசுற்றுலா மறுசிந்தனைஎன்ற கருப்பொருளை மையமாக வைத்து வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.  

பொருட்காட்சியில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை உள்பட 51 அரசுத் துறைகளின் அரங்குகள் இடம்பெற்றிருந்தன. இதன்மூலம் பல்வேறு அரசின் திட்டங்களைப் பற்றி பொதுமக்கள் பார்த்து தெரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. இந்தாண்டு பொருட்காட்சியை சுமார் 15 இலட்சம்பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகுக்கு தெரியப்படுத்தும்விதமாக, கலைபண்பாட்டுத் துறையுடன் இணைந்து, “நம்ம ஊரு திருவிழாஎனும் வருடாந்திர கலைவிழா சென்னையில்நடத்தப்பட்டது. இந்த திருவிழாவில் 40-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கலை வடிவங்களில்500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். இந்த நிகழ்வு சென்னையில்தீவுத்திடல் உள்பட 18 இடங்களில் நடைபெற்றது. இந்த விழாவில்  பார்வையாளர்கள் நமது தமிழ்நாட்டின்பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் உணவுஅரங்குகள் அமைத்து சிறப்பாக நடத்தியது.

Hotels மற்றும் சுற்றுலாக்களை இணையவழி உடன்நிகழ் முன்பதிவு (Online Real Time Reservation) செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், Channel Manager-நியமித்து பிரபலமான ஆன்லைன் பயண திரட்டிகள் (OTAs) இணைய தளங்களான Makemytrip, Goibibo, Booking.com மற்றும் இதர OTA-க்களில் தமிழ்நாடு ஓட்டல்களின் அறைகளை முன்பதிவு செய்ய வழிவகைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிற்பகல் 4-00

இதன்மூலம் 5,096 முன்பதிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு, ஏப்ரல் 2022 முதல் பிப்ரவரி 2023 வரையிலானகாலக்கட்டத்தில் ரூபாய் ஒரு கோடியே 85 இலட்சம் வருவாயையும் ஈட்டியுள்ளது.

அனைத்து ஓட்டல்களிலும், QR குறியீடுகளை பயன்படுத்தி பின்னூட்ட செயல்முறை (Feedback mechanism) அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழ்நாட்டைப் பற்றிய பயணம் மற்றும்சுற்றுலாத் தொடர்பான தகவல்களை தொலைபேசி (1800 4253 1111) மூலம் 24 மணி நேரமும்வழங்குவதற்காக பிரத்யேகமான அடிப்படையில் சுற்றுலா தகவல் உதவி (Helpline) சேவையைஅறிமுகப்படுத்தியுள்ளது.

தீவுத்திடலில் உள்ள டிரைவ்இன் உணவகமானது ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் டிரைவ்இன் திரையரங்கம், பார்பிக்யூ நிலையம் மற்றும் தேநீர் விடுதி போன்ற பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு 4-1-2023 அன்றுமுதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வணிகங்களை அதிகப்படுத்தும் வகையில் வணிகத்துடன் வணிகம்என்ற புதிய திட்டம் 2022 ஆம்  ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்ஓட்டல்கள் மற்றும் சுற்றுலாக்களின் வருவாயை உயர்த்த வெளி மாநிலங்களை சேர்ந்த முன்னணி பயணஏற்பாட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் சுமார் 597-க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் அடையாளம்காணப்பட்டுள்ளன. இத்தகைய சுற்றுலாத் தலங்களை எதிர்காலத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்கவனத்திற்கு எடுத்துச் சென்று நிதி ஆதாரத்தைப் பெற்று மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைதெரிவித்துக்கொள்கிறேன்.  

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திராவிடக் கோட்பாட்டின் செயல்பாடுகளைத் தொகுத்து, ‘திராவிடமாடல்என புதிய விடியலை வழங்கி மகிழும் தானைத் தளபதியின் வாக்குகளும், வழிகாட்டுதல்களும் சுற்றுலாத்துறைக்கு மிக சுபிட்சத்தை வழங்கி வருகின்றன.

