டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இவ்வறிவிப்பு நிகழ்வில் நடிகர் நானி, இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா, நடிகைகள் பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.*********
நடிகர் நானி பேசுகையில், ” ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வருகை தரும் போதெல்லாம் தமிழ் மக்களின் அன்பை வியந்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவை நான் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன். இங்கு மணி சார் ..ஷங்கர் சார்.. பாரதிராஜா சார்.. என ஏராளமான ஆளுமைகள் இருக்கிறார்கள். நான் நடித்த படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்து படத்தைப் பற்றி பேசும் தமிழ் மக்களின் கருத்துக்களை நான் யூடியூபில் பார்த்து தெரிந்து கொள்வேன். குறிப்பாக படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் ரியாக்ஷனை கவனிப்பேன். சென்னை விமான நிலையத்திற்கு வரும் போதெல்லாம் அங்கு ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு என்னை பிரமிக்க வைக்கும். என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதாகட்டும்.. நலம் விசாரிப்பதாகட்டும்.. அவர்கள் காட்டும் அன்பு சிறப்பானது. தொடர்ந்து என் மீது பாசத்துடன் இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ ஸ்பெஷலான திரைப்படம். பொதுவாக இந்த கால ரசிகர்களுக்கு ஆக்சன் படம் என்றால் பிரம்மாண்டமானதாகவும் தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கவேண்டும் . அந்த பாணியில் ஏராளமாக படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் தமிழ் படங்களில் இருப்பது போல் எளிமையான ஆக்சன் படங்களை இந்த கால ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். அந்த வகையில் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ எளிமையான ஆக்சன் என்டர்டெய்னர். இயக்குநர் விவேக் ஆத்ரேயா- தமிழ் மக்களின் உணர்வு… தெலுங்கு மக்களின் உணர்வு … என பாகுபாடு பார்க்காமல் பொதுவாக அனைத்து தரப்பு மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவருடைய திரை மொழி தனித்துவமானது. அனைவருக்குமானது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது என்னுடைய நம்பிக்கை.
இந்தப் படத்தை பொருத்தவரை நான் செகண்ட் ஹீரோ தான். எஸ் ஜே சூர்யா தான் ஹீரோ. இந்தப் படத்தின் டைட்டில் எஸ் ஜே சூர்யாவுக்கு தான் பொருத்தமானது. என்னைப் பொறுத்தவரை இது எஸ் ஜே சூர்யாவின் சாட்டர்டே. அவர் திரையில் தோன்றும் போது வழங்கும் உத்வேகம் அலாதியானது. படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய உற்சாகம் அனைவருக்கும் பரவும். இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதற்காகவும், நடித்ததற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் நடித்த போது சில விசயங்களை கற்றுக் கொண்டேன். பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கு இறைவன் நவரச பாவங்களையும் வெளிப்படுத்தும் முக அமைப்பை கொடுத்திருக்கிறார். அவருடைய சிறிய கண் அசைவே ஏராளமான விசயங்களை சொல்லி விடும். அந்த அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அவர்தான் நேச்சுரல் ஸ்டார். அவருடைய ரியாக்ஷன் நேச்சுரலாக இருக்கும். அவருடன் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. அவர் இந்தப் படத்தில் ஏற்று நடித்திருக்கும் சாருலதா எனும் கதாபாத்திரம் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.
அதிதி பாலன்- பத்ரா எனும் கதாபாத்திரத்தில் என்னுடைய சகோதரியாக நடித்திருக்கிறார். அவர் தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது படம் இது. அவருடனும் இணைந்து நடித்ததற்காக பெருமிதம் அடைகிறேன். இந்தப் படத்தில் நான் -அதிதி பாலன்- பிரியங்கா மோகன் -அபிராமி -சாய்குமார் – குடும்பமாக நடித்திருக்கிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் அவருக்கு ஏராளமான சிக்கல்கள் இருந்தாலும் சிரித்தபடியே நடித்துக் கொடுத்தார். அபிராமி – கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்த தருணத்திலிருந்து நான் அவருடைய ரசிகன். அந்தப் படத்தில் அவருடைய அற்புதமான நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட முக்கியமான காட்சியில் அவருடைய நடிப்பு பிரமாதமாக இருந்தது. இதை ரசிகர்களும் திரையில் பார்த்து பாராட்டினை தெரிவிப்பார்கள். சூர்யா சாட்டர்டே தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் கண்டு ரசித்து விட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகம் முழுவதும் படத்தை வெளியிடுவம் விநியோகஸ்தர் சுப்பையாவிற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.