கோட்டையில் தீட்டிய தளபதியாரின் திட்டங்களைப் பட்டி தொட்டி எங்கும் பரப்பும் வகையில் சுற்றுப் பயணம்நிகழ்த்திவரும் சின்னவரை மக்கள் என்னவர் என்றே போற்றுகின்றனர். தனித்து நின்று, துணிந்து சென்றுடில்லிக் களத்தைக் கலக்கி இந்தியத் தலைவர்களின் விழிகளை வியப்பால் விரிய வைத்த செயல் சிட்டுசின்னவரின் சுறுசுறுப்பைக் கண்டு வீர நடை போடுகிறோம். அத்தகு செம்மாந்த செயல்பாடுகளின்எழுத்துருவையே மானியக் கோரிக்கையாக்கி பேரவையின்முன் பணிவன்போடு சமர்ப்பணம் செய்துமுடிக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

அதாவது, இன்றைக்கு மாண்புமிகு உறுப்பினர்கள் மொத்தம் 10 பேர் பேசியிருக்கிறார்கள். ஓரளவு என்னுடையஉரையிலேயும், என்னுடைய அறிவிப்பிலேயும் அவர்கள் கேட்டதற்கெல்லாம் பதில் வந்துவிடும். (குறுக்கீடு) அவர்கள் வெளியே சென்றுவிட்டார்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அறிவிப்புகள் சொல்ல வேண்டியிருக்கிறது.

மாண்புமிகு திரு. கா. ராமச்சந்திரன்: இந்த வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு பேரவைத் தலைவர்அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துறையின் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கி உதவிசெய்த அரசு தலைமைச் செயலாளர் அவர்களுக்கும், மாண்புமிகு முதலமைச்சரின் செயலாளர்களுக்கும், நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் திரு. முருகானந்தம், ..., அவர்களுக்கும், சுற்றுலாப் பண்பாடுமற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைவர்டாக்டர் சந்தரமோகன், ..., அவர்களுக்கும், சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமேலாண்மை இயக்குநர், திரு. சந்தீப் நந்தூரி, ..., அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) சுற்றுலாத் துறையின் அதிகாரிகள் மற்றும் அனைத்துபணியாளர்களுக்கும், இந்த வாய்ப்பினை வழங்கிய நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிமக்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து முடிக்கிறேன். நன்றி, வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு அமைச்சர், அறிவிப்புகளைச் சொல்லுங்கள்.

மாண்புமிகு திரு. கா. ராமச்சந்திரன்: எனது துறையின்மூலம் 22 அறிவிப்புகள் இருக்கின்றன. அவற்றின்தலைப்புகளை மட்டும் நான் படிக்கிறேன். மீதியை நான் படித்ததாகக் கருதி அவற்றை அவைக் குறிப்பில் பதிவுசெய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். முதல் அறிவிப்பு.

பிற்பகல் 4-05

அறிவிப்புகள்

1. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி பல்வேறு சுற்றுலா வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில்மேம்படுத்தப்படும்.

Dhanushkodi at Ramanathapuram District will be developed with various tourist amenities at a cost of Rs.5 crores.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் வங்கக்கடலும், இந்தியபெருங்கடலும் கூடும் இடமாகிய தனுஷ்கோடி பகுதிக்கு அதிகளவில் செல்கின்றனர். இங்கு வருகை புரியும்சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பாரம்பரிய கட்டடங்களை புனரமைத்தல் மற்றும் பாதுகாத்தல், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு, பார்வையாளர் மாடம், நுழைவு வளாகம், வாகன நிறுத்துமிடம், நடைபாதை, இருக்கைகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், சூரிய ஒளிசக்தி மின்விளக்கு வசதிகள் ஆகியபல்வேறு வசதிகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

2. ஏற்காடு நிலச்சீரமைப்பு, காட்சிமுனை, உள்கட்டமைப்பு மற்றும் பிற சுற்றுலா வசதிகளுடன் ரூ.10 கோடிமதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

Yercaud will be developed with aesthetic landscaping, View points, Lake Front, street scaping and tourist amenities at a cost of Rs.10 crores.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு, சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இவ்விடத்தில்சுற்றுலாவை மேம்படுத்த, ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான எமரால்டு ஏரிப்பகுதி மேம்பாடு, பார்வையாளர் மாடம், ஒலிஒளிக் காட்சி, நடைபாதைகள், பறவைகளை காண்பதற்கான காட்சிமுனைகள், நிலச்சீரமைப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற பணிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

3. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கலாச்சார பாரம்பரிய நகரான தரங்கம்பாடியில், பல்வேறு சுற்றுலாவசதிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

Tharangambadi in Mayiladuthurai District will be developed as a heritage town, by providing necessary tourist amenities at a cost of Rs.3 crores.

டேனிஷ் வர்த்தக நிலையமாக விளங்கிய தரங்கம்பாடி ஒரு கடற்கரை நகரமாகும். இங்கு அமைந்துள்ளடேனிஷ்கோட்டை 1620 ஆம் ஆண்டு டேனிஷ் கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டு கட்டப்பட்டது. டேனிஷ் கலாச்சார பாரம்பரிய நகரான தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை வளாகம் மற்றும் பழமையானகட்டடங்களின் மேம்பாடு, அடிப்படை வசதிகள், நடைபாதை மற்றும் மிதிவண்டி பாதை, கடற்கரைப் பகுதிமேம்பாடு, வாகன நிறுத்துமிடம், வழிகாட்டிப் பலகைகள் போன்ற சுற்றுலா அடிப்படை வசதிகள் ரூ.3 கோடிமதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

4. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு புதிய காட்சிமுனைகள் அமைத்தல் மற்றும்தற்போதைய காட்சிமுனைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் ரூ.10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

New viewpoints will be setup and existing viewpoints will be upgraded across important destinations in Tamil Nadu at a total cost of Rs.10 crores.

தமிழ்நாட்டில் இயற்கை அழகினை கண்டுகளிக்கவும், இனிமையான சுற்றுலா நினைவுகளை பெறுவதற்கும்பல்வேறு இடங்களில் காட்சிமுனைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சுற்றுலாத் தலங்களில் காட்சிமுனைவசதிகள் ஏற்படுத்தும் வகையில் புதிய தலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே அமைக்கப்பட்டகாட்சிமுனைகளை மேம்படுத்தவும், புதிய காட்சிமுனைகள் உருவாக்கவும், அவ்விடங்களில் வாகனநிறுத்துமிடம், பார்வையாளர் மாடம், அமரும் இருக்கைகள், நிழற்குடைகள், தகவல் பலகைகள் மற்றும்அடிப்படை வசதிகள் ரூ.10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

5. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பழங்கால சமணத் தலங்களில் ஒன்றான சித்தன்னவாசல், ரூ.4 கோடிசெலவில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

Sittanavasal, one of the important ancient Jain Centers in Tamil Nadu will be developed as a tourist attraction with various amenities, at a cost of Rs.4 crores.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சித்தன்னவாசல் தனிச்சிறப்பு மிக்க குடைவரை ஓவியங்கள்மற்றும் குகை ஓவியங்களுக்கு புகழ்பெற்றதாகும். ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சமணர் கோயில், அற்புதமான சுவரோவியங்கள்,  17 சமணர் படுகைகள் சித்தன்னவாசலில் உள்ளன. உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், இங்கு அடிப்படை வசதிகள், நிலச்சீரமைப்பு, நடைபாதை, சமண கலைக்கூடம், வழிகாட்டிப் பலகைகள், வாகன நிறுத்துமிடம் போன்றசுற்றுலா அடிப்படை வசதிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

6. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப் பாலம் பல்வேறு சுற்றுலா வசதிகளுடன் ரூ.3 கோடிமதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

Mathoor Aqueduct in Kanniyakumari District will be developed with various tourist amenities at a cost of Rs.3 crores.

மாத்தூர் பகுதியில் உள்ள கணியான்பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும்இணைக்கும் வகையில் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக தெற்காசியாவிலேயே மிக உயரமான மாத்தூர்தொட்டிப்பாலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையானவசதிகள் ஏற்படுத்தும் வகையில், காட்சிமுனை, அடிப்படை வசதிகள், நிலச்சீரமைப்பு, மின்விளக்கு வசதிகள், திடக்கழிவு மேலாண்மை, பூங்கா மேம்படுத்துதல் போன்ற பணிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில்மேற்கொள்ளப்படும்.

7. இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் வழிகாட்டிச்சுற்றுலாக்கள் (Guided Tours) நடத்தப்படும்.

Guided Tours will be organized in major temples of Tamil Nadu in association with the Hindu Religious Charitable Endowments Department.

தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருவரங்கம்ரெங்கநாதர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள்கோயில், கன்னியாகுமரி சுசீந்திரம் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆகிய பிரசித்தி பெற்றகோயில்களின் வரலாறு மற்றும் கோயில்களின் உட்புறத்தில் சிறப்புமிக்க முக்கிய இடங்கள் குறித்த வரலாற்றுதகவல்களை சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கும் வகையிலும், சிறந்த பயண அனுபவங்களை வழங்கும்வகையிலும், பயிற்சி பெற்ற சுற்றுலா வழிகாட்டிகள் வாயிலாக, இந்து சமய அறநிலையத் துறையுடன்இணைந்து வழிகாட்டிச் சுற்றுலாக்கள் (Guided Tour) தொடங்கப்படும். 

8. தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் ஆரோக்கியச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, பல்வேறுபங்குதாரர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச மருத்துவச் சுற்றுலா மாநாடு சென்னையில்நடத்தப்படும்.

To promote medical and wellness tourism, annual Tamil Nadu Medical Value Travel Summit will be conducted in Chennai in collaboration with various stakeholders.

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலாப் பிரிவில் மருத்துவ சுற்றுலாவும் ஒன்றாகும். தமிழ்நாட்டில்அமைந்துள்ள பல்நோக்கு மற்றும் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள், மருத்துவ சுற்றுலாவிற்கான தலமாகவளர்வதற்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன. மருத்துவச் சுற்றுலாவிற்கான சிறந்த தலமாகதமிழ்நாட்டினை அடையாளப்படுத்த மருத்துவத் துறையில் தொழில் முனைவோர்களுடன் இணைந்து சர்வதேசமருத்துவச் சுற்றுலா மாநாடு சென்னையில் நடத்தப்படும். இம்மாநாடு உடல்நலம் பேணும் வல்லுநர்களைஒருங்கிணைக்கும் வகையில் கண்காட்சி அரங்கங்கள், கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நடத்தவும் ஒருசிறந்த தளமாக அமையும். 

9. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமான அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம்கோயில் நுழைவு வளாகம், வாகன நிறுத்துமிடம், வழிகாட்டுப் பலகை, மின் வாகனங்கள் மற்றும் பிற வசதிகள்ரூ.5 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

Gangaikonda Cholapuram Temple in Ariyalur District, an UNESCO world heritage site will be developed with various tourist amenities like Entry plaza, parking, Signages, E-vehicles and other facilities at a cost of Rs.5 crores.

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமான அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திற்குவருகைபுரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும்வகையில், நுழைவு வளாகம், வாகன நிறுத்துமிடம், வழிகாட்டுப் பலகைகள், மின் வாகனங்கள் வாங்குதல்மற்றும் பிற வசதிகள் ரூ.5 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

10. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை சாகசச் சுற்றுலா வசதிகள், பல்லுயிர் பூங்காமற்றும் இதர வசதிகளுடன் சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

Manimutharu Dam in Tirunelveli District will be developed as an Eco- tourism destination with adventure tourism activities, Bio-diversity Park and other amenities at a cost of Rs.5 crores.

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் மணிமுத்தாறு அணையைபார்வையிடுவதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக, சாகசச் சுற்றுலா, பல்லுயிர் பூங்கா மற்றும் இதர வசதிகளுடன் சுற்றுச்சூழல்சுற்றுலாத் தலமாக மணிமுத்தாறு அணை ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

11. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டல ஏரிப் பகுதியில், பார்வையாளர் மாடம், நடைபாதைகள், இருக்கைகள், மின்விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு வசதிகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில்ஏற்படுத்தப்படும்.

Udhagamandalam Lake waterfront in Nilgiri District will be upgraded with various amenities such as viewing decks, walkways, benches, installation of lights and other facilities at a cost of Rs.5 crores.

1824 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உதகை ஏரிக்கு, வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கைஅழகினைக் கண்டு ரசிக்கும் வகையில் பார்வையாளர் மாடம், நடைபாதைகள் மற்றும் இருக்கைகள், ஏரியின்அழகினை இரவிலும் கண்டு ரசிக்க மின்விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு வசதிகள் ரூ.5 கோடிமதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

12. முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள 30 ஏக்கர் தீவுப் பகுதியை, கடற்கரைச் சுற்றுலாத் தலமாகமேம்படுத்தும் வகையில் சாகச விளையாட்டுகள், நடைபாதைகள், பறவைகளை பார்வையிடுவதற்கு மாடம்மற்றும் இதர வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில்ஏற்படுத்தப்படும்.

TTDC will develop the 30-acre island area located at Muttukadu as a coastal tourism destination with various entertainment activities like Adventure sports, board walks, Bird watching decks and other amenities at a cost of Rs.5 crores.

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுகாட்டில் பக்கிங்ஹாம் கால்வாய் கடலுடன் இணையும் பகுதியில் அமைந்துள்ள30 ஏக்கர் பரப்பிலான தீவுப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் செல்லவும், இத்தலத்தினைகடற்கரைச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் வகையில் சாகச விளையாட்டுகள், நடைபாதைகள், பறவைகளை பார்வையிடுவதற்கு மாடம் மற்றும் இதர வசதிகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

13. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள அரித்ரா நதி கோயில் குளம், படகு இல்லம் மற்றும் பிறவசதிகளுடன் சுற்றுலாத் தலமாக ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

Haridhranadhi Temple tank in Mannarkudi, Thiruvaruar District will be developed as a tourist destination with attractions like Boating and other amenities at a cost of Rs.50 lakhs.

இந்தியாவில் உள்ள கோயில் தெப்பக்குளங்களில் பெரிய தெப்பக்குளமாகக் கருதப்படும் மன்னார்குடி, அரித்ரா நதி கோயில் தெப்பக்குளத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் படகில் பயணித்தவண்ணம்கோயிலின் அழகினை ரசிக்கும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளுக்கு இனிமையான அனுபவங்களைவழங்கும் வகையிலும் அரித்ரா நதி தெப்பக்குளத்தில் அடிப்படை வசதிகளுடன் படகு இல்லம் ரூ.50 இலட்சம்மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

14. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெரிய ஏரி படகு இல்லம் மற்றும் பிற வசதிகளுடன் சுற்றுலாத் தலமாக ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

Anthiyur Periya Lake in Erode District will be developed as a tourist destination with a boat house and other infrastructure amenities at a cost of Rs.50 lakhs.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெரிய ஏரிக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் படகில் பயணித்த வண்ணம்இயற்கை அழகினை ரசிக்க, இனிமையான அனுபவங்களை வழங்கும் வகையில் இங்கு வருகை புரியும்சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் படகு இல்லம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில்தொடங்கப்படும்.

15. செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மாமல்லபுரம் கடற்கரை ஓய்வுவளாகத்தில் MICE சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன மாநாட்டுஅரங்கம் (Convention Centre) கட்டப்படும்.

To promote ECR as a MICE destination, a state-of-the-art convention centre will be constructed at TTDC Beach Resort Complex, Mamallapuram at a cost of Rs.20 crores.

யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை ஓய்வு வளாகத்தில் (TTDC Beach Resort Complex, Mamallapuram) MICEசுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், மாநாடுகள், வர்த்தகக்கண்காட்சிகள் நடத்திடும் வகையில் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அதிநவீனமாநாட்டு அரங்கம் (Convention Centre) ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

16. மதுரையில் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு அலகு 2-இல் கூடுதல் விருந்து மண்டபங்கள் (Banquet Halls) ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

A new Block will be constructed at Hotel Tamil Nadu, Unit-2 at Madurai with Banquet Halls, Modern Kitchen, Dining Halls and other infrastructure facilities at an estimated cost of Rs.7 crores.

தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஓட்டல் தமிழ்நாடு அலகு2ற்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் வருவாய் ஈட்டும் நோக்கோடும் நவீனவசதிகளுடன் கூடிய நிகழ்விடங்கள், உணவறைகள், சமையலறை மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளுடன்கூடுதல் கட்டடம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

17. இராமேஸ்வரத்தில் உள்ள ஓட்டல் தமிழ்நாட்டில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.

A new hotel block will be constructed at Hotel Tamil Nadu, Rameswaram with necessary infrastructure and modern amenities at an estimated cost of Rs.7 crores.

இராமேஸ்வரத்தில் உள்ள ஓட்டல் தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள்ஏற்படுத்தும் வகையில் வரவேற்பு அறை, விருந்தினர் அறைகள் மற்றும் நவீன வசதிகள் ரூ.7 கோடிமதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

18. திருப்பதி சுற்றுலா மற்றும் பிற சுற்றுலாக்களை இயக்குவதற்கு ஏற்படும் கூடுதல் தேவைகளை பூர்த்திசெய்ய ரூ.2.80 கோடி செலவில் 43 இருக்கைகளுடன் கூடிய இரண்டு குளிர்சாதன Volvo பேருந்துகள்வாங்கப்படும்.

TTDC will purchase two 43 seater Volvo A/c buses at a cost of Rs.2.80 crores to cater to the additional demand generated through Tirupathi tours and other package tours.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் சென்னையிலிருந்து இயக்கப்பட்டு வரும் ஒரு நாள் திருப்பதிசுற்றுலா மற்றும் பிற சுற்றுலாக்களை இயக்குவதற்கு ஏற்படும் கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்ய 43இருக்கைகளுடன் கூடிய இரண்டு புதிய குளிர்சாதன Volvo பேருந்துகள் ரூ.2.80 கோடி செலவில்வாங்கப்படும்.

19. ஏற்காட்டில் உள்ள எமரால்டு ஏரியில் 3D projection mapping தொழில்நுட்பத்துடன் கூடிய நீர் சார்ந்தஒலி, ஒளி காட்சி பொதுதனியார் பங்களிப்பில் (PPP) அமைக்கப்படும்.

Water based sound and light show with 3D projection mapping technology will be setup in Emerald lake, Yercaud through Public-Private Partnership (PPP) mode.

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரில் கோடை வாசஸ்தலமான ஏற்காடுஅமைந்துள்ளது. இங்குள்ள எமரால்டு ஏரிக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய சுற்றுலாஅனுபவங்களை வழங்கும் வகையில் 3D projection mapping தொழில்நுட்பத்துடன் கூடிய நீர் சார்ந்த ஒலி, ஒளிக் காட்சி பொதுதனியார் பங்களிப்பில் (PPP) அமைக்கப்படும்.

20. நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதி, தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து சாகச விளையாட்டுகள், பார்வையாளர் மாடம் மற்றும் மலர் பூங்கா போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

Devala in Nilgiri District will be developed as a tourist destination with various attractions like adventure sports, Viewing decks and flower garden in association with Horticulture Department at a cost of Rs.3 crores.

உதகமண்டலத்தின் கூடலூர் பகுதியின் இயற்கை அழகினை கண்டு ரசிக்கவும், புதிய பயண அனுபவங்களைசுற்றுலாப் பயணிகள் பெறும் வகையிலும் தேவாலா பகுதி, சாகச விளையாட்டுகள், பார்வையாளர் மாடம்(viewing deck) மற்றும் மலர் பூங்கா போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாகதோட்டக்கலைத் துறையுடன் இணைந்து ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

21. ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள படகு இல்லங்களில் மிதவைஉணவகங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு ரூ.15 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

Feasibility study will be conducted to establish floating restaurants at lakes in Yercaud, Kodaikanal, Ooty and Coimbatore at a cost of Rs.15 lakhs.

முட்டுக்காடு படகு இல்லத்தில் பொதுதனியார் பங்களிப்புடன் மிதக்கும் உணவகம் அமைக்கும் பணிமேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி, கோயம்புத்தூர்வாலாங்குளம் ஆகிய படகுகுழாம்களுக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் வகையில்மிதவை உணவகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு ரூ.15 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

22. கன்னியாகுமரியை சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை ரூ.1 கோடிமதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

A detailed Project report will be prepared to develop Kanniyakumari as an Eco-tourism destination at a cost of Rs.1 crore.

இந்தியாவின் தென்கோடியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் இயற்கைஎழில் கொஞ்சும் அருவிகள், நிலப்பரப்புகள், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்வையிடல், கடலின்நடுவே திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட 133 அடி சிலை, காந்தி மண்டபம், விவேகானந்தர் நினைவுமண்டபம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம் மற்றும் பல்வேறு சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்கள்அமைந்துள்ளன. இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் தங்கும் கால அளவினைஅதிகரிக்கும் வகையில் சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை ரூ.1 கோடிமதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

மாலை 4-10

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாமன்ற உறுப்பினர்கள் 110 வெட்டுத் தீர்மானங்களைகொடுத்துள்ளார்கள். அனைத்து வெட்டுத் தீர்மானங்களையும் படித்து பார்த்தேன். வெட்டுத் தீர்மானங்கள்அனைத்திற்கும் கொள்கை விளக்கக் குறிப்பிலும், எனது பதிலுரையிலும் எனது விரிவான விளக்கங்களைஅளித்துள்ளேன் என்று நம்புகிறேன். இன்னும் செய்ய வேண்டிய வேலைகளைத் தொடர்ந்து இந்த ஆண்டுசெய்வதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வேனென்று கூறிக்கொண்டு, சுற்றுலாத் துறையின்மீதுஅளிக்கப்பட்ட வெட்டுத் தீர்மானங்களையெல்லாம் திரும்ப பெற்றுக்கொண்டு, சுற்றுலாத் துறை மானியக்கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.